தமிழ்நாட்டில் உற்பத்தி பாதிக்குமா?


தமிழ்நாட்டில் உற்பத்தி பாதிக்குமா?
x

சீனாவில் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தால் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

'3 ஆண்டுகள் உலுப்பியது போதாதா, இன்னுமா உன் ஆட்டம்...', என்று உலகமே கவலைப்படும் அளவுக்கு அலை அலையாய் வந்து மக்களை பாதித்த கொரோனா, இப்போது மீண்டும் உருமாறி தன் கோர கரங்களை நீட்ட தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே கொரோனா உருமாறிக்கொண்டு வேறு வேறு முகத்தோடு உலகம் முழுவதும் உலா வந்து கொண்டு இருக்கிறது. சீனாவில் பி.எப்.7 என்ற உருமாறிய கொரோனா முதலில் ஆரம்பித்து இப்போது இந்தியா உள்பட பல நாடுகளில் தன் கால்தடத்தை பதித்துவிட்டது.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள கொரோனா தொற்று எக்ஸ்.பி.பி. தொற்று வகையாகும். இது பி.ஏ.2 உருமாறிய கொரோனாவின் உள்வகையாகும். ஆனால் சீனா உள்பட பல நாடுகளில் பரவி வரும் பி.எப்.7 வகை கொரோனா தொற்று, பி.ஏ.5-ன் உள்வகையாகும். இத்தகைய பி.ஏ.5 தொற்றுதான் தமிழ்நாட்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அதிகமாக கண்டறியப்பட்ட தொற்றாகும். சீனாவில் இப்போது கொரோனாவின் தாக்கம் அதிவேகமாக இருக்கிறது. ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடாதென, அதாவது 'ஜீரோ கோவிட்' என்பதை லட்சியமாகக்கொண்டு கடந்த மாதம் ஊரடங்கு உள்பட பல கடுமையான கட்டுப்பாடுகள் சீனாவில் விதிக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சீன அரசாங்கம் அனைத்து கட்டுப்பாடுகளையும் இந்த மாதம் 7-ந் தேதி விலக்கிக்கொண்டது.

விளைவு-கொரோனா பரவல் அதிகமாகிவிட்டது. ஷாங்காய் நகரில் மட்டும் 2½ கோடி மக்கள் வசிக்கிறார்கள். இந்த வாரம் இறுதியில் இதில் பாதி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாங்காய் மட்டுமல்ல, சீனாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இதுதான் நிலைமை. மருத்துவமனைகளெல்லாம் நிரம்பி வழிகின்றன. உயிரிழந்தவர்கள் உடல்கள் தகன நிலையங்களில் வரிசைகட்டி நிற்கின்றன. இதுமட்டுமல்லாமல் விரைவில் அங்கு உற்பத்தி பெரும் அளவில் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. அங்கு சில பொருட்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டால் அதன் எதிரொலியாக இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் சில பொருட்களின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

செல்போன், மின்னணு பொருட்கள், மோட்டார் வாகனங்கள், நுகர்வோர் பயன்பாட்டுக்காக அதிகமாக விற்பனை செய்யப்படும் பல பொருட்களுக்கான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் இப்போது உடனடியாக இந்த பொருட்களின் உற்பத்தி தடைபடாது. ஏனெனில் இன்னும் 4 வாரங்கள் முதல் 6 வாரங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் 'ஸ்டாக்' தொழிற்சாலைகளில் உள்ளன.

கடந்த 8 மாதங்களில் மட்டும் இந்தியாவில் இருந்து ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அளவில் செல்போன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 40 சதவீத செல்போன்கள் ஐபோன்களாகும். ஐபோன் தயாரிப்பில் புகழ்பெற்ற 'பாக்ஸ்கான்', 'பெகட்ரான்' ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. இதுபோல பல பெரிய மோட்டார் வாகன தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. எனவே சீனாவில் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தால் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 'சுயசார்பு இந்தியா' என்ற இலக்கை நோக்கி நடைபோடும் இந்தியா, இதுபோன்ற மூலப்பொருட்களுக்கு சீனாவை எதிர்பார்க்காமல் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.


Next Story