பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
காரிமங்கலம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து பொருட்கள் எரிந்து சேதம்
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பேகாரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அன்பு, பென்னாகரத்தை சேர்ந்தவர்கள் முனிவேல், குப்புராஜ். இவர்கள் 3 பேரும் காரிமங்கலம் அருகே உள்ள பெரிய பூலாம்பட்டி பகுதியை சேர்ந்த ரத்னா என்பவரது நிலத்தில் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு குடோன் வைத்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு குடோனில் திடீரென தீப்பிடித்து புகை வெளியேறியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பாலக்கோடு தீயணைப்பு நிலையம் மற்றும் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் குடோனில் இருந்து பழைய பிளாஸ்டிக் பொருட்கள், மெஷின்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து தீயணைப்பு படையினர் விசாரணை நடத்தியபோது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.