கொரோனா 4-வது அலையா? ஏற்றமா?


கொரோனா 4-வது அலையா? ஏற்றமா?
x

2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிலும், மார்ச் மாதம் தமிழ்நாட்டிலும் காலடி எடுத்து வைத்த கொடிய கொரோனா, தன் ஆட்டத்தை இன்னும் நிறுத்தியபாடில்லை.

2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிலும், மார்ச் மாதம் தமிழ்நாட்டிலும் காலடி எடுத்து வைத்த கொடிய கொரோனா, தன் ஆட்டத்தை இன்னும் நிறுத்தியபாடில்லை. அலை அலையாய் இதுவரை 3 அலைகளில் பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திவிட்டது. ஏதோ உடல் ஆரோக்கியத்தை மட்டும் பாதித்தது, வந்தது, போய்விட்டது என்று மட்டும் இல்லாமல் கடுமையான பொருளாதார நெருக்கடி, வேலை இழப்பு, வருமான இழப்பு என்பதுபோல பல பாதிப்புகளை சுற்றி சுற்றி அடித்து ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் 34 லட்சத்து 57 ஆயிரத்து 969 பேர் பாதிக்கப்பட்டனர். 38 ஆயிரத்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதியில் இருந்து இன்று வரை உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருந்தாலும், மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டு இருப்பது கவலையளிக்கிறது. ஏப்ரல் 21-ந்தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக குறைந்தவுடன், எல்லோரும் 'அப்பாடா… அலை அலையாய் 3 அலைகளில் தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட கொரோனா இதோடு முடிந்துவிடும், இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போயே போய்விடும், கொரோனாவே இல்லாத சகஜ வாழ்க்கை தொடங்கிவிடும்', என்று மகிழ்ந்த நேரத்தில், 'விட்டேனா பார்…' என்று மீண்டும் அடி மேல் அடியெடுத்து பாதிப்பு எண்ணிக்கை உயரத்தொடங்கிவிட்டது. 4 நாட்களுக்கு முன்னால் தினசரி பாதிப்பு 200-ஐ தாண்டி, நேற்று 332 ஆகிவிட்டது. இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே கடந்த வாரத்தில் மட்டும் ஏறத்தாழ 49 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கடந்த வாரத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம்தான் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த வாரம் 1,299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 69 சதவீதம் பாதிப்பு உயர்ந்து இருக்கிறது. இது 4-வது அலை தொடக்கமா? அல்லது ஏற்றம்தானா? என்பதே எல்லோர் மனதிலும் இப்போது உள்ள கேள்வியாகும். முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பது போல, இப்போதே இதற்கு அணை கட்டி நிறுத்தினால்தான், மீண்டும் ஒரு பெரும் அலை வராமல் தடுக்க முடியும்.

மேலும், ''கொரோனாவை தடுக்க தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ளுங்கள் என்று தமிழக அரசு எவ்வளவோ வேண்டுகோள் விடுத்தும், அதற்குரிய ஏற்பாடுகளை, வசதிகளை செய்து கொடுத்தும், இன்னும் 40 லட்சம் பேர், முதல் 'டோஸ்' தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். 1 கோடியே 21 லட்சத்து 24 ஆயிரத்து 117 பேர் 2-வது 'டோஸ்' தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். 13 லட்சத்து 53 ஆயிரத்து 673 பேர்தான் 'பூஸ்டர் டோஸ்' போட்டு இருக்கிறார்கள். 10 சதவீதம் பேர்தான் முககவசம் அணிகிறார்கள்'', என்று மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருத்தத்துடன் தன் செய்தியை பதிவு செய்திருக்கிறார். 'தமிழக பொது சுகாதாரத்துறை ஒரு ஆய்வை தமிழ்நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகம், மலேசியா, சுவீடன் நாட்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளோடு நடத்தியது. இதில் தடுப்பூசி போட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டு இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது', என்பதை பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஆக இப்போதுள்ள சூழ்நிலையில், கொரோனா பரவலை தடுக்கவேண்டும் என்றால், அனைவரும் தடுப்பூசியை போடவேண்டும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவதுபோல, எல்லோரும் முககவசம் கண்டிப்பாக அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இதை அனைத்து இடங்களிலும் முழுமையாக கடைப்பிடித்தால், கொரோனாவின் 4-வது அலை தலையெடுப்பதை தடுத்துவிட முடியும்.


Next Story