சர்வதேச டென்னிஸ்: இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி


சர்வதேச டென்னிஸ்: இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 8 Jan 2022 10:47 PM GMT (Updated: 8 Jan 2022 10:47 PM GMT)

சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரோகன் போபண்ணா-ராம்குமார் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அடிலெய்டு, 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்னோட்டமாக சர்வதேச டென்னிஸ் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போ பண்ணா-ராம்குமார் ஜோடி 6-2, 6-4 என்ற நேர்செட்டில் டாமிஸ்லாவ் பிர்கிச் (போஸ்னியா)-சான்டியாகோ கோன்ஸலேஸ் (மெக்சிகோ) இணை யை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா-ராம்குமார் கூட்டணி, இவான் டோடிச் (குரோஷியா)-மார்செலோ மிலோ (பிரேசில்) இணையை எதிர்கொள்கிறது.

இதன் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 29-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் கரென் கச்சனோவ் 7-6 (7-3), 6-3 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 

இன்னொரு அரைஇறுதியில் தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் 7-5, 6-0 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் தான்சி கோக்கினாகிஸ்சை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப்போட்டியில் கச்சனோவ்-மான்பில்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், 2 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 9-ம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக்கை (போலந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டி, கஜகஸ்தானின் எலினா ரைபாகினாவை சந்திக்கிறார். அவர் அரைஇறுதியில் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஜப்பானின் மிசாகி டோய்யை சாய்த்து இருந்தார்.


Next Story