அரசு வழங்கும் உதவிகள் இலவசங்கள் அல்ல!


அரசு வழங்கும் உதவிகள் இலவசங்கள் அல்ல!
x

நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், பொதுநல வழக்குகள் என்ற பெயரில் தினமும் புதிதுபுதிதாக வழக்குகள் தொடரப்படுவதால், தீர்க்கப்பட வேண்டிய வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன.

நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், பொதுநல வழக்குகள் என்ற பெயரில் தினமும் புதிதுபுதிதாக வழக்குகள் தொடரப்படுவதால், தீர்க்கப்பட வேண்டிய வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இதில் பல வழக்குகள், உண்மையிலேயே சமுதாயத்துக்கு தேவையான பொதுநல வழக்குகள் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனாலும் பல வழக்குகள் சுயவிளம்பரத்துக்காக தொடரப்படுவதால், அவை நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றன.

சென்னை ஐகோர்ட்டில் இப்படி விளம்பரத்துக்காக பொதுநல வழக்குகளை தொடர்ந்தவர்கள் மீது நீதிபதிகள் அபராதம் விதித்து வருகிறார்கள். அரசியல் சட்டம் 124-வது பிரிவின்படி அமைக்கப்பட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டில், முதன்முதலில் 1979-ம் ஆண்டுதான் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பீகாரில் விசாரணை கைதிகள் படும்பாட்டை பத்திரிகைகளில் படித்த புகழ்பெற்ற வக்கீல் கபிலா ஹிங்கொரானி, அவர்களை விடுதலை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தார். சுப்ரீம் கோர்ட்டும் உடனடியாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இந்த தீர்ப்புதான் பொதுநல வழக்குகளை நீதிமன்றங்களில் தொடரும் வழக்கத்துக்கு வித்திட்டது.

அப்படியொரு வழக்காக, அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குகிறோம் என்று வாக்காளர்களை கவர தேர்தல் வாக்குறுதிகளில் கூறக்கூடாது, அப்படி இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் சின்னங்களை தடை செய்யவேண்டும், அரசுகளும் இலவசங்களை வழங்க தடை விதிக்கவேண்டும் என்பது உள்பட இலவசங்களுக்கு எதிரான பல பொதுநல வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுகுறித்து பல விமர்சனங்களை கிளப்பியுள்ள உத்தரவுகளை வழங்கியுள்ளது.

"இலவசங்கள் குறித்து ஆராய நிதி ஆயோக், நிதிக்குழு, தேர்தல் கமிஷன், ரிசர்வ் வங்கி மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்கவேண்டும். இந்தக்குழு வரி கட்டுபவர்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் என்ன பாதிப்புகளை இலவசங்கள் ஏற்படுத்துகிறது? என்பதை முழுவதுமாக ஆராய்ந்து, இலவசங்களை கட்டுப்படுத்துவதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்று பரிந்துரைகள் வழங்கவேண்டும். நாம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு அனுப்பி வைக்கலாம்" என்றும் அந்த உத்தரவில் கூறியிருந்தது.

அப்போது அங்கிருந்த மூத்த வக்கீல் கபில்சிபல், "இதையெல்லாம் நாடாளுமன்றம்தான் விவாதிக்கவேண்டும். இது அரசியல் ரீதியான பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயம்" என்றவுடன் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, "இதை நாடாளுமன்றத்தில் விவாதிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?. இந்த காலங்களில் எல்லோரும் இலவசங்களை விரும்புகிறார்கள். இலவசங்களை எடுக்க எந்த அரசியல் கட்சியும் அனுமதிக்காது. நாங்கள் தேசிய பொருளாதார நலனை கருத்தில் கொள்கிறோம்" என்றார். தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பான விசாரணைகளில் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டதற்கு பிறகு, இப்போது 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு அனுப்பிவிட்டது.

'ஏழைகளுக்கு அரசு வழங்கும் உதவிகள் சமூகநல திட்டங்களே, இலவசங்கள் அல்ல', என்று உரத்த குரலில் கூறுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒட்டுமொத்தமாக, இலவசங்கள் தேவையில்லை என்று கூறிவிட முடியாது. பள்ளத்தில் வீழ்ந்துகிடக்கும் ஏழை-எளிய மக்களை, மேலே தூக்கிவிடும் ஏணி போன்றவைதான் இலவசங்கள் என்ற கருத்தும் இருக்கிறது. ஏற்கனவே, கருணாநிதி இலவச டெலிவிஷன்கள் வழங்கிய திட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள், "இது சட்டம் மற்றும் கொள்கை சார்ந்தது. டெலிவிஷன் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களை பெண்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு வழங்குவது என்பது, அரசியல் சட்டத்துக்கு ஏற்புடையதாகும். சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட ஒதுக்கீடுகளின் அடிப்படையில், செலவழிக்கப்படும் நிதி சட்ட விரோதமானது அல்ல. மேலும், இத்தகைய பொருட்களை தருகிறோம் என்று அளிக்கப்படும் வாக்குறுதிகள் லஞ்சம் அல்ல" என்று தெளிவாக கூறிவிட்டது.

இந்தியாவில் ஏழ்மை நிலையில் இருக்கும் ஏராளமான மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் இலவசங்கள் அல்ல. அது சமூகநல உதவிகள். கொரோனா நேரத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், அரசு வழங்கிய இலவசங்கள்தான் வாழ்வளித்தது என்பதை நிச்சயமாக கருத்தில் கொள்ளவேண்டும்.


Next Story