ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 14-வது முறையாக காலிறுதிக்குள் நுழைந்த ரபேல் நடால்..!


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 14-வது முறையாக காலிறுதிக்குள் நுழைந்த ரபேல் நடால்..!
x
தினத்தந்தி 23 Jan 2022 11:03 AM GMT (Updated: 23 Jan 2022 11:03 AM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ரபேல் நடால் 14-வது முறையாக காலிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இன்று நடைபெற்ற கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸ் வீரர் அட்ரியன் மன்னரினோவை எதிர்த்து விளையாடினார்.

இந்த ஆட்டத்தில் நீண்ட தொடக்க டைபிரேக்கரைத் தொடர்ந்து 7-6 (16-14), 6-2, 6-2 என்ற  நேர் செட் கணக்கில் அட்ரியன் மன்னரினோவை வீழ்த்தி 14வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனின் காலிறுதிக்குள் நுழைந்தார்.

ஆஸ்திரேலிய ஓபனில் அதிக முறை காலிறுதிப் போட்டியில் நுழைந்தவர்கள் பட்டியலில் ஜான் நியூகோம்பேவுடன், நடால் 2-வது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். 15 முறை காலிறுதிக்குள் நுழைந்து ரோஜர் பெடரர் இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

ரபேல் நடால் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 45-வது முறையாக காலிறுதிக்குள் நுழைந்து, ரோஜர் பெடரர் (58) மற்றும் நோவக் ஜோகோவிச் (51) ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

மேலும், ரபேல் நடால் ஆஸ்திரேலிய ஓபனில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றால் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிகமுறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற சாதனையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story