மானியம் கொடுத்து கை தூக்கிவிட வேண்டும் !


மானியம் கொடுத்து கை தூக்கிவிட வேண்டும் !
x

பொதுவாக அரசு மட்டுமல்ல, குடும்பங்களிலும் இல்லத்தரசிகள் பட்ஜெட் போட்டே வாழ்க்கை சக்கரத்தை சுழல வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக அரசு மட்டுமல்ல, குடும்பங்களிலும் இல்லத்தரசிகள் பட்ஜெட் போட்டே வாழ்க்கை சக்கரத்தை சுழல வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபகாலங்களாக அவர்கள் பட்ஜெட் பற்றாக்குறையாகவே உள்ளது. காரணம் வருமானம் உயரும் அளவுக்குமேலாக விலைவாசி உயருவதுதான். சரக்கு சேவை வரி வசூல் மாதாமாதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு விலைவாசி உயர்வும் ஒரு காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எப்படி என்றால், பொருட்களின் விலை உயரும்போது, அந்த பொருட்கள் மீதான சரக்கு சேவை வரி வசூலும் உயரும். அரசுக்கு வருவாய் அதிகரித்தாலும், விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவது மக்கள்தான். அதிலும் குறிப்பாக ஏழை-எளிய, நடுத்தர மக்கள்தான் பெரும்பாதிப்பு அடைகிறார்கள். ஏற்கனவே, விலைவாசி சுமையால் வேதனையை தாங்கிக்கொண்டு இருக்கும் மக்கள் மீது பெட்ரோல்-டீசல் விலை உயர்வு அழுத்திக்கொண்டு இருக்க, இப்போது சமையல் கியாஸ் விலையும் அடிக்கடி உயர்வது சம்மட்டியால் அடித்ததுபோல இருக்கிறது.

காய்கறி விலைகூட ஒரு சமயம் ஏறினாலும், ஒரு சமயம் குறைவதுண்டு. எடுத்துக்காட்டாக சில நாட்களுக்கு முன்பு கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்று வந்த தக்காளி விலை இப்போது கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரையாக குறைந்துவிட்டது. ஆனால், சமையல் கியாசைப் பொறுத்தமட்டில், எப்போதும் ஏறுமுகம்தான். 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து, இப்போது சென்னையில் அதன் விலை ரூ.1,068.50. ஊருக்கு ஊர் இதன் விலை வேறுபடும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் விலை ரூ.850.50 ஆக இருந்த நிலையில், இந்த ஜூலையில் ரூ.218 அதிகரித்து இருக்கிறது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் 8 முறை விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. அதுவும் கடந்த 2 மாதங்களில் இது 3-வது முறையாகும். இந்த ஆண்டு 4-வது முறையாக விலை உயர்ந்துள்ளது.

இந்த நேரத்தில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.8.50 குறைக்கப்பட்டுள்ளது. சரி ஏற்கனவே சமையல் கியாசை பயன்படுத்துபவர்களுக்குத்தான் தொடர்ந்து விலை உயர்வு என்றால், புதிதாக சமையல் கியாஸ் இணைப்பு பெற நினைப்பவர்களுக்கும், ஊக்கம் குறைவதற்கான வகையில் வைப்புத்தொகை, அதாவது 'டெபாசிட்' தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரையில், புதிதாக சமையல் கியாஸ் இணைப்புக்கான விண்ணப்பம் அனுப்பும்போது ரூ.1,450 வைப்புத்தொகையாக கட்டவேண்டும். இப்போது ஒரு சிலிண்டர் வேண்டுமென்றால் ரூ.2,200-ம், 2 சிலிண்டர் வேண்டும் என்றால் ரூ.4,400-ம் கட்டவேண்டும்.

ஒரு பக்கம் இணைப்புக்கான வைப்புத்தொகை, மற்றொரு பக்கம் சிலிண்டர் விலையையெல்லாம் பார்த்தால், கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு இவ்வளவு தொகை கட்டி, மாதந்தோறும் செலவழித்து சமையல் கியாஸ் வாங்க வேண்டுமா? பேசாமல் மண்எண்ணெய் அடுப்பு அல்லது விறகு அடுப்பையே பயன்படுத்திவிடலாமா? என்று எண்ணத் தோன்றும். இந்த ரூ.50 விலை உயர்ந்த நாளில் 'தினத்தந்தி' சார்பில் சில பெண்களிடம் பேட்டி கண்டபோது, "இந்த விலை உயர்வு பேரிடியாக இருக்கிறது" என்று கருத்து தெரிவித்தனர்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்தே சமையல் கியாஸ் விலை ஒவ்வொரு மாதமும் நிர்ணயித்து அறிவிக்கப்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், பொதுமக்களால் தாங்க முடியுமா? என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. முன்பு ரூ.200-க்கு மேல் ஒவ்வொரு சிலிண்டருக்கும் கொடுத்து வந்த மானியம் பெரும்பான்மையோருக்கு நிறுத்தப்பட்டுவிட்டது. வெகு சிலருக்கு மட்டும் ஒரு சிலிண்டருக்கு ரூ.24.95 அனுப்பப்படுகிறது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை போக்கும் நிவாரணமாக, கடந்த ஒரு ஆண்டில் உயர்ந்த ரூ.218-ஐ மானியமாக வழங்க வேண்டும் என்பதே இல்லத்தரசிகளின் கோரிக்கையாக இருக்கிறது.


Next Story