கார் பயணத்தில் 'சீட் பெல்ட்' அவசியம்


கார் பயணத்தில் சீட் பெல்ட் அவசியம்
x

நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வசதி படைத்தவர்களால் மட்டுமே கார் வைத்துக்கொள்ள முடியும் என்றநிலை இப்போது மாறிவிட்டது.

நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வசதி படைத்தவர்களால் மட்டுமே கார் வைத்துக்கொள்ள முடியும் என்றநிலை இப்போது மாறிவிட்டது. நடுத்தர வகுப்பினரும் கார் வாங்கிக் கொள்கிறார்கள். கார் ஒரு ஆடம்பர வாகனம் என்பது இப்போது கிடையாது. வங்கிகள் வாகன கடன் வழங்கும் முறை நடைமுறையில் இருப்பதும், கார் வாங்குபவர்களின் எண்ணிக்கையை உயர்த்திவிட்டது.

கார்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுபோல, விபத்துகளின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாகிவிட்டன. போக்குவரத்து விதி மீறலும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. சில நாட்களுக்கு முன்பு 54 வயதான டாடா சன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, ஆமதாபாத் நகரில் இருந்து மும்பைக்கு பென்ஸ் காரில் திரும்பிக்கொண்டு இருந்தார். காரை மகப்பேறு சிகிச்சை நிபுணரும், மர வள ஆர்வலருமான அனாகிதா பண்டோல் ஓட்டிக் கொண்டிருந்தார். முன்சீட்டில் அவரது கணவர் டேரியஸ் பண்டோல் அமர்ந்திருந்தார். அவர்கள் இருவரும் 'சீட் பெல்ட்' அணிந்திருந்தனர். பின் சீட்டில் சைரஸ் மிஸ்திரியும், டேரியஸ் பண்டோலின் சகோதரர் ஜெஹாங்கிர் பண்டோலும் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரும் 'சீட் பெல்ட்' அணிந்து இருக்கவில்லை.

பிற்பகல் 3.15 மணிக்கு கார் பால்கர் மாவட்டத்தில் உள்ள சூர்யா ஆற்று பாலத்தில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது, தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பின்சீட்டில் உட்கார்ந்து இருந்த சைரஸ் மிஸ்திரியும், ஜெஹாங்கிர் பண்டோலும் முன்பக்க 'சீட்' நோக்கி தூக்கி எறியப்பட்டதால், தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தனர். முன்சீட்டில் காரை ஓட்டிக்கொண்டு இருந்த அனாகிதா பண்டோலும், அவரது கணவரும் பலத்த காயத்தோடு உயிர் தப்பினர். விபத்து நடந்த நேரத்தில், அனாகிதா படுவேகத்தில் காரை ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார். அந்த இடத்துக்கு 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுங்கச்சாவடியில் இருந்து 9 நிமிடங்களில் விபத்து நடந்த இடத்துக்கு வந்து இருக்கிறார். இந்த விபத்து குறித்து புலன் விசாரணை செய்த போலீசார், அதிக வேகம் ஒரு காரணம் என்றாலும், பின் சீட்டில் இருந்த இருவரும் 'சீட் பெல்ட்' அணியாததே உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், அந்த காரின் பின்பக்க இருக்கைகள் இருக்கும் பகுதியில் 'ஏர்பேக்' இல்லை என்றும் கூறப்பட்டது. இந்த விபத்து மட்டுமல்ல, பல விபத்துகளில் உயிரிழப்புகளும், பலத்த காயங்களும் 'சீட் பெல்ட்' அணியாததால்தான் ஏற்படுகிறது. இவ்வளவுக்கும் கடந்த 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து பின்சீட்டுகளில் உள்ளவர்களும் 'சீட் பெல்ட்' அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு 'சீட் பெல்ட்' அணியாதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க விதி இருந்தாலும், அதை யாரும் பின்பற்றுவதில்லை என்கிறார், மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி.

மேலும் இப்போது, முன்சீட்டில் அமர்ந்து கார் ஓட்டுபவரும், பக்கத்தில் அமர்ந்து இருப்பவரும் 'சீட் பெல்ட்' அணியாவிட்டால் அலாரம் சத்தம் கேட்கிறதோ, அதுபோல பின்சீட்டில் அமர்ந்து இருப்பவர்களும் 'சீட் பெல்ட்' அணியாவிட்டால் அலாரம் சத்தம் கேட்பது கட்டாயமாக்கப்படும் வகையில், அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் மத்திய மந்திரி அறிவித்துள்ளார். இப்போது பொதுமக்கள் கருத்தை கேட்கும் வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. பின்சீட்டில் 3 பேர், 4 பேர் உட்காரும் நிலையில், இது சாத்தியமாக முடியுமா?. மேலும், காரில் ஏர்பேக்குகள் பொருத்துவதும் உயிரிழப்பை தடுக்கும், இதற்கு கூடுதலாக ரூ.18 ஆயிரம் தான் செலவாகும். ஆனால், இதையெல்லாம் விதிகள் மூலமாகவோ, சட்டத்தின் மூலமாகவோ நடைமுறைக்கு கொண்டுவந்துவிட முடியாது. பொதுமக்களுக்கு இதுகுறித்த விளம்பரங்கள் மூலம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும்.


Next Story