அன்று மதிய உணவு தந்தார் காமராஜர் ! ; இன்று காலை உணவு தருகிறார் மு.க.ஸ்டாலின் !


அன்று மதிய உணவு தந்தார் காமராஜர் ! ; இன்று காலை உணவு தருகிறார் மு.க.ஸ்டாலின் !
x

“நீங்கள் யாரையும் கற்கவைக்க முடியாது, கற்க வைப்பதற்கான சூழ்நிலையைத்தான் வழங்க முடியும்” என்றார், கனடா நாட்டு எழுத்தாளர் வின்ஸ் கவ்மோன்.

"நீங்கள் யாரையும் கற்கவைக்க முடியாது, கற்க வைப்பதற்கான சூழ்நிலையைத்தான் வழங்க முடியும்" என்றார், கனடா நாட்டு எழுத்தாளர் வின்ஸ் கவ்மோன். ஒட்டுமொத்த மக்களுக்கு பசிப்பிணியை போக்கவேண்டும் என்ற முயற்சியில், முதலில் பள்ளிக்கூடங்களுக்கு வரும் குழந்தைகள் பசியோடு இருக்கக்கூடாது என்ற கருணை உள்ளத்தோடு, தமிழ்நாட்டில் பல தலைவர்கள் உணவு ஊட்டியிருக்கிறார்கள். அதில் மறைந்த தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்ததும், தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியதும், ஒரே பின்னணியில்தான் தொடங்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் ஒருமுறை தன் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தபோது, ரெயில்வே கேட் மூடியிருந்ததால், காரை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது காரில் இருந்து கீழே இறங்கிய காமராஜர், அந்த சாலையின் பக்கத்தில் ஒரு சிறுவன் மாடு மேய்த்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தார். அவனை அழைத்து, பெயர் விவரங்களை கேட்டபின், "நீ ஏன் பள்ளிக்கூடத்துக்கு போகவில்லை" என்று கேட்டார். அவன் தன்னிடம் பேசிக்கொண்டு இருப்பது முதல்-அமைச்சர் காமராஜர் என்பதை அறியாமல், "பள்ளிக்கூடத்துக்கு போனால் யார் சோறு போடுவார்கள்?" என்று அப்பாவித்தனமாக கேட்டான். உடனே காமராஜர், "சோறு போட்டால் பள்ளிக்கூடம் போவாயா?" என்று கேட்டார். அந்த சிறுவனும் "போவேன்" என்றான்.

ரெயில்வே கேட் திறந்தது. காமராஜரும் காரில் ஏறி வழிநெடுக சிந்தித்துக்கொண்டே வந்தார். சென்னை வந்தவுடன், அப்போது பொது கல்வி இயக்குனராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலுவிடம் ஆலோசனை நடத்தினார். அவர் உதவியோடு மதிய உணவு திட்டத்தை வடிவமைத்தார். அப்போது, சில அதிகாரிகள் இந்த திட்டத்தை நிறைவேற்ற நிதி இல்லை என்று முட்டுக்கட்டை போட்ட நேரத்திலும், அதையெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி, காமராஜர் 1955-ம் ஆண்டு மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்தார்.

இதேபோன்ற பின்னணியில்தான், இப்போது காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். பொதுவாகவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கு சுற்றுப்பயணம் செல்லும்போதும், திடீரென யாருக்கும் முன் அறிவிப்பு கொடுக்காமல் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், ரேஷன் கடைகள், போலீஸ் நிலையங்கள் போன்ற இடங்களுக்கு பார்வையிட செல்வது வழக்கம். அந்த வகையில், மாநகராட்சி, அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வு மேற்கொள்ளும்போது, ஒருமுறை ஒரு பள்ளிக்கூடத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த மாணவர்களிடம், "என்ன படிக்கிறீர்கள்?" என்று கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், சில மாணவர்கள் சோர்வுடன் இருப்பதைப் பார்த்து, "ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். "நாங்கள் சாப்பிடவில்லை" என்று அந்த மாணவர்கள் சாதாரணமாக பதில் அளித்தவுடன் அதிர்ந்துபோனார். உடனே ஆசிரியர்கள், அதிகாரிகளிடம் கேட்டபோது, "நிறைய பிள்ளைகள் காலையில் சாப்பிடாமல்தான் வருகிறார்கள்" என்று பதிலளித்ததுதான், அவர் உள்ளத்தில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்ற உறுதி ஏற்பட்டது.

வெறும் வயிற்றில் மாணவர்களால் பாடங்களை உன்னிப்பாக கவனிக்கவும் முடியாது. உலகில் பல ஆய்வுகள் காலை உணவு மட்டும் சாப்பிடாமல் இருக்கக்கூடாது என்று தெளிவாக கூறுகிறது. இதன் அடிப்படையில்தான், சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், கடந்த 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளன்று முதல் கட்டமாக 1,545 பள்ளிக்கூடங்களில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் கருணை திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

இந்த திட்டத்துக்கான உணவுப்பட்டியலை பார்த்தால், வசதியுள்ளவர்கள் வீடுகளில் குழந்தைகள் உண்ணும் உணவுக்கு சற்றும் குறையாத சத்தான உணவாக இருக்கிறது. விரைவில் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இந்த காலை உணவுத் திட்டம் தொடங்கப்படவேண்டும், இதே தரத்துடன் போடப்படவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.


Next Story