மீண்டெழுந்து வரவேண்டும் பி.எஸ்.என்.எல்.!


மீண்டெழுந்து வரவேண்டும் பி.எஸ்.என்.எல்.!
x

தமிழக மக்கள் இன்று எத்தனையோ தனியார் நிறுவனங்களின் செல்போன் சேவையை பயன்படுத்தினாலும், குக்கிராமங்கள், மலைப்பகுதிகள் உள்பட பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்துவது, மத்திய அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சேவையைத்தான்.

தமிழக மக்கள் இன்று எத்தனையோ தனியார் நிறுவனங்களின் செல்போன் சேவையை பயன்படுத்தினாலும், குக்கிராமங்கள், மலைப்பகுதிகள் உள்பட பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்துவது, மத்திய அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சேவையைத்தான். ஆனால், சமீப காலங்களாக பி.எஸ்.என்.எல். சேவை பெருமளவில் பின்தங்கி இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் இப்போது, 5 ஜி அலைக்கற்றை ஏலத்தை எடுத்திருக்கிறது. முதல்கட்டமாக டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தாவில் தீபாவளியையொட்டி 5ஜி சேவை கிடைக்கும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், பி.எஸ்.என்.எல். இன்னும் 4ஜி-யை கூட எட்டவில்லை.

இதனால், தனியார் சேவைகளின் இணையதள பயன்பாடு வேகம் அதிகமாக இருக்கிறது. அழைப்புகள் கிடைப்பதும், தகவல்கள் அனுப்புவது, பெறுவது எல்லாமே மிக நன்றாக இருக்கும் நிலையில், பி.எஸ்.என்.எல். சேவை மிக பின்தங்கியிருக்கிறது. இப்படி எவ்வளவோ குறைபாடு இருந்தாலும், கிராமங்களில் பி.எஸ்.என்.எல். சேவை வைத்திருப்பவர்களுக்குதான் இணைப்பு கிடைக்கிறது. மற்ற தனியார் சேவைகள் நகர்ப்புறங்களையே மையப்படுத்தி இருக்கிறது. கிராமப்புறங்களை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி இழப்பில் இருப்பதால், 4ஜி ஏலத்திலோ, 5ஜி ஏலத்திலோ பங்கேற்கவில்லை.

இந்த நிறுவனத்தை சீரமைக்க மத்திய அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்தது. 2012-ம் ஆண்டு டிசம்பரில் சாம் பிட்ரோடா தலைமையில் அமைந்த நிபுணர் குழு, 15 அம்ச திட்டத்தை வகுத்துக்கொடுத்தது. அதை அரசாங்கம் முழுமையாக இன்னும் செயல்படுத்தவில்லை. அதில் ஒன்றுதான், ஏராளமான ஊழியர்களை தன்னகத்தே வைத்திருக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது. இதைத்தொடர்ந்து, 78 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்டு பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு நிலுவைத்தொகையாக ரூ.30 ஆயிரம் கோடி கொடுக்க வேண்டியிருந்தது.

அந்த நேரத்தில்தான், அதாவது 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு மத்திய அரசாங்கம் ரூ.74 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கியது. இப்போது மீண்டும் ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் கோடி வழங்குகிறது. இதில் ரூ.43 ஆயிரத்து 964 கோடிதான் நேரடி நிதியுதவியாக வழங்குகிறது. மற்றபடி, 4ஜி சேவையை பெறுவதற்கு, ரூ.44 ஆயிரத்து 993 கோடி உள்பட பல கடன்களை அடைப்பதற்கு நிதியுதவி அளிக்கிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் கண்டிப்பாக மீண்டெழுந்தாக வேண்டும். அப்போதுதான் ஒரு போட்டி இருக்கிறது என்ற வகையில், தனியார் சேவைகளின் கட்டணம் உயராமல் பார்த்துக்கொள்ள முடியும்.

விரைவில் 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் கொண்டுவந்து, கடனில் இருந்து எழுந்து, லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற வேண்டும். 2007-ல் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வருவாய் ரூ.40 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் ரூ.18 ஆயிரத்து 420 கோடியாகத்தான் இருந்தது. அடுத்த ஆண்டே பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் லாபம் தலைகீழாக சரிந்து, ஏர்டெல்லின் லாபம் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் எகிறிவிட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பொறுத்தமட்டில், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு தேவையான சாதனங்களை வாங்க வேண்டுமென்றால், டெண்டர் போட்டு யார் குறைவான தொகையை குறிப்பிட்டு இருக்கிறார்களோ, அவர்களுக்கே வழங்கும் முறை இன்னும் இருக்கிறது.

தரமான சாதனங்களை வாங்க வேண்டுமென்றால், குறைந்த விலையை கொடுத்து வாங்கிவிட முடியாது. இதுபோல, ஊழியர்களுக்கும் பதில் சொல்லும் பொறுப்பு இருந்தால்தான், தனியார் சேவை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இணையாக பணியாற்றி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பள்ளத்தில் இருந்து தூக்கி மேட்டுக்கு கொண்டுவர முடியும். மக்களுக்கு இன்னமும் பி.எஸ்.என்.எல். மீது இருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக, அனைத்து ஊழியர்களும் சபதம் எடுத்து பணியாற்றி, முதல் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story