90 லட்சம் பேரை தேடி சென்று மருந்து கொடுத்த திட்டம்


90 லட்சம் பேரை தேடி சென்று மருந்து கொடுத்த திட்டம்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, ‘மக்கள் யாரும் அரசின் திட்டங்களை நாடி வர வேண்டாம், உங்களை அந்த திட்ட பயன்கள் தேடி வரும்’ என்ற வகையில் செயலாற்றி வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, 'மக்கள் யாரும் அரசின் திட்டங்களை நாடி வர வேண்டாம், உங்களை அந்த திட்ட பயன்கள் தேடி வரும்' என்ற வகையில் செயலாற்றி வருகிறது. அந்த வகையில்தான் மாணவர்களுக்கு அவர்களின் கற்றல்திறனை மேம்படுத்தும் வகையில் 'இல்லம் தேடி கல்வித்திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து மருந்து-மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள், 'பிசியோதெரபி' சிகிச்சை தேவைப்படுபவர்களெல்லாம் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று 'கியூ'வில் காத்திருக்கும் நிலை உண்டு. ஆனால் நீங்கள் மருத்துவமனைக்கு வந்து மருந்து வாங்க வேண்டாம், உங்கள் வீட்டுக்கே வந்து மருந்து-மாத்திரைகளை அரசே தரும், தேவைப்படுபவர்களுக்கு 'பிசியோதெரபி', 'டயாலிசிஸ்' சிகிச்சையும் அளிக்கப்படும் என்ற வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை நிறைவேற்றும் திட்டம்தான் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம்.

இத்திட்டத்தை கடந்தாண்டு ஆகஸ்டு 5-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளி என்ற கிராமத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று, அங்குள்ள சரோஜாம்மாள் என்ற பெண்ணிடம் மருந்து பெட்டகத்தைக் கொடுத்து தொடங்கிவைத்தார். அந்த திட்டத்தை தொடங்கி வைக்கும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'இந்த திட்டத்தால் பயனடைபவர்கள் ஒரு கோடி பேர் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்' என்றார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எள் என்றால் எண்ணெயாக இருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிகாரிகளையும், அவரது துறையையும் எந்திரகதியில் யார் யாருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது? என்ற பட்டியலை எடுத்து அவர்கள் வீட்டு கதவைத் தட்டி, 'இதோ உங்களுக்கு தேவையான மருந்து பெட்டகத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்' என்று செயல்பட வைத்தார். தினமும் புதிதுபுதிதாக பயனாளிகளைச் சேர்க்க வைத்தது மக்கள் நல்வாழ்வுத்துறை. 23-2-2022 அன்று செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கத்தில் 50 லட்சமாவது பயனாளி என்ற வகையில் பாஞ்சாலை என்ற பெண்ணுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகத்தைக் கொடுத்தார். வேகம், வேகம் இன்னும் வேகம் என்று அவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை முடுக்கிவிட்டார். அடுத்த 46 நாட்களில் அதாவது 10-4-2022 அன்று மதுரை மயிட்டாம்பட்டியில் 60-வது லட்சம் பயனாளி என்ற வகையில் பெரியசாமி என்பவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருந்து பெட்டகத்தைக் கொடுத்தார்.

அரசு நினைத்தால், அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருந்தால் எந்த திட்டத்தின் வேகமும் ஆச்சரியப்பட வைக்கும் என்பதற்கு சாட்சியாக நாமக்கல் மாவட்டம் மேலூரில் உள்ள நல்லம்மாள் என்ற 75 லட்சமாவது பயனாளிக்கு 21-6-2022 அன்றும், 6-8-22 அன்று சைதாப்பேட்டை கோதாமேட்டில் சாந்தி என்ற பெண்னுக்கு 80 லட்சமாவது பயனாளி என்ற வகையிலும் மருந்து பெட்டகங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். கடந்த மாதம் 25-ந் தேதியன்று 90 லட்சமாவது பயனாளி என்ற வகையில் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜெனிதா பேகம் என்ற பெண்ணுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேவையான மருந்து பெட்டகத்தை வழங்கினார்.

ஓட்டப்பந்தயம் முடிகிற நேரத்தில் அதுவரை இருந்த வேகத்தைவிட அதிக வேகம் இருக்கும் என்பதுபோல விரைவில் ஒரு கோடி என்ற எண்ணிக்கையில் வரும் பயனாளிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையினால் மருந்து பெட்டகத்தைக் கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் அதிகாரிகளின் வேகம் தெரிகிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், நோய் ஆதரவு சிகிச்சை, இயன்முறை சிகிச்சை, சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'டயாலிசிஸ்' சிகிச்சை என்று மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வரும் இத்திட்டம் ஒரு மகத்தான திட்டம். முதல் மாதம் மட்டுமல்லாமல் மாதந்தோறும் தவறாமல் மருந்து பெட்டகங்கள் அளிப்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், ஒரு கோடி பயனாளிகளோடு நிறுத்திவிடக்கூடாது, தொடர வேண்டும் என்பதே பொதுவான வேண்டுகோளாக இருக்கிறது.


Next Story