"என்னை ஏன் அணியில் சேர்க்கவில்லை?" - டோனி மற்றும் பிசிசிஐ மீது ஹர்பஜன் சிங் காட்டம்


என்னை ஏன் அணியில் சேர்க்கவில்லை? - டோனி மற்றும் பிசிசிஐ மீது ஹர்பஜன் சிங் காட்டம்
x

31 வயதில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய என்னை ஏன் அதன் பிறகு இந்திய அணியில் சேர்க்கவில்லை என ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங்.  இவர் இந்திய அணியில் 1998ஆம் ஆண்டு முதல் முறையாக களமிறங்கினார். 2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து பெரிய சாதனை படைத்தார். 

அதன் பின்னர் இந்திய அணிக்காக பல முறை சிறப்பாக பந்துவீசி அசத்தி வந்தார். கடைசியாக அவர் 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின்பு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
இதையடுத்து, ஹர்பஜன் சிங் கடந்த வாரம் அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்,”அனைத்து நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு வரவேண்டும். அந்தவகையில் என்னுடைய வாழ்க்கையில் அனைத்தும் அளித்த என மனதுக்கு நெருக்கமான கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விடை பெறுகிறேன். இந்த 23 ஆண்டு காலம் என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றி” எனப் பதிவிட்டிருந்தார். 

இந்தநிலையில், 31 வயதிலேயே 400 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய எனக்கு அதன்பின்னர் இந்திய அணியில் ஏன் இடம் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை என்று ஓய்வுக்கு பிறகு பகிரங்க குற்றசாட்டை முன்வைத்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "31 வயதில் 400 விக்கெட்டுகள் வீழ்த்த முடிந்த என்னால், அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் குறைந்தது 100 விக்கெட்களை வீழ்த்தியிருக்க முடியும். ஆனால் அதற்குப்பிறகு என்னை இந்தியஅணியிலேயே எடுக்கவில்லை. 400 விக்கெட் வீழ்த்திய ஒரு வீரர் புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் இன்று வரை மர்மமாக இருக்கிறது. 

நான் வெற்றியேற்றப்பட்டபோது அணியின் கேப்டனாக தோனி தான் இருந்தார். ஒரு சில குறிப்பிட்ட பிசிசிஐ அதிகாரிகள் என்னை அணியில் எடுக்க விரும்பவில்லை. அதை கேப்டனும் ஆதரித்து இருக்கலாம். என்னை அணியில் எடுக்காதது குறித்து எத்தனையோ முறை கேப்டன் தோனியிடம் கேள்வி எழுப்பினேன். ஆனால், இதுகுறித்து அவர் வாயை திறக்கவில்லை. இதற்கு மேல் இதை கேட்பது பிரோஜனம் இல்லை என்று விட்டுவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

Next Story