கோவிலுக்குள் செல்போன் கொண்டு போக தடை


கோவிலுக்குள் செல்போன் கொண்டு போக தடை
x

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்பது, தமிழ்நாட்டில் பண்டைய காலம் தொட்டு கூறப்படும் மறைமொழியாகும்.

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்பது, தமிழ்நாட்டில் பண்டைய காலம் தொட்டு கூறப்படும் மறைமொழியாகும். கோவில்களில் அருள்பாலிக்கும் மூலவர், உற்சவருக்கு விக்கிரக வழிபாடு, எந்திர வழிபாடு, மந்திர வழிபாடு என்று 3 நிலைகளில் இந்துக்கள் வழிபாடு செய்கின்றனர். கோவிலை வெறும் பிரார்த்தனை மண்டபங்களாக பார்க்காமல், இறைவன் நமக்காக குடிகொண்டு இருக்கும் இடமாகவே பக்தர்கள் கருதி வழிபாடு நடத்துகிறார்கள். இறைவனின் அருளை அமைதியான முறையில் நடக்கும் கோவில் வழிபாட்டின் மூலமே பக்தர்கள் எளிதில் பெறமுடியும். அந்த அமைதிக்கு எந்தவித இடைஞ்சலும் இருக்கக்கூடாது.

அப்படி, கோவில் வழிபாட்டுக்கு செல்போன்கள் மூலம் இடையூறு ஏற்படக்கூடாது என்ற வகையில், சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவில். கடலோரம் அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் இது. இந்த கோவிலின் அர்ச்சகர் சீதாராமன், "திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், சுவாமிக்கு நடக்கும் அபிஷேகம், பூஜை, தீபாராதனைகளைக்கூட தங்கள் செல்போன்களில் பதிவு செய்கின்றனர். அங்குள்ள சிலைகளையும் படம் எடுக்கிறார்கள். செல்போன்களால் சாமி தரிசனம் செய்ய வரும் மற்ற பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, செல்போன் கொண்டுவர தடை விதிக்கவேண்டும்" என்று மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியபிரசாத் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், "கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளை அர்ச்சகர்களே வீடியோ எடுத்து தனிப்பட்ட யூடியூப் சேனல்களில் பதிவிடுகிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல. திருப்பதி கோவிலின் வாசலைக்கூட படம் எடுக்க முடியாது. ஆனால், தமிழ்நாட்டிலுள்ள கோவில்களில் சாமி சிலைகள் முன்னால் 'செல்பி' எடுக்கும் அளவுக்கு சுதந்திரம் அளிக்கிறார்கள். கோவில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. கோவில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடை அணியாமல் டி-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதையும் ஏற்க முடியவில்லை. திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்கவேண்டும்" என்று சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்பவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

இது வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். கோவிலுக்குள் செல்போன் மணி அடிக்கும்போதும், பேசும்போதும் இறைவனை வழிபட்டுக்கொண்டு இருக்கும் மற்ற பக்தர்களுக்கு கவன சிதறல் ஏற்பட்டு பிரார்த்தனை தடைபடும். கோவிலுக்கு வருபவர்களின் செல்போன்களை வாங்கி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருப்பதுபோல, பாதுகாப்பாக வைத்துவிட்டு, அவர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லும்போது திரும்பக்கொடுக்கும் வசதிகள் கோவில் நிர்வாகத்தால் அமைக்கப்படவேண்டும். இந்த தீர்ப்பு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, "இறைவன் சன்னிதானத்தில் பக்தர்கள் வழிபடுவதற்கு அமைதியான ஒரு சூழ்நிலை இருக்கவேண்டும். வழிபடுபவர்களுக்கும் அவர்களின் மனநிலை ஒருமுகமாக இருக்கவேண்டும் என்பதால், கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்ததை வரவேற்கிறோம். இதை படிப்படியாக அனைத்து கோவில்களிலும் உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி செயல்படுத்துவோம்" என்ற நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆக நீதிமன்றத்தின் தீர்ப்பாலும், அமைச்சர் சேகர்பாபுவின் அறிவிப்பாலும், இனி தமிழக கோவில்களில் செல்போன் சத்தம் இல்லாமல் அமைதி தவழும். கோவில்களின் புனிதம் காப்பாற்றப்படும்.


Next Story