ரெயிலில் பார்சல் அனுப்பினால் வீட்டுக்கே வந்து தர திட்டம்


ரெயிலில் பார்சல் அனுப்பினால் வீட்டுக்கே வந்து தர திட்டம்
x

கடும் போட்டிகளுக்கிடையே ரெயில்வே நிர்வாகம் பல சவால்களை சந்தித்து வருகிறது. நல்ல வசதிகளுடன் மூலை முடுக்கெல்லாம் செல்லும் பஸ் சேவைகள், குறைந்த கட்டண விமான சேவைகள் ரெயில்வேக்கு பெரும் போட்டியாக இருக்கிறது.

கடும் போட்டிகளுக்கிடையே ரெயில்வே நிர்வாகம் பல சவால்களை சந்தித்து வருகிறது. நல்ல வசதிகளுடன் மூலை முடுக்கெல்லாம் செல்லும் பஸ் சேவைகள், குறைந்த கட்டண விமான சேவைகள் ரெயில்வேக்கு பெரும் போட்டியாக இருக்கிறது. இந்த நிலையில், பயணிகளை தக்க வைக்கவும், புதிய பயணிகளை ஈர்க்கவும், ரெயில்களில் பயணிகளுக்கு பல வசதிகளை அளித்து வருவதாலும், ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் எடுப்பதற்கு கடும் கிராக்கி இருக்கிறது. அதிலும் இப்போது 120 நாட்களுக்கு முன்பே பதிவு செய்யலாம் என்ற வசதி இருப்பதால், திட்டமிட்டு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.

ரெயிலில் டிக்கெட் வாங்க, ரெயில் நிலையத்துக்கு சென்று டிக்கெட் கவுண்ட்டரில் நீண்ட கியூவில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயமெல்லாம் இப்போது இல்லை. கையில் ஒரு செல்போன் இருந்தால் மட்டும் போதும். இணையதளத்திலேயே டிக்கெட் எடுத்து விடலாம். ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி 2005-ம் ஆண்டு முதலில் டெல்லி-கல்கா சதாப்தி ரெயிலில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு, படிப்படியாக எல்லா ரெயில்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஒரு ரெயிலில் இருக்கும் மொத்த முன்பதிவு டிக்கெட்டுகளில் 50 சதவீத டிக்கெட்டுகளை மட்டும் இணையதளத்தில் எடுக்கலாம், மீதமுள்ள 50 சதவீத டிக்கெட்டுகளை ரெயில் நிலையத்தில்தான் வாங்க முடியும் என்றநிலை இருந்தது.

2008-2009-ம் ஆண்டுகளிலிருந்து அனைத்து டிக்கெட்டுகளையும் இணையதளம் மூலம் எடுக்க அனுமதி இருக்கிறது. ரெயில் புறப்படும் நாளுக்கு ஒரு நாளைக்கு முன்பு டிக்கெட் பதிவு செய்யும் 'தட்கல்' டிக்கெட்டைக்கூட இணையதளம் மூலம் எடுக்கலாம். இதுமட்டுமல்லாமல், சாதாரண ரெயில்கள், மின்சார ரெயில், ஏன் பிளாட்பாரம் டிக்கெட்டைக்கூட செல்போனிலேயே யூ.டி.எஸ். என்ற செயலி மூலம் எடுத்துவிடலாம். மெட்ரோ ரெயிலுக்கு கூட இதுபோன்ற ஒரு செயலியை பயன்படுத்தி டிக்கெட் எடுத்துவிட முடியும்.

சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ரெயில்வே கோட்டங்களை உள்ளடக்கிய தெற்கு ரெயில்வேயில் கடந்த 2021-2022-ம் ஆண்டில் 78.5 சதவீத முன்பதிவு டிக்கெட்டுகள் இணையதளம் மூலமே எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் 90 சதவீத முன்பதிவு டிக்கெட்டுகள் இணையதளம் மூலமே எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிக்கெட் கவுண்ட்டர்களில் இப்போது கூட்டம் இல்லாதநிலை இருக்கிறது. பெரும்பாலான டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் எடுப்பதால், பல ரெயில் நிலையங்களில், குறிப்பாக சிறிய ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்ட்டர்களுக்கு ரெயில்வே ஊழியர்கள் இல்லாமல், ரெயில் நிலைய டிக்கெட் புக்கிங் சேவகர்களை நியமிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவுசெய்து, அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டது.

இந்தியா முழுவதும் 7,349 ரெயில் நிலையங்கள் இருக்கின்றன. இதில் 4,158 ரெயில் நிலையங்கள் 'ஈ' பிரிவு ரெயில் நிலையங்களாகும். இந்த ரெயில் நிலையங்களில், ரெயில் நிலைய டிக்கெட் பதிவு சேவகர்கள் டெபாசிட் தொகை கட்டி பதிவு செய்யப்படாத சாதாரண டிக்கெட், சீசன் டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட்டை விற்கலாம். அதற்கு அவர்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறது. இதுபோல, ரெயில்வே நிர்வாகம் பார்சல் மூலமும் அதிக வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. ரெயிலில் அனுப்பப்படும் பார்சலை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்ய தபால் இலாகாவுடன் ரெயில்வே நிர்வாகம் ஒப்பந்தம் செய்கிறது. ரெயில்வேயில் பார்சல் அனுப்பினால் விரைவாகவும், குறைந்த கட்டணத்திலும் அனுப்பலாம், வீட்டுக்கே கொண்டு வந்து தந்து விடுவார்கள் என்பதால், இந்த திட்டம் அமலுக்கு வரும் நேரத்தில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கும் ரெயில்வே நிர்வாகம், ஆன்லைன் மூலம் பார்சல் அனுப்ப பதிவு செய்வதற்கு வசதியாக தனியாக ஒரு இணையதள பக்கம் உருவாக்க இருக்கிறது. பயணிகளுக்கும் அதிக வசதி, ரெயில்வேக்கும் கூடுதல் வருவாய் என்ற இலக்கில் பயணம் தொடங்குகிறது.


Next Story