பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு


பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு
x

சமுதாயத்தில் சமூக ரீதியாக பின்னுக்கு தள்ளப்பட்ட சாதியினரை பள்ளத்தில் இருந்து கை தூக்கி விடுவதற்காக இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

சமுதாயத்தில் சமூக ரீதியாக பின்னுக்கு தள்ளப்பட்ட சாதியினரை பள்ளத்தில் இருந்து கை தூக்கி விடுவதற்காக இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய அரசாங்கத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் வழங்கப்படுகிறது. இந்தநிலையில், பொதுப்பிரிவில் உள்ள முன்னேறிய சமுதாயத்தினர் தங்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தநிலையில், இதுபற்றி ஆராய்ந்து அறிக்கை தர பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சினோ தலைமையிலான மூவர் குழு 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டு, அந்த குழுவும் 4 ஆண்டுகள் கழித்து தன் அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்த குழு அறிக்கையின்பேரில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பட்டியலில் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் ஒரு மசோதாவை தயார் செய்தது. ஆனால், பா.ஜ.க ஆட்சியில்தான் இவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், 108-வது அரசியல் சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 40-க்கு மேல் வழக்குகள் தொடரப்பட்டன. தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் இடையீட்டு மனுக்கள் இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை அப்போது தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

இதில் யு.யு.லலித், நீதிபதி ரவீந்தர பட் ஆகியோர் இந்த 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லாது என்று தீர்ப்பளித்தனர். மற்ற 3 நீதிபதிகளும் செல்லும் என்று தீர்ப்பளித்த நிலையில், பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி, 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று தலைமை நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு "சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம்? என்று சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடனும் வருகிற சனிக்கிழமை விவாதித்து முடிவு எடுக்க கூட்டம் கூட்டியிருக்கிறார்.

இந்த சட்ட திருத்தத்தின்படி, ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவான குடும்பத்தினர் 10 சதவீத இடஒதுக்கீட்டின் பலனை பெறலாம். அதாவது, மாத வருமானமாக ரூ.66 ஆயிரத்து 666 பெற்று வருமான வரி கட்டுபவர்கள் குடும்பங்களுக்கும் இடஒதுக்கீடு உண்டு. ஆனால் நீதிபதி ரவீந்தர பட் தனது தீர்ப்பில், பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டில் பரம ஏழைகளான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை சேர்க்காதது சட்டவிரோதம் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் நாடு முழுவதும் 31.7 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளனர். இதில், அந்தந்த பிரிவு மக்கள் தொகை கணக்குப்படி தாழ்த்தப்பட்டோரில் 38 சதவீதமும், பழங்குடியின மக்களில் 48 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோரில் 33.1 சதவீதமும், பொதுப்பிரிவினரில் 18.2 சதவீதமும் இருக்கிறார்கள் என்று சினோ கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையிலுள்ள புள்ளிவிவரங்களையும் தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.


Next Story