கேட்டால்தான் கிடைக்கும்!


கேட்டால்தான் கிடைக்கும்!
x

பொதுவாக மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்திலுள்ள துறைகள் மத்திய பட்டியலிலும், மாநில அரசின் நிர்வாகத்திலுள்ள துறைகள் மாநில பட்டியலிலும், இரு துறைகளுக்கும் பொதுவான துறைகள் பொதுப் பட்டியலிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுவாக மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்திலுள்ள துறைகள் மத்திய பட்டியலிலும், மாநில அரசின் நிர்வாகத்திலுள்ள துறைகள் மாநில பட்டியலிலும், இரு துறைகளுக்கும் பொதுவான துறைகள் பொதுப் பட்டியலிலும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பல மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எடுத்துக்காட்டாக, மருத்துவம் மாநில பட்டியலில் இருந்தாலும், மருத்துவ கல்வி பொதுப் பட்டியலில்தான் இருக்கிறது. அதனால்தான், மாநில பட்டியலிலுள்ள மருத்துவத்துக்கு தொடர்புள்ள 'நீட்' தேர்வை ரத்துசெய்ய மாநில அரசால் முடியாமல் இன்னும் தொடர்ந்து மத்திய அரசாங்கத்தின் கதவுகளை தட்டிக்கொண்டே இருக்கிறது. மத்திய பட்டியலிலுள்ள துறைகள் மற்றும் பொதுப்பட்டியலிலுள்ள துறைகள் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து வலியுறுத்தி வருகிறார்.

இதுபோல, அமைச்சர்களும் தொடர்புள்ள துறைகளின் மந்திரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகிறார்கள். அதிலும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கடி மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மற்றும் செயலாளரை சந்தித்து மனு கொடுத்துவருகிறார். அதுபோல, சமீபத்தில் டெல்லி சென்று மத்திய ஆயுஷ் துறை மந்திரி சர்பானந்தா சோனோவாலை சந்தித்து பேசியதன் விளைவாக 100 ஆயுஷ் நலவாழ்வு மையங்களை தொடங்குவதற்கு அவர் உறுதியளித்தார். நாமக்கல்லில் 50 படுக்கைகள் கொண்ட சித்தா மருத்துவமனை தொடங்கவும், பழனியில் தமிழக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கவும் ஒப்புதல் கொடுத்தார்.

மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை போல, இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில், அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழ்நாட்டில் தொடங்க கோரிக்கை விடுத்தவுடன், "இது நல்ல கோரிக்கை. நான் பரிசீலிக்கிறேன்" என்று பதிலளித்தார். அவருடைய பதில், அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், அவருடன் சென்ற அதிகாரிகளுக்கும் மிக்க நம்பிக்கையைக் கொடுத்தது.

தமிழ்நாட்டில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாளையங்கோட்டையில்தான் முதலில் தொடங்கப்பட்டது. எனவே, அங்கு இந்த அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தையும் தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என்பது டாக்டர் மானெக்சா உள்பட பல சித்த மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. அடுத்து, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் ஆமதாபாத்துக்கு செல்ல வேண்டியதிருந்ததால், "மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் உங்கள் கோரிக்கை மனுவை கொடுங்கள், நான் பரிசீலித்து உடனடியாக செய்கிறேன்" என்று தொலைபேசியில் கூறியதைத்தொடர்ந்து, அமைச்சர் மத்திய அரசாங்க செயலாளரை நேரில் சந்தித்து, 8 கோரிக்கைகள் கொண்ட மனுவை கொடுத்தார். அதில், தமிழ்நாட்டில் உள்ள தேசிய நலவாழ்வு குழுமத்துக்கு முதல் தவணையான ரூ.805 கோடியை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கை மனு கொடுத்த அடுத்த நாளே நிறைவேற்றப்பட்டது. மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து நிறைவேற்றவேண்டும், கோவை மாவட்டத்திலும் 2-வது எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும், மருத்துவ கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகளை மத்திய அரசாங்கத்தின் 60 சதவீத நிதியுதவியுடன் தொடங்கவேண்டும், தமிழ்நாட்டிலுள்ள 30 அரசு மருத்துவ கல்லூரிகளில் நர்சிங் கல்லூரிகள் தொடங்க அனுமதி, உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் தங்கள் படிப்பை இந்திய மருத்துவ கல்லூரிகளில் தொடர அனுமதி போன்ற பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.

இந்த பயணம் ஒரு வெற்றிகரமான பயணம். இதுபோல, தமிழக அரசின் பல கோரிக்கைகளை வலியுறுத்த அமைச்சர்கள் அடிக்கடி மத்திய மந்திரிகளை சந்திக்கவேண்டும், துறை செயலாளர்கள் மத்தியில் உள்ள அமைச்சக செயலாளர்களை சந்திக்கவேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அவைகளிலும் ஓங்கி குரல் எழுப்பவேண்டும். தட்டினால்தான் கதவு திறக்கும், கேட்டால்தான் கொடுக்கப்படும் என்பது உலக நியதி.


Next Story