ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், சபலென்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், சபலென்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், சபலென்கா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், சபலென்கா ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ரோகன் போபண்ணா ஜோடி இறுதிப்போட்டியை எட்டி அசத்தியது.

மெல்போர்ன்,



'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, 64-ம் நிலை வீராங்கனை டோனா வெகிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார். 1 மணி 49 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட்டில் டோனா வெகிச்சை தோற்கடித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். அவர் ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரைஇறுதிக்குள் நுழைவது இது 4-வது முறையாகும்.

மற்றொரு அரைஇறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். அவர் 1 மணி 27 நிமிடம் நடந்த ஆட்டத்தில் 3-6, 5-7 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள மாக்டா லினெட்டிடம் (போலந்து) சரண் அடைந்தார். வெற்றியை ருசித்த 30 வயதான மாக்னா லினெட் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக அரைஇறுதியை எட்டினார். மாக்டா லினெட் ஏற்கனவே இந்த தொடரில் தரவரிசையில் 'டாப்-20' க்குள் இருக்கும் 3 வீராங்கனைகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'இந்த வெற்றியை தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை. இதனை எனது வாழ்க்கையில் ஒருபோதும் மறக்கமாட்டேன்' என்று மாக்டா லினெட் தெரிவித்தார். அரைஇறுதியில் மாக்டா லினெட், சபலென்காவை சந்திக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 35-வது இடத்தில் உள்ள 25 வயது அமெரிக்க வீரர் டாமி பால் 7-6 (8-6), 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் பென் ஷெல்டனை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 3 மணி 6 நிமிடம் நீடித்தது. இதன் மூலம் 2009-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபனில் அரைஇறுதிக்குள் நுழைந்த முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை டாமி பால் பெற்றார்.

மற்றொரு அரைஇறுதியில் 9 முறை சாம்பியனும், 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவுடன் (ரஷியா) மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய 35 வயது ஜோகோவிச் 6-1, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஆந்த்ரே ரூப்லெவை விரட்டியடித்து 10-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 3 நிமிடம் தேவைப்பட்டது. அரைஇறுதியில் ஜோகோவிச்-டாமி பால் ஆகியோர் மோதுகிறார்கள். ஜோகோவிச் எஞ்சிய இரண்டு தடைகளை வெற்றிகரமாக கடந்தால் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் (22) பட்டம் வென்றவரான ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலின் சாதனையை சமன் செய்வதுடன் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலப்பு இரட்டையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சானியா மிர்சா-ரோகன் போபண்ணா கூட்டணி 7-6 (7-5), 6-7 (5-7), 10-6 என்ற செட் கணக்கில் தேசிரா ராசிக் (அமெரிக்கா)-நீல் ஸ்கூப்ஸ்கி (இங்கிலாந்து) இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1 மணி 52 நிமிடம் அரங்கேறியது. 2009-ம் ஆண்டு மகேஷ் பூபதியுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்சா 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். ரோகன் போபண்ணாவும் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.


Next Story