காசி தமிழ் சங்கமம்


காசி தமிழ் சங்கமம்
x

தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் பண்டைய காலத்தில் இருந்தே ஆன்மிக தொடர்பு உள்பட பல்வேறு கலாசார தொடர்புகள் உண்டு.

தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் பண்டைய காலத்தில் இருந்தே ஆன்மிக தொடர்பு உள்பட பல்வேறு கலாசார தொடர்புகள் உண்டு. காசிக்கு போய் வழிபட்டுவிட்டு, கங்கையில் குளித்தால் செய்த பாவம் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை. மகாகவி பாரதியார்கூட காசிக்கு சென்று தங்கியிருக்கிறார்.

வடக்கே உள்ள காசிக்கு போக வசதியில்லாத மக்கள், விசுவநாதரை தரிசிக்க கி.பி.15-ம் நூற்றாண்டில் மன்னர் பராக்கிரம பாண்டியன், தென்காசியில் உலகம்மை உடனுறை விசுவநாதர்கோவிலை பிரமாண்டமாக கட்டினார். இந்த கோவிலுக்கு ஏதாவது குற்றம் வரும் என்று மனதில் நினைத்த மன்னர் பராக்கிரமபாண்டியன், "யாராயினும் இந்தத் தென்காசி மேவும் பொன் ஆலயத்து வாராததோர் குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்ததனை நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன் பாரோர் அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே" என்று அந்த கோவில் கல்வெட்டில் பதித்திருந்தார்.

அவர் கூறியபடி, 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோவில் கோபுரம் தீ விபத்தால் சிதைந்து போனது. பல ஆண்டுகளாக கோவில் மொட்டை கோபுரத்தோடு இருந்த நிலைகண்டு, பக்தர்கள் மனம் கலங்கினர். பலர் முயற்சி செய்தும் கோபுரத்தைக் கட்ட முடியவில்லை. பின்பு மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 'தினத்தந்தி' அதிபர் மறைந்த பா.சிவந்தி ஆதித்தனாரின் தீவிர முயற்சியால், 9 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டு கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

தமிழ்நாடும், காசியும் மிகவும் பழமையான முக்கிய அறிவுசார் மையங்களாகவும், கலாசாரம், ஆன்மிகம், கைவினை தயாரிப்புகளின் ஆதாரமாகவும் செயல்படுகின்றன. இந்திய கலாசாரத்தின் இந்த 2 மையங்களும், புவியியல் ரீதியில் தொலைதூரம் இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக ஆழமான, துடிப்பான இணைப்புகளைக் கொண்டுள்ளன. இதை புதுப்பிக்கவும், கொண்டாடவும் இந்திய மொழிகள் குழு மத்திய அரசாங்க கல்வி அமைச்சகத்தின் சார்பில் இன்று முதல் டிசம்பர் 19-ந்தேதி வரையில், காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.

அறிவுசார் மற்றும் கலாசாரத்தின் 2 வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாடு-காசி ஆகிய இரு மையங்களின் வாயிலாக இந்திய நாகரிகத்திலுள்ள ஒற்றுமையை அறிந்துகொள்ள இந்த சங்கமம் ஒரு ஏதுவான தளமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "தமிழர்களின் பாரம்பரியத்தை உலகறிய செய்வதற்கு பிரதமர் நரேந்திரமோடி யோசனையில் உதித்தது காசி தமிழ் சங்கமம்" என்று நிகழ்ச்சி அமைப்பாளர் சாமுகிருஷ்ண சாஸ்திரி கூறியுள்ளார்.

மாணவர்கள், கைவினை, இலக்கியம், ஆன்மிகம், வர்த்தகம், ஆசிரியர்கள், பாரம்பரியம், தொழில்முனைவோர், தொழில்கள், கோவில்கள், கிராமப்புறம், கலாசாரம் என்று 12 பிரிவுகளிலிருந்து, ஒவ்வொரு பிரிவில் இருந்தும் ஒவ்வொரு நாள் என்று, ரெயில்களில் மொத்தம் 2,500 பேர் ராமேசுவரம், கோவை, சென்னை ஆகிய இடங்களிலிருந்து அழைத்து செல்லப்படுகிறார்கள்.

முதல் ரெயில் ராமேசுவரத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று செல்கிறது. இவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்துவிட்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடக்கும் கருத்தரங்குகளில் கலந்துவிட்டு, அங்குள்ள கண்காட்சியையும் பார்வையிடுவார்கள். இரு மையங்களுக்கும் ஒற்றுமையையும், நல்லுறவையும் இந்த சங்கமம் வலுப்படுத்தும். இதுபோல, கலாசார, ஆன்மிக, வர்த்தக, சுற்றுலா உறவுகள் கொண்ட இரு மாநிலங்கள், இரு நகரங்களுக்கு இடையே சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தினால், எந்த பேதமும் இல்லாமல் ஒற்றுமை திகழும். எந்த வேறுபாடுகளுக்கும் இடம் இருக்காது.


Next Story