மத்திய அரசாங்க பணிகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு


மத்திய அரசாங்க பணிகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு
x

கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பில் பிரதானமான ஒன்று வேலை இழப்பும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலையும்தான்.

கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பில் பிரதானமான ஒன்று வேலை இழப்பும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலையும்தான். அரசாங்கத்தின் பொருளாதாரம், நிதிநிலை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசாங்கத்தின் சார்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட முடியாத ஒரு நிலைதான் இருந்தது. இப்போது உலகமே பொருளாதார வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறதோ? என்று அச்சம் ஏற்படும் சூழ்நிலையில், அமெரிக்காவில்கூட நுகர்வோர் விலைவாசி குறியீடு 8.6 சதவீதமாகிவிட்டது. அங்கும் விலைவாசி உயர்வு மட்டுமல்லாமல், நிதி கொள்கையும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும், ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அதிகபட்ச விலைவாசி உயர்வான 6 சதவீதத்தை தாண்டி, இப்போது 7.04 சதவீதம் ஆகிவிட்டது. ஆக கடும் நெருக்கடியை தவிர்க்க வேண்டுமானால், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே சிறந்த வழியாகும். 2024-ல் நாடு அடுத்த நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' பதிவில், ''அனைத்து துறைகள், அமைச்சகங்களில் உள்ள மனிதவள நிலைகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, அடுத்த 1½ ஆண்டுகளில், மத்திய அரசாங்கத்தில் 10 லட்சம் வேலைகள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்'' என்று கூறப்பட்டிருந்தது. இவ்வளவு அதிக அளவில் இதுவரை மத்திய அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது இல்லை. பா.ஜ.க. ஆட்சியில், கடந்த 8 ஆண்டுகளில், மத்திய அரசாங்க பணிகளில் சராசரியாக ஆண்டுக்கு 43 ஆயிரத்து 600 பேருக்குத்தான் வேலை வாய்ப்புகள் கிடைத்து வந்தன.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காலத்தில், வேலையில்லா திண்டாட்டம்தான் மோடி அரசாங்கத்துக்கு பெரிய சவாலாக இருந்தது. மத்திய அரசாங்கத்தில் 40 லட்சத்து 78 ஆயிரம் பணியிடங்கள் இருக்கின்றன. ஆனால், தற்போது 31 லட்சத்து 91 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். மீதி 8 லட்சத்து 87 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அதாவது 21.7 சதவீத பணியிடங்களில் ஊழியர்கள் இல்லை. அப்படியானால் எந்த அளவுக்கு நிர்வாகம் பாதிக்கப்பட்டு இருக்கும், இப்போது வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு எந்த அளவுக்கு பணிச்சுமை இருக்கும் என்பது புலனாகிறது. அரசு நிர்வாகம் செம்மைப்படுவதற்கும், வேலை இல்லா திண்டாட்டத்தால் அவதியுறும் இளைஞர்களுக்கு கை கொடுப்பதற்கும் பிரதமரின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்த காலியிடங்களில் 92 சதவீத இடங்கள் முக்கிய துறைகளான ரெயில்வே, ராணுவம் (சிவில்), உள்துறை, தபால் மற்றும் வருவாய் துறையில்தான் இருக்கிறது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.

ராணுவ துறையில் (சிவில்) 2.47 லட்சம் காலி இடங்களும், ரெயில்வேயில் 2.37 லட்சம் காலியிடங்களும், உள்துறையில் 1.28 லட்சம் காலியிடங்களும், தபால் இலாகாவில் 90 ஆயிரத்து 50 காலியிடங்களும், இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் 28 ஆயிரத்து 237 காலியிடங்களும், மத்திய போலீஸ் படைகளில் 1.1 லட்சம் காலியிடங்களும் இருக்கின்றன. நாட்டில் கொரோனா நேரத்தில் வேலைவாய்ப்புகள் இல்லாமல் ஏற்கனவே வேலை இல்லா திண்டாட்டத்தால் அவதிப்படும் இளைஞர் கூட்டத்தோடு கடந்த 2 ஆண்டுகளில் படித்து முடித்த இளைஞர்களும் சேர்ந்துவிட்டார்கள்.

2023-ம் ஆண்டு இறுதிக்குள், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மத்திய அரசாங்கம், உடனடியாக எந்தெந்த துறையில் எவ்வளவு பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? என்ற விவரம் உள்பட கால அட்டவணையையும் வெளியிடவேண்டும். வேலையில்லாமல் வாடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் தாங்கள் விரும்பும் துறையில் சேருவதற்கான தேர்வில் கலந்துகொள்ள, உடனடியாக தகுந்த தயாரிப்புகளை தொடங்கவேண்டும். போட்டி பலமாக இருக்கும் என்ற நிலையில், இனி வேலைவாய்ப்பை பெறுவது இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.


Next Story