நெல் விளைச்சலில் சாதனை!


நெல் விளைச்சலில் சாதனை!
x

தமிழ்நாட்டில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவு, 3-வது அதிகமான மழை ஆகஸ்டு மாதத்தில் பெய்ததால், இந்த ஆண்டு அணைகள், நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியது மட்டுமல்லாமல், விவசாயிகளின் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகின்றது.

தமிழ்நாட்டில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவு, 3-வது அதிகமான மழை ஆகஸ்டு மாதத்தில் பெய்ததால், இந்த ஆண்டு அணைகள், நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியது மட்டுமல்லாமல், விவசாயிகளின் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகின்றது. செங்கல்பட்டு, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களைத்தவிர, மற்ற மாவட்டங்களில் கூடுதலாகவோ, சராசரியாகவோ மழை பெய்து இருக்கிறது. நேற்று முன்தினம் கணக்குப்படி 15 பெரிய நீர்த்தேக்கங்களில் மொத்த கொள்ளளவில் 87.89 சதவீதம் நிரம்பிவிட்டது. அதாவது, ஏறத்தாழ 174.26 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. கடந்த ஆண்டு இதேநாளில் சராசரியாக 55 சதவீதம் மட்டுமே நிரம்பி இருந்தது.

மாநிலத்திலுள்ள 90 அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்களில், அதன் மொத்த கொள்ளளவில் இப்போது 85.17 சதவீதம் நீர் இருக்கிறது. மேட்டூர் அணையைப் பொருத்தமட்டில், ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதிதான் திறந்துவிடவேண்டும் என்று கால அட்டவணை நிர்ணயிக்கப்பட்டிருந்தும், பல ஆண்டுகளில் அது நிறைவேறவில்லை. ஆனால், இந்த ஆண்டு வரலாற்றிலேயே இல்லாத வகையில், மே மாதம் 24-ந் தேதியே திறந்துவிடப்பட்டு, காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடியை முன்கூட்டியே தொடங்கிவிட்டனர். இந்த ஆண்டு பெரிய சாதனையாக 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

2021-2022-ல் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் 22 லட்சத்து ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடியில் மட்டும் சாதனை இல்லை, நெல் விளைச்சலிலும் மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 22 லட்சத்து 20 ஆயிரம் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அறுவடை நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார் வேளாண்மைத்துறை செயலாளர் சமயமூர்த்தி. வழக்கமாக நெல் கொள்முதல் நிலையங்களில் அக்டோபர் 1-ந் தேதி முதல்தான் நெல் கொள்முதல் செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு நெல் விளைச்சலை கருத்தில் கொண்டு, செப்டம்பர் முதல் தேதி முதலே நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியிடம், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மத்திய அரசாங்கம் செப்டம்பர் 1-ந்தேதி முதல் நெல் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்தது.

விவசாயிகளின் நலன்கருதி செப்டம்பர் 1-ந்தேதி முதல் நெல் கொள்முதலுக்காக முயற்சித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திரமோடியும் விவசாயிகளின் நன்றிக்கு உரியவர்களாகிறார்கள். இந்த ஆண்டு 50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு காரீப் பருவத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,040 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,060 என்றும் மத்திய அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

தமிழக அரசு கடந்த ஆண்டைப்போலவே, சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75-ம், சன்னரக நெல்லுக்கு ரூ.100-ம் கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கும் விவசாயிகளுக்கு, சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,115-ம், சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,160-ம் கிடைக்கும். என்றாலும் விவசாயிகள், இந்த விலை போதாது என்றே கருதுகிறார்கள். வேளாண் விளை பொருள் விலை நிர்ணய கமிஷன் இந்த ஆண்டு நெல் உற்பத்தி செலவு மட்டுமே குவிண்டாலுக்கு ரூ.1,805 என்று நிர்ணயித்துள்ளதையும், தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.2,500 வழங்கும் என்று கூறியதை கருத்தில்கொண்டு, மத்திய அரசும் கூடுதலாக நெல்லுக்கு விலை தரவேண்டும், மாநில அரசும் கூடுதல் ஊக்கத்தொகை தரவேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க மத்திய அரசாங்கம் நியமித்துள்ள குழுவில் தமிழக அரசும், விவசாய சங்கங்களும், கேரளா போல குவிண்டாலுக்கு ரூ.2,820 மட்டுமல்ல, அதற்கு மேல் நிர்ணயிக்க வலியுறுத்தவேண்டும்.


Next Story