வரலாற்றில் சென்னை செஸ் ஒலிம்பியாட்


வரலாற்றில் சென்னை செஸ் ஒலிம்பியாட்
x

உலக வரலாற்றில் சென்னை பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை 44-வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடக்கிறது.

உலக வரலாற்றில் சென்னை பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை 44-வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடக்கிறது. 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன. இதில் 189 அணிகள் பொது பிரிவு போட்டிகளிலும், 154 அணிகள் பெண்கள் பிரிவிலும் விளையாடுகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் உலகம் முழுவதிலும் இருந்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து 20 வீரர்கள் இதில் பங்கு பெறுகின்றனர். இது சாதாரண போட்டியில்லை. எப்படி ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறதோ?, அதுபோல இது செஸ் விளையாட்டுக்கான ஒலிம்பிக் போட்டியாகும்.

1924-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இல்லாமல் செஸ் விளையாட்டுக்கு தனியாக ஒலிம்பிக் போட்டி நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆசியாவில் இந்த போட்டியை நடத்த இதுவரை 2 முறைகள் மட்டுமே வாய்ப்புகள் கிடைத்தன. 1986-ல் துபாயிலும், 1992-ல் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் மட்டுமே நடந்திருக்கிறது. இந்த ஆண்டு போட்டியே ரஷியாவில் நடத்தத்தான் திட்டமிடப்பட்டது. ஆனால் ரஷியா-உக்ரைன் போர் நடந்துகொண்டு இருக்கும் சூழ்நிலையில், சர்வதேச செஸ் விளையாட்டு சம்மேளனம் அங்கு நடத்த விரும்பவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அகில இந்திய செஸ் சம்மேளன தலைவர் பரத்சிங் சவுகான், சர்வதேச செஸ் சம்மேளன தலைவர் ஆர்க்கடி துவோர்கோவிச்சுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் எதிர்காலத்தில் இந்தியா சர்வதேச செஸ் போட்டிகளை நடத்த தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைக்கண்டு ஆச்சரியப்பட்ட சர்வதேச செஸ் சம்மேளன தலைவர், 'செஸ் ஒலிம்பியாட்?' என்று மட்டும் கேட்டிருந்தார். உடனே இந்திய சம்மேளன தலைவர் 'இந்தியா தயாராக இருக்கிறது' என்று உறுதிபட தெரிவித்தார். பல நாடுகள் இந்த போட்டியை நடத்த அணிவகுத்து நிற்கும் நிலையில் இந்தியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. எங்கு நடத்துவது? என்று பரிசீலனை நடந்த நிலையில், டெல்லியா? சென்னையா? என்று கேள்வி எழுந்தது. முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பெருமை தமிழ்நாட்டுக்கு கிடைக்கவேண்டும் என்ற அரும்நோக்கில் சென்னையில் நடத்த முழு முயற்சிகளையும் எடுத்தார். அதில் வெற்றியும் கண்டார். 'சும்மா கிடைத்ததல்ல இந்த சுதந்திரம்' என்பார்கள். அதுபோல சென்னையில் நடத்தும் பெரும்பேறும் சும்மா கிடைத்துவிடவில்லை.

இந்த போட்டியை நடத்தும் நாட்டின் செஸ் சம்மேளனம், சர்வதேச செஸ் சம்மேளனத்துக்கு ஒரு கோடி அமெரிக்க டாலரை (ஏறத்தாழ ரூ.78 கோடி) உத்தரவாத தொகையாக கட்டவேண்டும். தமிழக அரசு இந்த தொகையை கட்டிவிட்டது. சென்னையில் எப்படி நடத்தப் போகிறார்களோ? என்று எல்லோரும் நினைத்த நேரத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பம்பரமாக சுழன்று எடுக்கும் முயற்சிகளை பார்த்தால், இதுவரை எந்த நாட்டிலும் நடக்காத அளவுக்கு மிக சிறப்பாக நடக்கத்தான் போகிறது என்று எல்லோரும் வியந்து நிற்கிறார்கள். தலைமை செயலாளர் இறையன்புவை தலைவராகவும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அபூர்வாவையும் கொண்ட சிறப்பு குழு அனைத்து ஏற்பாடுகளையும் விறுவிறுப்பாக செய்கிறது.

இப்போது கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது. இந்த போட்டிக்கான இலச்சினை (logo) மற்றும் தம்பி என்ற போட்டி சின்னத்தையும் (mascot) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். செஸ் ஒலிம்பியாட்டின் சின்னம், முதல்-அமைச்சரின் சிந்தையில் உருவானது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையுடன் செஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் காய்களில் ஒன்றான குதிரை முகத்துடன் கைகூப்பி வரவேற்பதுபோல அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் மேற்புறத்தில் 'தம்பி என்று தமிழிலும், கீழே வணக்கம் தமிழ்நாடு' என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. உலகம் என்றென்றும் இந்த போட்டிகளையும், தமிழ்நாட்டையும், இதை ஏற்பாடுசெய்த தமிழக அரசையும், குறிப்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றியும் பசுமையான நினைவுகளை வைத்து போற்றும், புகழும்.


Next Story