மராட்டியத்தில் எதிர்பாராத அரசியல் திருப்பம் !


மராட்டியத்தில் எதிர்பாராத அரசியல் திருப்பம் !
x

“காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்பதையே தன் லட்சியமாகக் கொண்ட பா.ஜ.க., காங்கிரஸ் ஆண்ட பல மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

"காங்கிரஸ் இல்லாத இந்தியா" என்பதையே தன் லட்சியமாகக் கொண்ட பா.ஜ.க., காங்கிரஸ் ஆண்ட பல மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இப்போது காங்கிரஸ் ஆதரவோடு மராட்டியத்தில் இயங்கி வந்த சிவசேனா அரசை மாற்றி, பா.ஜ.க. ஆதரவோடு சிவசேனா அதிருப்தியாளர்கள் ஆட்சி அமைத்துள்ளனர். மராட்டிய மாநிலம், குறிப்பாக அந்த மாநில தலைநகர் மும்பை மராட்டியர்களோடு, இந்தியா முழுவதிலும் உள்ள பிற மாநிலத்தவர், குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வாழும் இடமாகும். 1995-ல் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்து, தேர்தலில் போட்டியிட்ட சிவசேனா வெற்றி பெற்று, அதுவரையில் காங்கிரசின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த மராட்டியத்தில் ஆட்சி அமைத்தது. 1999 வரையில் ஆட்சியில் இருந்தது. இதையடுத்து 2014 வரையில் காங்கிரஸ் கட்சி அரசுதான் இருந்தது.

2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பொறுப்பேற்று, பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. மறுபடியும் 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின் ஏற்பட்ட முதல்-மந்திரி பதவி எந்த கட்சிக்கு என்ற போட்டியில், 25 ஆண்டுகளாக தோழமை கட்சிகளாகவும், கூட்டணி கட்சிகளாகவும் இருந்த பா.ஜ.க.- சிவசேனா கூட்டணி முறிந்தது. ஒரு மாதம் ஜனாதிபதி ஆட்சிக்கு பிறகு, மீண்டும் 2-வது முறையாக தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்து, 80 மணி நேரம் மட்டுமே முதல்-மந்திரியாக இருந்தார். பின்னர் நேர் எதிர் கொள்கைகளை கொண்டு இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளோடு கூட்டணி வைத்து சிவசேனா ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியானார். 288 இடங்கள் கொண்ட மராட்டிய சட்டசபையில் பா.ஜ.க. 105 இடங்களை கொண்டிருந்தது. ஆனால் பா.ஜ.க. ஆட்சி அமைக்கக்கூடாது என்ற உறுதிப்பாட்டில், 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியும், 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியும், 56 இடங்களில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சிக்கு ஆதரவு அளித்து, 'மகா விகாஸ் அகாடி' என்ற பெயரில் கூட்டணி ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்தன.

இந்த நிலையில், சிவசேனா மந்திரியாக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 39 அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினர். இவர்கள் அசாம் மாநிலத்தில் கவுகாத்தியில் ஒரு வாரமாக தங்கி இருந்தனர். கவர்னர் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். இதற்கிடையில் 16 அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதிநீக்க நோட்டீசை துணை சபாநாயகர் அனுப்பினார். கவர்னரின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர சிறப்பு கூட்டம் நடத்த தடை இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தனக்கு சட்டசபையில் பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்த உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியையும், மேல் சபை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார்.

இப்போது மீண்டும் அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. ஆதரவோடு யாரும் எதிர்பாராத வகையில், ஆட்டோ டிரைவராக வாழ்க்கையை தொடங்கிய ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். முதல்-மந்திரியாக பொறுப்பேற்பார் என்று கடைசி வரையில் பேசப்பட்ட பா.ஜ.க.வின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பதவி பிரமாணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை அளித்துள்ளது. சிவசேனா-பா.ஜ.க. ஆட்சி அமைத்துவிட்டது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா பெயரிலேயே ஆட்சி அமைப்பதற்கு சட்டரீதியாக எந்த தடையும் இல்லை. அரசியல் சட்டத்தின் 10-வது அட்டவணை 4-வதுபாராவில், ஒரு கட்சியில் இருந்து மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் பிரிந்தால் தகுதி நீக்கத்துக்கு உட்பட மாட்டார்கள். அதே கட்சியின் பெயரிலும் இயங்கலாம், வேறு எந்த கட்சியிலும் சேரலாம், புதிய கட்சியை தொடங்கலாம் என்ற வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.


Next Story