காலணி, தோல் தொழில்களில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு


காலணி, தோல் தொழில்களில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
x

பொதுவாக எந்த செயலிலும் ஒரு இலக்கை நிர்ணயித்து சென்றால்தான் வெற்றிகளை குவிக்கமுடியும். கால்பந்து விளையாட்டில்கூட கோல் போடுவதுதான் இலக்கு.

பொதுவாக எந்த செயலிலும் ஒரு இலக்கை நிர்ணயித்து சென்றால்தான் வெற்றிகளை குவிக்கமுடியும். கால்பந்து விளையாட்டில்கூட கோல் போடுவதுதான் இலக்கு. இதுபோல எந்த பணியிலும் ஒரு இலக்கு உண்டு. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு அமைத்தவுடன், 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.76 லட்சம் கோடி அளவில் பொருளாதார வளர்ச்சியை தமிழக அரசு அடையவேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கி வேகமாக பீடுநடை போட்டு வருகிறார்.

அந்த இலக்கை அடையவேண்டும் என்றால், தமிழ்நாட்டில் பெருமளவு முதலீடுகளை செய்யும் தொழில்களை மாநிலத்துக்குள் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஈர்த்தாக வேண்டும். இதுபோல குறு, சிறு, நடுத்தர தொழில்களையும் வளர்க்கவேண்டும். இதன்மூலம் நிறைய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியாக வேண்டும். அதற்கு முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், இதுவரை 7 முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமல்லாமல் கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகர்களிலும், துபாய் நாட்டிலும் நடத்தப்பட்டுள்ளன.

வளர்ச்சித்திட்டங்கள் என்பவை, வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வளர்ச்சித்திட்டங்களாக அமையவேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியதுபோல, தொழில் வளர்ச்சி மட்டுமல்லாமல், நிறைய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில்தான், கடந்த 15 மாதங்களுக்குள் தமிழக அரசு நடத்திய முதலீட்டு மாநாடுகள் மூலமாக 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அதன்மூலம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 727 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்து, 3 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு பெறும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொழில் வளர்ச்சிக்கும் ஒரு தனி கொள்கையை வகுத்து செயல்பட்டால் விரைவான முன்னேற்றத்தை அடைய முடியும். அந்தவகையில் நல்ல வளர்ச்சிக்கும். வேலைவாய்ப்புக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும் காலணி மற்றும் தோல் பொருட்களுக்கான கொள்கை அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 2025-ம் ஆண்டுக்குள் காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து, 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுதான் இந்த கொள்கையின் நோக்கமாகும். இந்திய அளவில் காலணி உற்பத்தியில் 26 சதவீதம் தமிழ்நாட்டின் பங்களிப்பாக இருக்கிறது. ஏற்றுமதியில் 45 சதவீதம் தமிழ்நாட்டின் பங்களிப்புதான். ஆக இந்தியாவில் தமிழ்நாடுதான் காலணி உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த புதிய கொள்கையினால் எடுக்கப்போகும் நடவடிக்கைகள், இந்த தொழில்களில் தமிழ்நாடு கோலோச்சும் நிலையை உருவாக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

தோல் இல்லாத காலணிகள்தான் வரப்போகும் காலங்களில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கிடும். இதை விளக்கிடும் வகையில், தோல் அல்லாத உற்பத்தி பொருட்கள்தான் சந்தையில் 70 சதவீதத்துக்கு மேல் விற்கப்படுகிறது என்பதால், இப்போது வெளியிடப்பட்டுள்ள கொள்கையில், தோல் அல்லாத காலணித்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தோல் அல்லாத காலணி தொழிலை எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற வகையில், தமிழ்நாடு முழுவதும் இதற்கான தொழிற்சாலைகளைத்தொடங்கி பரவலான வேலைவாய்ப்புகளை வழங்கவேண்டும். தொழில்துறையில் தமிழகம் மிக வேகமாக வளர்ச்சியை காணுகிறது என்ற வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் துறை அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள். காலணி மற்றும் தோல் பொருட்களுக்காக தனியாக கொள்கை வகுத்ததால், தொடக்கத்திலேயே இவ்வளவு வளர்ச்சிக்கு வழி கிடைத்ததைப் பார்க்கும்போது, இதுபோல அனைத்து தொழில்களுக்கும் தனி கொள்கை வகுக்க வேண்டும், அனைத்து தொழில்களிலும் வேகமான முன்னேற்றம் வரவேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.


Next Story