நல்வழிப்படுத்தும் நல்ல தீர்ப்பு


நல்வழிப்படுத்தும் நல்ல தீர்ப்பு
x

சமுதாயத்தில் பெரிய குற்றங்களைச் செய்பவர்கள் மீது போடப்படும் வழக்குகளை விசாரித்து நீதிமன்றங்கள் சிறைத் தண்டனை விதிக்கிறது.

சமுதாயத்தில் பெரிய குற்றங்களைச் செய்பவர்கள் மீது போடப்படும் வழக்குகளை விசாரித்து நீதிமன்றங்கள் சிறைத் தண்டனை விதிக்கிறது. அவர்கள் செய்த குற்றங்களுக்கான தண்டனை இது என்ற வகையில், இது ஏற்புடைய ஒன்றுதான். ஆனால், இளமை துடிப்பில், உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் குற்றங்களுக்கு சிறை தண்டனை விதித்தால், அவர்கள் மனம் கடினப்பட்டு, சந்தர்ப்பவசத்தால் குற்றங்கள் செய்பவர்கள், அந்த குற்றங்களை தொடர்ந்து செய்ய வழிவகுத்து விடக்கூடாது. சில வெளிநாடுகளில் கூட, இத்தகைய சந்தர்ப்பவச குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்காமல், முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் போன்ற இடங்களில் சமூக சேவை செய்ய சொல்லி உத்தரவிட்டு, அவர்களின் பாதையை நல்ல பாதையாக்கும் தீர்ப்புகள் கூறப்படுகிறது.

சென்னை ஐகோர்ட்டில் கூட, சில மாதங்களுக்கு முன்பு ரோட்டில் பைக்கில் செல்லும்போது, 'ஸ்டண்ட்' வேலை செய்த ஒரு இளைஞருக்கு புதுமையான தண்டனை வழங்கப்பட்டது. சில வாரங்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலுள்ள அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றவேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது. அவ்வாறு அவசர சிகிச்சை பிரிவில் விபத்து காரணமாக, ரத்தம் ஒழுக.. ஒழுக.. சிகிச்சைக்காக வருபவர்களைப் பார்த்த அந்த இளைஞர் மிகவும் மனம் பதை பதைத்தார். 'எனக்கும் விபத்து ஏற்பட்டால், இந்த நிலைதானே ஏற்படும்' என்று மனம் மாறினார். இதுதான் தீர்ப்பின் நல்ல நோக்கம்.

பொதுவாகவே, ரோட்டில் பைக்கில் செல்லும் இளைஞர்கள் சாகச செயல்களைச் செய்கிறோம் என்று நினைத்து, மயிர் கூச்செறியும் வகையில் அதிவேகத்துடன் செல்வது மட்டுமல்லாமல், வளைந்து.. நெளிந்து.. செல்வதும், 'ஸ்டண்ட்' வேலைகளை காட்டுவதும், ஒரு டயரை தூக்கிக்கொண்டு ஒரு டயரில் வண்டியை ஓட்டுவதும், அவர்களுக்கு பயம் இல்லையென்றாலும் சாலையில் செல்லும் மற்றவர்களுக்கு பயம் மேலோங்கிவிடுகிறது. அச்சத்தால் உறைந்து போய்விடுகிறார்கள். இதுபோன்று சாகச 'ஸ்டண்ட்' வேலை செய்து, அதுவும் போக்குவரத்து மிகுந்த சென்னை அண்ணா சாலையில் செய்த இளைஞர் ஒருவர், அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இதை ஆதாரமாக வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். அந்த இளைஞர் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஒரு புதுமையான தீர்ப்பை வழங்கினார். அதன்படி, மோட்டார் சைக்கிளில் விதிகளுக்கு மீறி 'ஸ்டண்ட்' வேலை செய்வதாலும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதாலும் ஏற்படும் ஆபத்துகளையும் மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவர் ஒரு விழிப்புணர்வு பிரசாரத்தை 40 ஆயிரம் பேர் பின் தொடரும் அவருடைய இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவிடவேண்டும் எனவும், 'ஹெல்மெட்' அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, 'சீட் பெல்ட்' அணியாமல் காரில் பயணம் செய்வது ஆகியவை பற்றியும் ஒரு வீடியோ எடுத்து, அதையும் அவருடைய இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவிடவேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இதுதவிர, நேற்று முதல் அடுத்த 3 வாரங்களுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் தேனாம்பேட்டை-அண்ணாசாலை சந்திப்பில் நின்று கொண்டு, அவரே அச்சடித்து தயாரித்த துண்டு பிரசுரத்தை வினியோகிக்கவேண்டும் என்றும் தன் தீர்ப்பில் கூறியிருந்தார். இதுமட்டுமல்லாமல், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில், இந்த 3 வாரமும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை விபத்து சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக விபத்துகளில் சிக்கி சிகிச்சைக்கு வருபவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திராவின் இந்த தீர்ப்பு அந்த இளைஞரை மட்டுமல்ல, அவரது விழிப்புணர்வு பிரசாரத்தால் மற்றவர்களையும் நல்வழிப்படுத்தும் நல்ல தீர்ப்பாகும்.


Next Story