பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி !


பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி !
x

எல்லோருக்கும் கல்வி என்ற இலக்கை நோக்கி வேகமாகச் சென்ற தமிழ்நாடு, அநேகமாக அதை அடைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

எல்லோருக்கும் கல்வி என்ற இலக்கை நோக்கி வேகமாகச் சென்ற தமிழ்நாடு, அநேகமாக அதை அடைந்துவிட்டது என்றே சொல்லலாம். ஆனால், பிளஸ்-2 வகுப்பை முடித்த அனைவரும், மேற்படிப்புக்கு செல்லாதநிலை இருக்கிறது. இந்த ஆண்டு கலை கல்லூரிகளிலும் இடம் இருக்கிறது. என்ஜினீயரிங் கல்லூரிகளை எடுத்துக்கொண்டால், 3 சுற்று கவுன்சிலிங் முடிந்தபிறகுகூட மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரம் இடங்களில் 58 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி இருக்கின்றன. 25 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. மொத்தம் உள்ள 446 கல்லூரிகளில் 3 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்களிலும் மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள்.

ஆக, மாணவர்களின் உயர் கல்வியில் என்ன காரணத்துக்காக இந்த தேக்கநிலை என்று ஆராய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஏன் உயர் கல்வியில் சேரவில்லை என்று பள்ளிக்கூடம் ரீதியாக ஆய்வு நடத்தி குறைகள் களையப்படும்" என்று கூறியது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். பாராட்டத்தக்கதாகும். இதைத்தொடர்ந்து, இவ்வாறு உயர்கல்வியில் தொடராத மாணவர்களுக்குள்ள பிரச்சினைகளை கண்டறிய அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிக் கூடங்களிலும் பெற்றோர்-மாணவர்கள் கூட்டம் நடந்தது. இதில் வறுமை, குடும்பசூழல், நிதி பற்றாக்குறை உள்பட பல காரணங்களால்தான் இத்தகைய மாணவர்கள் உயர்படிப்பை தொடரவில்லை என்று அறியப்பட்டது.

இந்த மாணவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டால், அவர்கள் வேலைக்கு சென்று சம்பாதிப்பது என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இப்போதெல்லாம் பல நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிய பிளஸ்-2 படித்தவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஓசூரில் உள்ள டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முழுக்க.. முழுக்க.. பிளஸ்-2 படித்த பெண்களையே வேலைக்கு எடுக்கிறது. தொடக்கத்தில் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வேலைக்கு பெண்களை எடுத்தது. பலத்த எதிர்ப்புக்கு பிறகு, இப்போது 1,016 தமிழ்நாட்டு பெண்களையும் வேலைக்கு எடுத்திருக்கிறார்கள். பிளஸ்-2 படித்த மேலும் 5 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்புக்கான வாய்ப்பு அங்கு இருக்கிறது, இதற்காக தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறை, வேலைவாய்ப்புத்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்த இருக்கின்றன. இது மட்டுமல்லாமல், மேலும் பல நிறுவனங்களுடனும் பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் இன்னசன்ட் திவ்யா மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பலனாக எச்.சி.எல். நிறுவனம் 2 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1 லட்சம் செலவில் பயிற்சி அளித்து அவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள முன்வந்துள்ளது. ஒரு ஆண்டு பயிற்சியில் 7-வது மாதத்தில் இருந்து மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகையையும் பெறலாம். மேலும், பல நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இந்த சீரிய முயற்சிகள் நிச்சயமாக பிளஸ்-2 படித்துவிட்டு மேல் படிப்பு படிக்க முடியாத இளைய சமுதாயத்துக்கு ஒளி மிகுந்த வழியைக் காட்டும். இந்த முயற்சி தொடரட்டும்.


Next Story