செஞ்சூரியன் டெஸ்ட்: "சிராஜ் அப்படி செய்திருக்க கூடாது" - கவாஸ்கர் அதிருப்தி


செஞ்சூரியன் டெஸ்ட்: சிராஜ் அப்படி செய்திருக்க கூடாது - கவாஸ்கர் அதிருப்தி
x
தினத்தந்தி 2 Jan 2022 9:34 AM IST (Updated: 2 Jan 2022 9:53 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் செய்த விஷயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

செஞ்சூரியன், 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்தது. செஞ்சூரியனில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால்  இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் இந்திய அணியால் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடிந்தது. அதுவும் தென்னாப்பிரிக்க அணியின்  கோட்டையான செஞ்சூரியனில் அந்த அணியை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற சாதனையை படைத்தது இந்திய அணி.

இந்த டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் செய்த விஷயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. வேகப்பந்துவீச்சாளர்கள் பொதுவாகவே களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்கள். 

பேட்ஸ்மேன்கள் பந்தை பவுலர்களுக்கு நேராக அடித்தால், பந்தை பிடித்து மீண்டும் பேட்ஸ்மேன் இருக்கும் திசை நோக்கி பவுலர்கள் ஸ்டெம்பில்  எறிவது  வழக்கம்தான். ஆனால் சில சமயங்களில் அவர்களையும் மீறி பந்து கையிலிருந்து வெளிவந்து பேட்ஸ்மேன்களை தாக்கும். சில சமயங்களில் பவுலர்கள் வேண்டுமென்றே இதை செய்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

அந்தவகையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் டெம்பா பவுமா மட்டும் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினார்.இதனால் அவரை வீழ்த்த முடியாத விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக அவர் அடித்த பந்தை பிடித்து நேராக அவர் மீது வீசினார் சிராஜ். சிராஜ் விட்டெறிந்த பந்து, பவுமாவின் கணுக்காலில் அடித்தது. உடனடியாக அவரிடம் சிராஜ் மன்னிப்பு கேட்டார். 

இதையடுத்து அந்த ஓவர் முடிந்ததும், பிசியோ களத்திற்கு வந்து பவுமாவை பரிசோதனை செய்துவிட்டு சென்றனர். ஆனால் பவுமாவிற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

பவுமா ரன் ஓட முயற்சிக்கவே இல்லை.  சிராஜ் கொஞ்சம் ஆவேசமடைந்துவிட்டார். பேட்ஸ்மேன் ரன் ஓட முயன்று, அந்த த்ரோ அடித்திருந்தால் அதை புரிந்துகொள்ளலாம். ஆனால் அவர் ரன் ஓடவே முயற்சி செய்யவில்லை. எனவே அந்த த்ரோ அடிப்பதற்கான அவசியமே இல்லை 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story