டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், ஆஷ்லி பார்ட்டி கால்இறுதிக்கு முன்னேற்றம் + "||" + Australian Open tennis: Nadal, Ashley advance to party quarterfinals

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், ஆஷ்லி பார்ட்டி கால்இறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், ஆஷ்லி பார்ட்டி கால்இறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர்.
மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ள இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. இதில் ஆண்கள் பிரிவில் 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கு குறி வைத்துள்ள 5-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), தரவரிசையில் 69-வது இடத்தில் உள்ள அட்ரியன் மனரினோவுடன் (பிரான்ஸ்) மோதினார். இதில் முதல் செட்டில் அனல் பறந்தது. டைபிரேக்கருக்கு நகர்ந்த இந்த செட்டில் நடால் 4 முறை எதிராளியின் செட் பாயிண்ட் ஆபத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டு பெரும் போராட்டத்துக்கு பிறகு முதல் செட்டை கைப்பற்றினார். முதல் செட் மட்டும் 1 மணி 21 நிமிடங்கள் நீடித்தது. ஆனால் அடுத்த இரு செட்டுகளை இதைவிட குறைந்த நேரத்தில் சிரமமின்றி வசப்படுத்திய நடால் முடிவில் 7-6 (16-14), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய ஓபனில் 14-வது முறையாக கால்இறுதிக்குள் கால்பதித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் 6-3, 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்டில் விரட்டியடித்து முதல்முறையாக கால்இறுதியை எட்டினார். ஷபோவலோவ் கால்இறுதியில் நடாலுடன் மல்லுகட்டுகிறார்.

மற்ற ஆட்டங்களில் பெரேட்டினி (இத்தாலி) 7-5, 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் காரெனோ பஸ்டாவையும் (ஸ்பெயின்), கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்) 7-5, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் கெக்மானோவிச்சையும் (செர்பியா) வென்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ சூறாவளி ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) தன்னை எதிர்த்த அமன்டா அனிசிமோவாவை (அமெரிக்கா) 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வீழ்த்தி உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினார். அனிசிமோவா 3-வது சுற்றில் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகாவை தோற்கடித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.

ஆஷ்லி பார்ட்டி கால்இறுதியில் மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவை சந்திக்கிறார். முன்னதாக பெகுலா 4-வது சுற்றில் 7-6 (7-0), 6-3 என்ற நேர் செட்டில் மரியா சக்காரியை (கிரீஸ்) பதம் பார்த்தார். இதே போல் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்போரா கிரெஜ்சிகோவா(செக்குடியரசு) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் முன்னாள் சாம்பியன் விக்டோரியா அஸரென்காவையும் (பெலாரஸ்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா) 6-3, 6-1 என்ற நேர் செட்டில் பாலா படோசாவையும் (ஸ்பெயின்) வெளியேற்றி கால்இறுதியை உறுதி செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்..!
நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, தென் கொரியாவுடன் மோதியது.
2. ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: கால்இறுதியில் இந்தியா-தென் கொரியா இன்று மோதல்
ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியின் கால்இறுதி சுற்றில் இந்தியா-தென் கொரியா அணிகள் இன்று மோதுகின்றன.
3. ரேபிட் செஸ்: கால்இறுதி வாய்ப்பை இழந்தார் பிரக்ஞானந்தா!
பிரக்ஞானந்தா முதல் 8 இடங்களுக்குள் இடம் பிடிக்க முடியாததால் கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
4. போட்டியின் நடுவே காயத்தால் விலகிய வீரர்...வெற்றி பெற்ற வினோதம்...!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் புரூனோ குழுஹாரா.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஆஷ்லே பார்டி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி தகுதி பெற்றுள்ளார்.