இந்திய மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்!


இந்திய மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்!
x

நாட்டில் குறிப்பாக ராணுவத்தில், விமானப்படையில் ஹெலிகாப்டர் விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன.

நாட்டில் குறிப்பாக ராணுவத்தில், விமானப்படையில் ஹெலிகாப்டர் விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன. கடந்த 3-ந்தேதி காலை 10 மணிக்கு அருணாசலபிரதேசம் தவாங் பகுதியில் எல்லைப்புறத்துக்கு அருகில் ஹெலிகாப்டரில் ராணுவ விமானப்பிரிவு படையைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் சவுரவ் யாதவ் ஒரு சேட்டக் ரக ஹெலிகாப்டரை ஓட்டிக்கொண்டு சென்றார். அவருடன் துணை விமானியாக மேஜர் ஒருவர் இருந்தார். அப்போது திடீரென்று அந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதில், இருவரும் படுகாயமுற்ற நிலையில், அருகில் இருந்த ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், லெப்டினன்ட் கர்னலை காப்பாற்ற முடியவில்லை. அவர் உயிரிழந்தார்.

இதுபோன்ற ஹெலிகாப்டர் விபத்துகள் தொடர் கதையாகிவிட்டன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ராணுவத்திலுள்ள 45 பேர் ஹெலிகாப்டர் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இதற்குக் காரணம் நம்மிடமுள்ள ஹெலிகாப்டர்கள் மிகவும் பழையதாகிவிட்டதே. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் சீட்டா, சேட்டக் ஹெலிகாப்டர்களும், மிக்-21 ரக விமானங்களும் மிகவும் பழையதே, இந்த ஹெலிகாப்டர்களெல்லாம் 1960-1970-ம் ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வந்தவையாகும். அவற்றை மாற்றவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்துவருகிறது. இந்த ஹெலிகாப்டர்கள் ஒற்றை எஞ்ஜின் கொண்டு இயங்குபவை. பாதுகாப்புக்கு உகந்தவை அல்ல. நவீன சாதனங்கள் இதில் இல்லை.

இத்தகைய சூழ்நிலையில், இலகு ரக ஹெலிகாப்டர்கள், அதுவும் இரட்டை எஞ்ஜின் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் இருந்தால், போர் முனையில் ஆயுதம் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்வதற்கும், எதிரிகளை தாக்குவதற்கும், ரோந்து பணிகளுக்கும் மட்டுமல்லாமல், உள்நாட்டிலும் பேரிடர் நேரங்களில் மீட்பு பணிகளுக்கும், உணவு பொட்டலங்கள் வழங்குவதற்கும் மிகவும் தேவை என கோரப்பட்டது. 1999-ம் ஆண்டு கார்கில் போரில் இந்திய ராணுவம் வெற்றிபெற்று இருந்தாலும், அப்போது வான்வழி தாக்குதல் நடத்த போதுமான ஹெலிகாப்டர்கள் இல்லாதநிலை உணரப்பட்டது. 2020-ல் கிழக்கு லடாக் பகுதியில் 2 இலகு ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு, மிக துல்லியமாக எதிரிகளின் நடமாட்டத்தை தெரிவித்தது.

இதையெல்லாம் கருத்தில்கொண்டு, விமானப்படைக்கும், ராணுவத்துக்கும் வருகிற ஆண்டுகளில் 160 இலகு ரக ஹெலிகாப்டர்கள் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி, "இந்தியாவில் தயாரிப்போம்-உலகத்துக்காக உருவாக்குவோம்" என்ற கொள்கை லட்சியத்தை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறார். அந்த பாதையில் செல்லும் விதமாக, இந்துஸ்தான் எரோநாட்டிக்ஸ் நிறுவனம், அதாவது எச்.ஏ.எல். நிறுவனத்திடம் முதல் கட்டமாக இரட்டை எஞ்ஜின் கொண்ட15 ஹெலிகாப்டர்கள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3,887 கோடியாகும். இதுதவிர ரூ.377 கோடிக்கு உள்கட்டமைப்பு வசதிக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 10 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையிலும், 5 ஹெலிகாப்டர்கள் ராணுவத்திலும் பயன்படுத்தப்படும். இப்போது முதலாவதாக 4 ஹெலிகாப்டர்களை விமானப்படைக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் அர்ப்பணித்துள்ளார். முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர்களில் 45 சதவீத உதிரி பாகங்கள் இங்கேயே உற்பத்தி செய்யப்பட்டவையாகும். விரைவில் இது 55 சதவீதமாக உயரப்போகிறது. ஹெலிகாப்டரின் எஞ்ஜின் எச்.ஏ.எல். நிறுவனத்தில்தான் தயாரிக்கப்பட்டது. அனைத்து வானிலையிலும், இரவிலும், பகலிலும் போர் முனையில் மட்டுமல்லாமல், வனப்பகுதியிலும் பறக்கும் திறன்கொண்ட இந்த ஹெலிகாப்டர் 20 ஆயிரம் அடி உயரத்தில் கூட பறக்கும் வல்லமை கொண்டது.

ஏற்கனவே, சமீபத்தில் ஐ.என்.எஸ்.விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை இந்தியாவிலேயே தயாரித்த பெருமைமிக்க புகழ் மகுடத்தில், இப்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிரசாந்த் என்று பெயரிடப்பட்ட இந்த ஹெலிகாப்டர்கள் மேலும் ஒளிவீசும் வைரக்கல்லாகும். அனைத்து ராணுவ தளவாடங்களையும் இந்தியாவிலேயே தயாரித்து, ராணுவ தளவாடங்களில் சுயசார்பு இந்தியா என்ற பெயரை அடையவேண்டும், இதன் மூலம் பெருமளவு சென்று கொண்டிருக்கும் இறக்குமதி செலவையும் குறைக்க முடியும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.


Next Story