அதிரடி நீக்கம்..! அதிர்ச்சியில் முன்னாள் கேப்டன்...!


அதிரடி நீக்கம்..! அதிர்ச்சியில் முன்னாள் கேப்டன்...!
x
தினத்தந்தி 11 Dec 2021 12:12 PM IST (Updated: 11 Dec 2021 12:12 PM IST)
t-max-icont-min-icon

ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது, விராட் கோலிக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மும்பை,

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி திறம்பட செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த இருபது ஓவர் கிரிக்கெட் தொடருக்கு பின் டி20 வடிவ போட்டிகளில், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக கோலி அறிவித்திருந்தார்.இதனையடுத்து, விராட் கோலி டி20  பதவியிலிருந்து விலகிய நிலையில் இந்திய அணியின் டி20  கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு  ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக பிசிசிஐ கடந்த 8ம் தேதியன்று நியமித்தது. ரோகித் சர்மா ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் முதல், தனது கேப்டன் பணியை தொடங்க உள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறும்போது, "ரோகித் சர்மாவை ஒருநாள் தொடரின் கேப்டனாக்குவதற்கு அணி தேர்வாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த முடிவு குறித்து விராட் கோலியிடமும் பேசப்பட்டது.

உண்மையில் இந்திய கிரிக்கெட் வாரியம், கோலியிடம் இருபது ஓவர் போட்டியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் இருபது ஓவர் போட்டியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், இரண்டு வெள்ளை-பந்து வடிவங்களுக்கு இரண்டு கேப்டன்களை வைத்திருப்பது சரியானதாக இருக்காது என அணி தேர்வர்கள் கருதினர். 

எனவே ஒருநாள் தொடரிலும் ரோகித்தை ஒருநாள் தொடரின் கேப்டனாக்க முடிவு செய்யப்பட்டது. ரோகித் சர்மாவின் தலைமைத் திறன்களில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, மேலும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக நீடிப்பார்.” என்று விளக்கம் அளித்திருந்தார். 

ஆனால், ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது, விராட் கோலிக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

“கேப்டனை மாற்றும் முடிவு குறித்து கோலியிடம் இதுகுறித்து சில தினங்களுக்கு முன்னதாகவே பேசியிருக்க வேண்டும். முடிவை அறிவிக்கும் சில மணி நேரங்களுக்கு முன்னர் பேசியது சரியானதல்ல” என்று பிசிசிஐ நிர்வாகத்தை சார்ந்த ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் பொறுப்பை விட்டுவிட்டு  முழு கவனத்தையும் பேட்டிங்கில் செலுத்துமாறு கோலிக்கு அறிவுரை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. அந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட கோலிக்கு பக்கபலமாக முன்னாள் கேப்டன் டோனி இந்திய அணியின் ஆலோசகராக பிசிசிஐ நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டார்.

கோலியின் தலைமையில் இந்திய அணியால் எந்தவொரு சர்வதேச கோப்பையையும் வெல்ல முடியவில்லை என்ற ஆதங்கம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடமும், அணி நிர்வாகத்திடம் தொடர்ந்து இருந்து வந்தது.

இந்த நிலையில், அனைத்து கோணங்களையும் அலசிப் பார்த்து, ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி தடாலடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெஸ்ட் போட்டிகளிலும் ரோகித் சர்மாவை துணை கேப்டனாக நியமிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாவும் தகவல் வெளிவந்துள்ளது. ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக திறம்பட செயல்பட்டு கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் ரோகித் சர்மா. மறுமுனையில், விராட் கோலியின் தலைமையின் கீழ் செயல்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஒருமுறை கூட  கோப்பையை கைப்பற்றியதில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட், ஒருநாள் மற்றும் டி20 வடிவ போட்டிகளின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக விரட் கோலி என இந்திய அணி புதிய வடிவம் கண்டுள்ளது.

எனினும், 2.0 வெர்ஷனாக இந்தியாவின் ‘ரன் மெஷின்’ விராட் கோலி திரும்ப வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story