4 ஆண்டுகள் போர்க்கள பணி!


4 ஆண்டுகள் போர்க்கள பணி!
x

மத்திய அரசாங்க பணிகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த அதேநாளில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ‘அக்னி பத்’ என்ற திட்டத்தை வெளியிட்டார்.

மத்திய அரசாங்க பணிகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த அதேநாளில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் 'அக்னி பத்' என்ற திட்டத்தை வெளியிட்டார். தமிழில் இதை "அக்னி பாதை" அதாவது "போர்க்கள பணி" என்று சொல்லலாம். இந்த திட்டத்தின்படி ராணுவம், கடற்படை, விமானப்படையில் அடுத்த 90 நாட்களுக்குள் 46 ஆயிரம் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 17½ வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அடுத்த நாளே இந்த வயது வரம்பு 21 வயதில் இருந்து இந்த ஒரு ஆண்டுக்கு மட்டும் சிறப்பு நிகழ்வாக 23 வயதாக உயர்த்தப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக முப்படைகளுக்கும் ஆள் எடுக்காததால், இந்த 23 வயது வரம்பு ஒரு ஆண்டுக்கு மட்டும்தான் என்று காரணம் கூறப்பட்டது. வழக்கமாக ராணுவத்தில் சேருபவர்கள் போல அக்னி பத் திட்டத்தின் கீழ் வேலைக்கு சேருபவர்கள் 10 ஆண்டுகளோ அல்லது அதற்கு மேலோ பணியாற்ற முடியாது. இந்தப்பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். அவர்களின் மாத சம்பளத்தில் 30 சதவீத தொகை பங்களிப்பாக பிடித்தம் செய்யப்படும். 4 ஆண்டுகள் கழித்து அவர்கள் பணிநிறைவுக்கு பிறகு அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு தொகைக்கு இணையாக அரசு வழங்கும் தொகையோடு வட்டியும் சேர்த்து ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். இந்த தொகையைக்கொண்டு சுய தொழில் தொடங்கவும் முடியும். இவர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். மேலும் இவர்களில் திறமை வாய்ந்த 25 சதவீதம் பேர் நிரந்தர பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்கில் போரில் இந்தியா மகத்தான வெற்றியைப் பெற்றது. அப்போது 3 ஆண்டுகளுக்கு குறைவான அனுபவம் கொண்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள்தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். அந்த போருக்கு பிறகு நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு அளித்த பரிந்துரை அடிப்படையிலேயே இந்த அக்னி பத் திட்டம் உருவெடுத்துள்ளது. இப்போது 4 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெறும் வீரர்களுக்கு துணை ராணுவ படைகள் உள்பட பல பணிகள், பொதுத்துறை நிறுவன பணிகளுக்கான தேர்வுகளில் 10 சதவீதம் ஒதுக்கப்படுவதாகவும் அறிவிப்புகள் வந்துள்ளன. 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு இந்த 4 ஆண்டுகளில் பெற்ற நல்ல பயிற்சிகள், அவர்கள் வேறு எந்த வேலைக்கும் செல்வதற்கும் ஒரு முன்னுரிமையைக் கொடுக்கும். ராணுவத்தில் பெற்ற பயிற்சியை வைத்துக்கொண்டு மத்திய, மாநில போலீஸ் பணிகள் உள்பட பல துறைகளில் அவர்கள் வேலை வாய்ப்பு பெறமுடியும். அனைத்து துறைகளிலும் கட்டுப்பாடோடு கூடிய பணியாளர்கள் இருப்பது சமுதாயத்துக்கும் நல்ல பயனை அளிக்கும். மேலும், இந்த இளம் வயது அவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் வயது. அந்த கால கட்டங்களில் கட்டுப்பாடான ராணுவ பயிற்சியைப் பெறுவதன் மூலம் சமுதாயத்தில் ஒரு சிறந்த இளைஞர் படை உருவாகும்.

ஆனால், இந்த திட்டத்துக்கு நாடு முழுவதும் ராணுவத்தில் சேர வேண்டும் என்று தணியாத வேட்கையில், அதற்கான பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் இளைஞர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. போராட்டம் பல மாநிலங்களில் வன்முறையாக மாறின. ரெயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இப்போது முப்படைகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவுகளும் தொடங்கி, இளைஞர்களும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் ஆர்வமாக பதிவு செய்து வருகிறார்கள். போர்க்கள பணியில் சேரும் இந்த இளைஞர்களின் எதிர்காலம் ஒளி மிகுந்ததாக இருக்கும் வகையில் செய்வது அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது.


Next Story