தீபாவளி மகிழ்ச்சிக்கும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் முட்டுக்கட்டையா?


தீபாவளி மகிழ்ச்சிக்கும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் முட்டுக்கட்டையா?
x

“உன்னைக்கண்டு நான் ஆட, என்னைக்கண்டு நீ ஆட, உல்லாசம் பொங்கும் இந்த தீபாவளி” என்று மக்கள் ஆனந்தமாக கொண்டாடும் தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி வருகிறது.

"உன்னைக்கண்டு நான் ஆட, என்னைக்கண்டு நீ ஆட, உல்லாசம் பொங்கும் இந்த தீபாவளி" என்று மக்கள் ஆனந்தமாக கொண்டாடும் தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி வருகிறது. பொதுவாக இந்தியா பண்டிகைகள் நிறைந்த கலாசாரத்தை கொண்ட நாடு. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராணம் உண்டு. தீபாவளியை தீப ஒளி திருநாள் என முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். 'தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள்' என்றும் கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு காரணமாக, தீமையின் வடிவமான அசுரன் நரகாசுரனை மகாவிஷ்ணு அன்னை சத்தியபாமா மூலம் அழித்த வரலாறும் சொல்லப்படுகிறது. தீபாவளி உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களால் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் எழுந்து எண்ணெய் குளியலை முடித்து, புத்தாடை அணிந்து, தெய்வத்தை வழிபட்டு தித்திக்கும் பலகாரங்களை சாப்பிட்டு, உற்றார் - உறவினருக்கும் கொடுப்பதற்கு இணையாக பட்டாசு போட்டு மகிழ்வதுதான் மரபாக இருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை இந்த பட்டாசுகளை கொளுத்தும்போது அடையும் மகிழ்ச்சிக்கு இணையே இல்லை.

தீபாவளி பட்ஜெட்டில் பட்டாசு செலவும் முக்கியமான இடத்தை பெற்றிருக்கும். தீபாவளி அன்று குடும்பத்தினர் அடையும் மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் பட்டாசு போடுவதாகும். பல ஊர்களில் வாண வேடிக்கைகளும் உண்டு. இந்த மகிழ்ச்சிக்கெல்லாம் ஒரு தடை கடந்த 23-10-2018 அன்று வந்தது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைகோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், "சுற்று சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி, பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும், திறந்தவெளியில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும்" என்றும் கூறியிருந்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியதைப்போலவே, இந்த ஆண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசு ஏற்படுத்தும் தன்மையையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும், சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கியது நிச்சயமாக ஏற்புடையது அல்ல. அப்போதுதான் எழுந்து எண்ணெய் குளியல் போடுவார்கள். சிறு குழந்தைகள் அந்த நேரத்தில் பட்டாசு போடுவதற்கு மட்டும் எழும்ப முடியுமா?, இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு போடவேண்டும் என்பதும் முடியாத ஒன்றாகும். ஆண்டுக்கு ஒருமுறை பட்டாசு போடும் மகிழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு என்று தடை விதிப்பது சரியாக இருக்காது. பட்டாசு மட்டுமா சுற்றுச்சூழலை பாதிக்கிறது? எத்தனையோ வாகனங்கள் புகையை கக்கிக்கொண்டு போகின்றன. எத்தனையோ தொழிற்சாலைகளில் புகை வெளியேறுகிறது. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் கோதுமை அறுவடைக்கு பிறகு எஞ்சிய பயிர் கழிவுகளை தீயிட்டு கொளுத்தும்போது புகை வருகிறது. அதற்கெல்லாம் தடை விதிக்க முடியுமா?.

மேலும், தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இந்த பட்டாசு தொழில் சிவகாசியில் மட்டும் பல லட்சம் பேருக்கு வாழ்வளிக்கிறது. நாடு முழுவதும் இந்த தீபாவளி பட்டாசு விற்பனையை நம்பி ஏராளமானோர் தங்கள் வாழ்க்கை சக்கரத்தை சுழல வைக்கிறார்கள். மொத்தத்தில் தீபாவளி மகிழ்ச்சிக்கும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும் இந்த நேர தடை சங்கிலியை அறுத்தெறிய என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மத்திய-மாநில அரசுகள் பரிசீலிக்கவேண்டும்.


Next Story