மன தைரிய உணர்வுகளை கற்றுக்கொடுக்க வேண்டும்!


மன தைரிய உணர்வுகளை கற்றுக்கொடுக்க வேண்டும்!
x

பள்ளிக்கூடத்துக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மென்மையான உள்ளத்துக்கு சொந்தமான பிஞ்சு மனம் கொண்டவர்கள்.

பள்ளிக்கூடத்துக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மென்மையான உள்ளத்துக்கு சொந்தமான பிஞ்சு மனம் கொண்டவர்கள். மேல்நிலை பள்ளிக்கூட படிப்பை முடிக்கும்போது, பெரும்பாலானவர்களுக்கு 17 வயதுதான் ஆகியிருக்கும். ஓட்டுபோடும் வயதுகூட வந்திருக்காது. அவர்களை அறிவாற்றல் மிக்கவர்களாக மாற்றுவதற்கு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், அதை மட்டுமே படிக்கும் மாணவர்கள், ஏதாவது சவால்கள் வந்தால், அதை தாங்க முடியாமல் துவண்டு போய்விடுகிறார்கள்.

தகவல் தொழில்நுட்பத்தில் கரைகண்ட மாணவர்களும், மாணவிகளும் செல்போன் மூலம் தங்கள் ஆற்றலை விசாலமாக்கிக் கொள்கிறார்கள். ஆனால், பிரச்சினைகள் வந்தால், அதை எதிர்நோக்க துணிவில்லாமல் பயந்துபோய் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலமாக அடிக்கடி நடக்கின்றன. 'நீட்' தேர்வு எழுத பயந்தும், தேர்வு சரியாக எழுதவில்லையே என்ற அதிர்ச்சியிலும் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் மட்டுமல்லாமல், எதற்காக என்றே தெரியாத தற்கொலைகளும் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன.

தந்தை புதிய செல்போன் வாங்கித்தரவில்லையே என்ற ஏக்கத்தில்கூட, ஒரு மாணவர் தற்கொலை செய்திருக்கிறார். ஒரு மாணவர் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சி ஒன்றை பார்க்க சென்றதால், பெற்றோர் திட்டினார்கள் என்பதற்காக தற்கொலை செய்துள்ளார். பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, பக்கத்தில் இருக்கும் மாணவருடன் பேசிக்கொண்டிருந்ததை ஆசிரியர் கண்டித்ததால், ஒரு மாணவன் தற்கொலை செய்திருக்கிறான். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 2011-ம் ஆண்டு 849 மாணவர்கள் தற்கொலை என்று தொடங்கி, கடந்த ஆண்டு 940 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் 525 பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள். ஆக மாணவர்கள் தற்கொலை ஒரு தொடர்கதையாகிவிட்டது.

சின்னச்சின்ன பிரச்சினைகளுக்காக வாழ்க்கையையே முடித்துக்கொள்ளும் எண்ணம் மாணவர்களுக்கு வருவதை உடனடியாக போக்கியாகவேண்டும். வாழ்க்கை பாதையில் முதல் கட்டத்தைத்தான் தாண்டப்போகும் நிலையிலுள்ள அவர்கள், இன்னும் போகப்போக எவ்வளவோ நிலைமைகளை எதிர்நோக்க வேண்டிய நிலையில், அவர்களுக்கு மன தைரியம் நிச்சயமாகவேண்டும். தமிழக அரசின் சமூக பாதுகாப்புத்துறை அனைத்து மாணவர்களுக்கும் நன்னெறி பண்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பள்ளிக்கூடங்களில் எந்தெந்த வகையில் கல்வியை மேற்கொள்ளவேண்டும் என்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு நீதிநெறி கதைகள், தெனாலிராமன் கதைகள், காப்பிய கதைகள், நாட்டுப்பற்றை ஊட்டும் சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகள் போன்ற நல்லொழுக்க கதைகளையும், சுத்தம் கல்வி தரும், மாணவ, மாணவிகளிடையே அமைதி கலாசாரத்தை ஊக்குவித்தல், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், குடும்ப உறவு முறைகளின் முக்கியத்துவம் போன்றவை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று கூறி, எந்தெந்த மாதங்களில் எந்தெந்த வகையிலான நன்னெறி பண்புகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பது குறித்தும் பட்டியல் அனுப்பியுள்ளது. இந்த சூழ்நிலையில், இப்போது 'நீட்' தேர்வு எழுதியவர்களுக்கு மனநல ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்க தமிழக அரசு செய்த ஏற்பாடுகள் பாராட்டுக்குரியது.

இதெல்லாம் நிச்சயம் வரவேற்கத் தக்கதுதான். ஆனால், சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். மாணவர்களுக்கு கொடூரமான தற்கொலை உணர்வுகள் வராத வகையில், எதையும் தாங்கும் இதயத்தை கொண்டவர்களாக்கும் மனதிட உணர்வுகளை ஏற்படுத்தும் வகையில், பாடங்கள் இடம்பெறவேண்டும். மனநல ஆலோசகர்களை கொண்டு, அவர்களுக்கு வகுப்புகள் நடத்தவேண்டும். தங்கள் மனதிலுள்ள குறைகளை, ஏமாற்றங்களை, தோல்வி உணர்வுகளை ஒரு ஆசிரியையிடமோ, ஆசிரியரிடமோ பகிர்ந்துகொள்ளும் வகையில் உறவுகள் மேம்படவேண்டும். தேசிய மாணவர் படை பயிற்சிகள், கராத்தே வகுப்புகள், தற்பாதுகாப்பு பயிற்சிகள் போன்றவற்றில் ஒருவர் பாக்கி இல்லாமல், அனைவருக்கும் பயிற்சி அளிக்கவேண்டும். எல்லா மாணவர்களுக்கும் நெஞ்சிலே உறுதி இருந்தால், தற்கொலை உணர்வு அவர்கள் பக்கத்தில்கூட வராது. மலர்ந்து மணம் வீச வேண்டிய பருவத்தில் பிஞ்சு மொட்டுகளே கருகும்நிலை இனி தமிழ்நாட்டில் ஒருபோதும் நடக்கக்கூடாது.


Next Story