இந்தியா-இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி


இந்தியா-இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
x
தினத்தந்தி 24 Feb 2022 5:30 AM IST (Updated: 24 Feb 2022 3:20 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா-இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்று நடக்கிறது.

லக்னோ,

மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்றிரவு (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர்.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு அணியை தயார்படுத்தும் வகையில் இந்தியா பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த தொடரிலும் அது தொடரும். விராட் கோலி, ரிஷாப் பண்ட் ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர், லோகேஷ் ராகுல் காயத்தால் இடம் பெறவில்லை. இதனால் இந்த 20 ஓவர் தொடரில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிட்டும். சஞ்சு சாம்சனை நடுவரிசையில் பயன்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்து திரும்பியுள்ள ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் வருகை அணியின் சரியான கலவைக்கு உதவிகரமாக இருக்கும். பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் மட்டுமே இப்போது அனுபவசாலிகள். இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்டோர் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வதில் கவனமுடன் இருப்பார்கள். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், புவனேஷ்வர்குமார் உள்ளிட்டோர் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

இந்திய அணி தொடர்ச்சியாக ஒன்பது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் சமீபத்தில் வெஸ்ட் இண்டீசை 3-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்ததும் அடங்கும். உள்ளூரில் களம் இறங்குவதால் இந்தியாவின் கை ஓங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

ஹசரங்காவுக்கு கொரோனா

ஆஸ்திரேலியாவில், 20 ஓவர் தொடரை 1-4 என்ற கணக்கில் பறிகொடுத்த கையோடு இலங்கை அணி இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறது. இருப்பினும் கடைசி ஆட்டத்தில் பெற்ற வெற்றி அவர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையை அளித்திருக்கும். குசல் மென்டிஸ், பதும் நிசாங்கா, கேப்டன் தசுன் ஷனகா ஆகியோர் பேட்டிங்கில் பார்மில் உள்ளனர். ஆனால் சுழற்பந்துவீசும் ஆல்-ரவுண்டர் ஹசரங்கா இல்லாதது சற்று பலவீனமாகும். கொரோனா தொற்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடாத ஹசரங்கா தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால் பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் தனிமைப்படுத்துதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கேயே தங்கியிருக்கும் அவர் இந்திய 20 ஓவர் தொடரில் விளையாட வாய்ப்பில்லை. அதே சமயம் 21 வயதான தீக்‌ஷனாவின் சுழல் தாக்குதல் இந்திய பே்டஸ்மேன்களுக்கு நிச்சயம் சவாலாக இருக்கும்.

இலங்கை கேப்டன் ஷனகா நேற்று அளித்த பேட்டியில், ‘டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட வேண்டும். தொடக்க வீரர்கள் ரன்கள் குவிக்கும் போது, நாங்கள் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உண்டு. ஹசரங்கா இல்லாதது பின்னடைவு தான். ஆனாலும் நாங்கள் வலுவாகவே இருக்கிறோம். இளம் வீரர்களிடம் மிகச்சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன்’ என்றார்.

இரவு 7 மணிக்கு...

இவ்விரு அணிகளும் இதுவரை 22 இருபது ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் இந்தியாவும், 7-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இரவில் பனிப்பொழிவு காரணமாக பந்து வீசுவதற்கு கடினமாக இருக்கும். இதனால் ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் அய்யர், ரவீந்திர ஜடேஜா அல்லது யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் அல்லது ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார் அல்லது அவேஷ்கான்.

இலங்கை: பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், கமில் மிஷாரா அல்லது சன்டிமால், சாரித் அசலன்கா, ஜனித் லியானாஜ், தசுன் ஷனகா (கேப்டன்), சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, மகீஷ் தீக்‌ஷனா, லாகிரு குமாரா.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story