100 நாட்களில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்


100 நாட்களில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்
x

மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, விவசாயிகளை பசிப்பிணி போக்கும் மருத்துவர்கள் என்றே எப்போதும் குறிப்பிடுவார்.

மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, விவசாயிகளை பசிப்பிணி போக்கும் மருத்துவர்கள் என்றே எப்போதும் குறிப்பிடுவார். அத்தகைய பசிப்பணி போக்கும் மருத்துவர்களுக்கு இருந்த பிணி அதாவது இலவச மின்சார தேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்த்து வைத்துள்ளார். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த 2021-2022-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை ரூ.3,025 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது, அறிப்பு வெளியிடப்பட்டவுடனேயே 23-9-2021 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின்சார வாரிய வரலாற்றில் முதல் முறையாக ஒரு லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகளை வழங்கும் இந்த இமாலய சாதனை பணி 6 மாதங்களில் முடிக்கப்பட்டது. 16-4-2022 அன்று ஒரு லட்சமாவது விவசாயிக்கு மின் இணைப்பு ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளில் 2,20,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற இந்த 1½ ஆண்டுகளில் 1½ லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பது, அரசு தரப்பில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

ஒரு லட்சமாவது இணைப்பை பெற்ற கண்ணுப்பிள்ளை என்ற விவசாயி, நான் மிகச்சிறிய விவசாயி. இதுவரை ஒரு போகம் விளைவித்த நான் இனி இரண்டு போகம் விளைவிப்பேன். தமிழ்நாட்டுக்கே இது வரப்பிரசாத சாதனை என்று பாராட்டினார். ஒரு லட்சத்தோடு மு.க.ஸ்டாலின் விட்டுவிடவில்லை. இந்த ஆண்டு மானியக்கோரிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பில் முதல் அறிவிப்பாக தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும், விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடனும் நடப்பு 2022-2023-ம் ஆண்டில் 50 ஆயிரம் புதிய விவசாய இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஜெட் வேகத்தில் இந்த 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கடந்த 11-ந்தேதி நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த விழாவில் 20 ஆயிரம் பயனாளிகள் உட்கார்ந்து இருந்தனர். 50 ஆயிரம் பயனாளிகள் பெயர், முகவரி விவரங்கள் அடங்கிய புத்தகமும் தயாரிக்கப்பட்டு முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜி எதையும் 'டார்கெட்' அதாவது இலக்கு வைத்து செயல்படுவார் என்று பாராட்டியதற்கேற்ப அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 18-ந்தேதி சென்னையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட 11-ந்தேதியில் இருந்து 100 நாட்களுக்குள் 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று உறுதிபட தெரிவித்தார். இதற்கான அனைத்து பணிகளும் மின்வாரிய செலவிலேயே முடிக்கப்படவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த திட்டம் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றுவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உணவு உற்பத்தி பெருகும், விவசாய நிலப்பரப்பு அதிகமாகும், விவசாய தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் இலக்கு வைத்து செயல்படுத்தினால் வியக்கத்தகு முன்னேற்றத்தை காணமுடியும்.


Next Story