பைக் ரேசில் ஈடுபட்டவர்களுக்கு பாடம் புகட்டும் தீர்ப்பு


பைக் ரேசில் ஈடுபட்டவர்களுக்கு பாடம் புகட்டும் தீர்ப்பு
x

பொதுவாக ஏதாவது விதிமீறல்கள், குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றங்களில் விசாரணை நடக்கிறது.

பொதுவாக ஏதாவது விதிமீறல்கள், குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றங்களில் விசாரணை நடக்கிறது. இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு, நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள். இந்த தீர்ப்புகள் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை என்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் திரும்ப அந்த தவறை செய்யாமல் திருந்த வேண்டும் என்பதுதான் சமுதாயத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. திட்டமிட்டு, குற்றங்களை செய்தால், அதை ஒரு கண்ணோட்டமாகவும், இளங்கன்று பயமறியாது என்ற வகையில் இளமைத்துடிப்பில் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு, அவர்களை திருத்தும் வகையிலான தீர்ப்பும் வேண்டும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்றாகும். இப்போதெல்லாம் சாலைகளில் இளைஞர்கள் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே பைக் ரேசில் போவது பார்ப்பவர்களை குலைநடுங்க வைக்கிறது. அதிவேகம் என்பது மட்டுமல்லாமல், வளைந்தும், நெளிந்தும் முன்சக்கரத்தை தூக்கி, பின்சக்கரம் மட்டும் சுழலும் வகையிலும், பின்சக்கரத்தை தூக்கி முன்சக்கரம் சுழற்சியிலேயே மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வதும் அவர்களுக்கு பயமில்லை என்றாலும், சாலைகளில் செல்பவர்களை பயமுறுத்துகிறது. இது விதிமீறலும் ஆகும்.

அப்படிப்பட்ட வகையில் போலீசார் பைக்ரேசில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துகிறார்கள். சில நீதிமன்றங்கள் அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்குகிறது. கடந்த மாதம் அவ்வாறு பழைய வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் பைக் ரேசில் ஈடுபட்டதாக 21 வயது இளைஞர் பிரவீன் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைக்கவும் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது. அவர் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறிய மனு மீது நடந்த விசாரணையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஒரு பாடம் புகட்டும் நல்ல தீர்ப்பை வழங்கியிருந்தார். பிரவீன் மட்டுமல்லாமல், இதுபோன்ற பைக்ரேசில் ஈடுபட்ட மேலும் 21 பேருக்கும் இந்த தண்டனை பொருந்தும் வகையில் அந்த தீர்ப்பு இருந்தது.

நீதிபதி இளைஞருக்கு ஜாமீன் வழங்கி, 30 நாட்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள விபத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு காலை 8 மணிக்கு சென்று பிற்பகல் 12 மணி வரை இருக்க வேண்டும். அங்கே நோயாளிகளை கவனிக்கும் 'வார்டு பாய்'களுக்கு உதவியாக இருக்க வேண்டும். ஒவ்வொருநாளும் அந்த இளைஞர் தன்னுடைய அனுபவத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். 30 நாட்களுக்கு பிறகு ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த தீர்ப்பில் நீதிபதி, சமீபகாலங்களாக இளைஞர்கள் இவ்வாறு மோட்டார் சைக்கிளை படுவேகமாக ஓட்டி சாலைகளில் செல்பவர்கள், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் இரும்புத் தடியை சாலையில் உரசி தீப்பொறி கிளம்பும் வகையில் தேய்த்து கொண்டே போகிறார்கள். சக்கரங்களை தூக்கி சாகசங்களில் ஈடுபடுவதாக நினைத்து கொள்கிறார்கள் என்றும் எழுதியிருந்தார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இவ்வாறு பைக் ரேசில் ஈடுபட்ட 21 வாலிபர்களும் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த பணியை செய்து வந்தார்கள். விபத்து பிரிவில் படுகாயத்தோடு வரும் நோயாளிகளை பார்த்தபோது சிலருக்கு வாந்தி ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவர்கள் அடையும் வேதனை மற்றும் அவர்களின் உறவினர்கள் படும் கஷ்டத்தை நேரில் பார்த்துவிட்டு, இனிமேல் நாங்கள் பைக்ரேசில் ஈடுபடமாட்டோம் என்று கூறி இருக்கிறார்கள். அவர்கள் சிறையில் வாடாமல் திருந்தி வாழ்வதற்கான ஒரு நல்ல தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார். இதுபோன்று உணர்ச்சி வேகத்தில் செய்யும் சிறு குற்றங்களுக்கு சிறைத்தண்டனை தீர்வாகாது. அவர்கள் திருந்தி வாழ்வதற்கு, அதுபோன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்ட இடங்களில், அவர்களை பணிபுரிய சொல்வதுதான், அவர்களுக்கு தாங்கள் செய்த தவறை புரிந்துகொள்வதற்கும், அதை அவர்கள் தொடராமல் இருப்பதற்கும் பாடம் புகட்டும் என்பது பெரும்பாலானோர் கருத்தாக இருக்கிறது.


Next Story