தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் நுழைய தடை..!


தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் நுழைய தடை..!
x
தினத்தந்தி 6 Jan 2022 9:50 PM GMT (Updated: 6 Jan 2022 9:50 PM GMT)

தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

மெல்போர்ன்,

‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் மெல்போர்ன் விமான நிலைத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது விசா ரத்து செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 17-ந்தேதி மெல்போர்னில் தொடங்கி 2 வாரங்கள் நடக்கிறது. இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறுவோருக்கு கோப்பையுடன் ரூ.23 கோடி பரிசுத்தொகையும் கிடைக்கும்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் அதற்கு தகுதியான மருத்துவ காரணங்கள் இருக்க வேண்டும். அது குறித்து போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டியின் சிறப்பு குழுவினர் ஆராய்ந்து விதிவிலக்கு அளிப்பது குறித்து முடிவு செய்வார்கள்.

உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபனை வென்ற சாதனையாளருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இந்த போட்டியில் பங்கேற்பாரா? மாட்டாரா ? என்பது கடந்த 2 மாதங்களாவே டென்னிஸ் வட்டாரத்தில் பரபரப்பான விவாதங்களில் ஒன்றாக இருந்தது. ஏனெனில் 34 வயதான ஜோகோவிச் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். இத்தனைக்கும் அவரும் ஒரு முறை கொரோனா தாக்குதலுக்குள்ளானவர் தான். அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? இல்லையா? என்பதை இதுவரை வெளிப்படையாக சொன்னதில்லை. அது எனது தனிப்பட்ட விஷயம் என்று கூறி மழுப்புகிறார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள, தனக்கு சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்று ஜோகோவிச் வலியுறுத்தினார். நீண்ட பரிசீலனைக்கு பிறகு போட்டி அமைப்பு குழுவினரும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் தனக்கு மருத்துவ விதி விலக்கு கிடைத்திருப்பதாக கூறிய ஜோகோவிச், துபாய் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு உற்சாகமாக புறப்பட்டார். நேற்று முன்தினம் இரவு அவர் மெல்போர்ன் சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்குரிய முறையான மருத்துவ சான்றிதழ்களை அவர் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது. மருத்துவ விதிவிலக்குக்கு தேவையான ஆவணங்கள் இல்லாததால் ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படைஅதிகாரிகள் அவரது விசாவை தடாலடியாக ரத்து செய்து, நாட்டிற்குள் செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் பல மணி நேரம் அவர் விமான நிலையத்திலேயே பரிதவித்தார். பிறகு இந்த மாதிரி குடியுரிமை சோதனையில் சிக்குவோர் தங்கவைக்கப்படும் ஓட்டலுக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அவரை நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறுகையில், ‘ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டம் அனைவருக்கும் சமமே. நாட்டின் சட்டத்திற்கு மேலானோர் யாரும் கிடையாது. எல்லையில் பின்பற்றப்படும் வலுவான கொள்கையால் தான் ஆஸ்திரேலியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. கொரோனா தடுப்பு கண்காணிப்பு தொடர்ந்து தீவிரமாக இருக்கும்’ என்றார்.

ஆஸ்திரேலியாவில், ஜோகோவிச் அவமதிக்கப்பட்டதாக செர்பியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் வூசிச் ஜோகோவிச்சுடன் போனில் பேசிய பிறகு கூறுகையில், ‘ஒட்டுமொத்த செர்பியாவும் அவருக்கு துணை நிற்கிறது. உலகின் தலைச்சிறந்த ஒரு டென்னிஸ் வீரர் தரக்குறைவாக நடத்தப்பட்ட பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். சர்வதேச பொது சட்டத்துக்கு உட்பட்டு ஜோகோவிச்சுக்கு நீதி கிடைக்க செர்பியா முழுமையாக போராடும்’ என்றார்.

விமான நிலையத்திலேயே ஜோகோவிச் தடுத்து நிறுத்தப்பட்டது டென்னிஸ் வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையின் முடிவை எதிர்த்து ஜோகோவிச்சின் வழக்கறிஞர்கள் அங்குள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு விசாரணை வருகிற 10-ந்தேதி நடக்கிறது. அதன் முடிவில் அவர் உடனடியாக செர்பியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவாரா? அல்லது போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுமா? என்பது தெரிய வரும்.

Next Story