மாவட்டத்துக்கு 75 நீர்நிலைகள் மேம்பாடு


மாவட்டத்துக்கு 75 நீர்நிலைகள் மேம்பாடு
x

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பாக பெய்யும் அளவைவிட, மிக அதிகமாக பெய்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பாக பெய்யும் அளவைவிட, மிக அதிகமாக பெய்து இருக்கிறது. "மழைத்துளி.. மழைத்துளி.. மண்ணில் சங்கமம்" என்ற வகையில், மண்ணில் சங்கமமாகும் மழைத்துளியை வீணாக்காமல் சேகரிக்கும் முனைப்பில், தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. நீர் நிலைகளில் அதிக அளவு ஆக்கிரமிப்பு இருக்கிறது. இதில் கட்சி வேறுபாடே கிடையாது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களில், அனைத்து கட்சி கொடிகளும் பறப்பதைப் பார்க்கலாம்.

இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்பேரில், தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு மும்முரமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களுக்கு மின்சார வசதி, சாலை வசதி உள்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாகும். இத்தகைய சூழ்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி ஜம்மு-காஷ்மீர் சென்ற பிரதமர் நரேந்திரமோடி, தேசிய பஞ்சாயத்துராஜ் தின கொண்டாட்டத்தில் பங்கேற்றபோது, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை உருவாக்கி அல்லது மேம்படுத்தி புத்துயிர் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட 'அம்ரித் சரோவர்' என்ற முன்முயற்சியைத் தொடங்கிவைத்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியதை குறிக்கும் வகையில், அமிர்த பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை மேம்படுத்தி புத்துயிர் அளிப்பதே இதன் குறிக்கோளாகும். தமிழக அரசு எப்போதுமே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவதை தவறவிட்டதேயில்லை. தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் அமுதா மிக தீவிரமாக மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்தார். அதிகாரிகளின் கூட்டத்தைக்கூட்டி ஒருசில நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த நீர்நிலைகளை இந்த திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளலாம் என்பதை பல்வேறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் தேர்வு செய்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

தமிழ்நாட்டிலுள்ள 37 ஊரக மாவட்டங்களிலும், தலா 75 நீர்நிலைகள் என்ற வகையில், 2,775 நீர்நிலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால், இதற்கு கூடுதலாக மொத்தம் 3,765 நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டன. மத்திய அரசாங்க நிதி மட்டுமல்லாமல், தமிழக அரசின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதி உள்பட மாநில அரசு நிதியையும் கொண்டு இந்த திட்டம் செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 1,560 நீர்நிலைகளில் பணிகள் தொடங்கப்பட்டு, 816 நீர்நிலைகளில் பணிகள் முடிவடைந்துவிட்டது. இந்த பணிகளையெல்லாம் மேற்பார்வையிட 4,075 பஞ்சாயத்து அதிகாரிகளும், 3,115 பஞ்சாயத்து பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டனர். இந்த பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1,388 நீர்நிலைகளில் 50 சதவீத பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள்ளும், 2,081 நீர்நிலைகளில் 75 சதவீத பணிகள் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதிக்குள்ளும், 2,775 நீர்நிலைகளில் 100 சதவீத பணிகள் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதிக்குள்ளும் முடிக்கப்படவேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு கூட்டிய ஆய்வு கூட்டத்தில் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமுதா தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் அனைத்து மாநிலங்களையும்விட தமிழ்நாடு முன்னணியில், முதல் இடத்தில் இருக்கிறது என்ற பெயரை பெறவேண்டும். நீர்நிலைகளை மேம்படுத்துவதால், எவ்வளவு கூடுதலாக நீரை சேமிக்க முடிந்தது?, எவ்வளவு ஏக்கர் நிலத்தில் கூடுதலாக பயிர் சாகுபடி செய்ய முடிந்தது?, எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது? என்பது போன்ற விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பதில்தான் இந்த திட்டத்தின் வெற்றி இருக்கிறது. மேலும் 'அம்ரித் சரோவர்' திட்டத்தின்கீழ் மாவட்டத்துக்கு 75 நீர்நிலைகளை எடுத்துக்கொள்ளலாம், அதற்குத்தான் மத்திய அரசாங்க நிதி கிடைக்கும் என்றாலும், தமிழக அரசு இன்னும் கூடுதலாக நீர்நிலைகளை மேம்படுத்துவதற்காக எடுத்துக்கொண்டு, அதற்கு சிறப்பு நிதியை மத்திய அரசு தர வலியுறுத்தவேண்டும்.


Next Story