டென்னிஸ்

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போபண்ணா-ராம்குமார் ஜோடி ‘சாம்பியன்’ + "||" + Adelaide International Tennis: Bopanna-Ramkumar duo 'champion'

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போபண்ணா-ராம்குமார் ஜோடி ‘சாம்பியன்’

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போபண்ணா-ராம்குமார் ஜோடி ‘சாம்பியன்’
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா- ராம்குமார் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அடிலெய்டு,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 17-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக சர்வதேச டென்னிஸ் போட்டி அடிலெய்டில் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ராம்குமார் ஜோடி போட்டித்தரநிலையில் முதலிடம் வகித்த இவான் டோடிக் (குரோஷியா)- மார்செலோ மிலோ (பிரேசில்) இணையை சந்தித்தது. 

1 மணி 21 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் போபண்ணா-ராம்குமார் கூட்டணி 7-6 (8-6), 6-1 என்ற நேர் செட்டில் டோடிக்- மிலோ ஜோடிக்கு அதிர்ச்சி அளித்து மகுடம் சூடியது. தங்களது 4 சர்வீஸ்களை எதிராளிகள் முறியடிக்கும் வாய்ப்புகளில் இருந்து தற்காத்துக் கொண்ட போபண்ணா-ராம்குமார் ஜோடி, அவர்களின் 2 சர்வீஸ்களை பிரேக் செய்து அசத்தியது. 

அனுபவம் வாய்ந்த போபண்ணா முக்கியமான தருணங்களில் சர்வீஸ்களை சூப்பராக திருப்பி அடித்த விதமும், ராம்குமாரின் சர்வீஸ் மற்றும் அதிரடியான ஷாட்டுகளும் வெற்றிக்கு வித்திட்டது.

போபண்ணா-ராம்குமார் ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் கைகோர்த்து இருப்பது இதுவே முதல் முறையாகும். போபண்ணாவுக்கு இது 20-வது இரட்டையர் பட்டமாகும். சென்னையைச் சேர்ந்த 27 வயதான ராம்குமாருக்கு இது முதலாவது சர்வதேச கோப்பையாகும். இவர்களுக்கு கூட்டாக ரூ.14 லட்சம் பரிசுத்தொகையும், தலா 250 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன. 

இந்த வெற்றி, இன்று தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் தகுதி சுற்றில் விளையாட இருக்கும் ராம்குமாருக்கு மிகுந்த நம்பிக்கையும், உத்வேகமும் அளிப்பதாக இருக்கும். தகுதி சுற்றில் ராம்குமார் தனது முதல் ரவுண்டில் இத்தாலியின் கியான் மோரோனியை எதிர்கொள்கிறார். யுகி பாம்ப்ரி, அங்கிதா ரெய்னா ஆகிய இந்தியர்களும் தகுதி சுற்றில் கால்பதிக்கிறார்கள்.

அடிலெய்டு டென்னிசின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் எலினா ரைபகினாவை (கஜகஸ்தான்) தோற்கடித்து கோப்பையை தட்டிச் சென்றார். அவருக்கு இது 14-வது சர்வதேச பட்டமாகும். இரட்டையர் பிரிவிலும் பட்டத்தை ருசித்த ஆஷ்லி பார்ட்டி சக நாட்டவர் ஸ்டோம் சான்டெர்சுடன் இணைந்து 6-1, 6-4 என்ற நேர் செட்டில் டாரிஜா ஜூராக் (குரோஷியா), ஆந்த்ரெஜா கிளெபக் (சுலோவெனியா) இணையை வீழ்த்தினார்.

மெல்போர்னில் நடந்த ‘சம்மர் செட்’ சர்வதேச டென்னிசில் கலந்து கொண்ட முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் 7-6 (8-6), 6-3 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் மேக்சிம் கிரேசியை தோற்கடித்து தனது 89-வது பட்டத்தை சொந்தமாக்கினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச டென்னிஸ்: இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி
சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரோகன் போபண்ணா-ராம்குமார் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
2. சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி
ஆஸ்ட்ராவா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி செக்குடியரசில் நடந்து வருகிறது.