ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றாக்குறையா?


ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றாக்குறையா?
x
தினத்தந்தி 30 May 2022 8:04 PM GMT (Updated: 2022-05-31T11:27:50+05:30)

அரசு நிர்வாகத்தில் அது மத்திய அரசாங்கத்திலும் சரி, மாநில அரசாங்கங்களிலும் சரி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணி மிக முக்கியமானதாகும்.

அரசு நிர்வாகத்தில் அது மத்திய அரசாங்கத்திலும் சரி, மாநில அரசாங்கங்களிலும் சரி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணி மிக முக்கியமானதாகும். மாநில அரசை எடுத்துக்கொண்டால், தலைமைச்செயலாளர் தொடங்கி, சப்-கலெக்டர் பதவிவரை, துறைகளை எடுத்துக்கொண்டால் செயலாளர் முதல் சார்நிலை செயலாளர் வரை பல்வேறு பதவிகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். அரசின் திட்டங்கள், நிறைவேற்றும் சட்டங்கள், கிராமங்களிலுள்ள கடைக்கோடி மனிதரையும் சேரவேண்டும் என்றால், மாவட்ட கலெக்டராக பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கையில்தான் இருக்கிறது.

ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலத்தின் தேவைக்கேற்ப மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்துகிறது. இந்த சிவில் சர்வீசஸ் தேர்வை 24 வகையான பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வாக நடத்துகிறது. அதில் வெற்றி பெறுபவர்களில் ஒவ்வொரு பணிக்கும் தேவையான அளவு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ். பணிக்கு ஏறத்தாழ 180 அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் அதிகாரிகள் தங்கள் சொந்த மாநிலத்திலும், மற்றவர்கள் அண்டை மாநிலம், தொலைதூர மாநிலங்களிலும் பணியமர்த்தப்படுகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதுதவிர மாநில அரசு பணியில் குரூப்-1 தேர்வு எழுதி துணைகலெக்டர் போன்ற முதல்நிலை பணிகளில் வேலைபார்க்கும் அதிகாரிகள் நல்ல பணிகளை ஆற்றியிருந்தால், ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு ஐ.ஏ.எஸ். பணிக்கான அந்தஸ்து வழங்கப்படுகிறது.

இவ்வாறு அரசு பணியின் அச்சாணியாக விளங்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை நாட்டில் 22 சதவீதம் குறைவாக இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கத்தக்கதாக இருக்கிறது. பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தற்போது நிர்வாகத்துக்கு தேவைப்படும் அதிகாரிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு ஆண்டுதோறும் பணிக்கு தேர்வுசெய்யப்படும் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீரில்தான் 57 சதவீத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பற்றாக்குறை இருக்கிறது. திரிபுராவில் 40 சதவீதமும், நாகலாந்தில் 37.2 சதவீதமும், கேரளாவில் 32 சதவீதமும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றாக்குறை இருக்கிறது என்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், தமிழ்நாட்டில்தான் மிகக்குறைந்த அளவாக 14.3 சதவீதம் பற்றாக்குறை இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமைச்செயலகத்தில் 38 துறைகள் இருக்கின்றன. பல்வேறு துறைகளின் தலைமை பொறுப்பில் 83 அதிகாரிகள் உள்ளனர். இதுதவிர 143 பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை 376. ஆனால் தற்போது 316 பேர்தான் பணியில் இருக்கிறார்கள். இதில் 206 பேர் நேரடியாக ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள். தமிழக தேர்வாணையம் மூலம் துணைகலெக்டர்களாக தேர்வுபெற்று சில ஆண்டுகள் பணியாற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளானவர்கள் 94 பேர். பிறதுறைகளில் பணியாற்றி, ஐ.ஏ.எஸ். ஆனவர்கள் 16 பேர். பொதுவாக ஒதுக்கீடுசெய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். பணிகளில் 70 சதவீதம் பேர் நேரடியாக ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்களாகவும், 30 சதவீதம் பேர் மாநில பணியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவிஉயர்வு பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். தற்போது தமிழ்நாட்டில் நமது மாநிலத்தைச் சேர்ந்த 183 அதிகாரிகளும், பிற மாநிலங்களை சேர்ந்த 133 அதிகாரிகளும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள்.

இந்த ஆண்டு 12 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பணியில் சேர்க்கப்பட இருக்கிறார்கள். சிறந்த நிர்வாகம் நடைபெறும் தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றாக்குறை இருக்கக்கூடாது. தமிழ்நாட்டின் நிர்வாகத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தமிழகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். தமிழக இளைஞர்களும் இன்னும் அதிகளவில் தங்களை தகுதிப்படுத்திக்கொண்டு, சிவில் சர்வீசஸ் தேர்வில் அதிகளவு மதிப்பெண்ணை பெற்று, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக தமிழ்நாட்டில் பணிபுரியவேண்டும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story