மீண்ட சொர்க்கமாகிறது காஷ்மீர்; 33 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா பார்க்கலாம்!


மீண்ட சொர்க்கமாகிறது காஷ்மீர்; 33 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா பார்க்கலாம்!
x

பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் காஷ்மீர், எழில் கொஞ்சும் மலைகளும், ஏரிகளும் கொண்ட பிரதேசமாகும். புதுமண தம்பதிகள் தேனிலவுக்கு செல்ல தேர்ந்தெடுக்கும் முதல் இடம் காஷ்மீராக இருந்தது.

பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் காஷ்மீர், எழில் கொஞ்சும் மலைகளும், ஏரிகளும் கொண்ட பிரதேசமாகும். புதுமண தம்பதிகள் தேனிலவுக்கு செல்ல தேர்ந்தெடுக்கும் முதல் இடம் காஷ்மீராக இருந்தது. மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கூட ஒரு திரைப்படத்தில், "காஷ்மீர்.. பியூட்டிபுல் காஷ்மீர்.." என்று பாடிக்கொண்டு வரும் காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த காலங்களில், பல தமிழ் சினிமாக்கள் உள்பட பல மொழிகளின் படங்களுக்கான படப்பிடிப்புகள் காஷ்மீரில்தான் நடந்தன. இந்திய மக்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகளும் காஷ்மீருக்கு ஆசையோடு வந்தார்கள். காஷ்மீர் மக்களும் மிக அன்பானவர்களாகவே தங்கள் மாநிலத்துக்கு வரும் வெளி மாநிலத்தினரை, வெளிநாட்டினரை உபசரித்து வந்தனர்.

ஆனால், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளின் அட்டகாசத்தால், காஷ்மீரில் சட்டம்-ஒழுங்கு நிலை அடியோடு சீர்குலைந்தது. அந்த மாநிலத்தை சேர்ந்த பண்டிட்டுகளே தங்கள் வீடு வாசல்களை, சொத்துக்களை விட்டுவிட்டு, உயிர்தப்ப காஷ்மீரை விட்டு ஓடிச்செல்லும் நிலை ஏற்பட்டது. சொந்த பூமியில் உள்ளவர்களுக்கே இந்தநிலை என்னும்போது, எங்கே சுற்றுலா பயணிகளுக்கு இடம்? என்ற அவலநிலையை காஷ்மீர் சந்தித்தது. நாளுக்கு நாள் பயங்கரவாதம் அதிகரித்தது. இளவயதினரை மூளைச் சலவை செய்து, பணம் கொடுத்து பயங்கரவாத இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்கள்.

அந்த நேரத்தில், அதாவது 33 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் 12 சினிமா தியேட்டர்கள் இருந்தன. 1990-ம் ஆண்டுகளில் பரூக் அப்துல்லா முதல்-மந்திரியாக இருந்தபோது திரைப்படத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தார். அவர் காலத்தில் மட்டும் ரீகல், நீலம், பிராட்வே என்று 3 தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால், பயங்கரவாதிகள் ரீகல் தியேட்டர் மீது குண்டு வீசியதில் ஒருவர் மரணம் அடைந்தார். பலர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகளின் கோர நடவடிக்கைகளால் சினிமா பார்க்க செல்வதற்கு மக்கள் பயந்தனர். 12 சினிமா தியேட்டர்களும் மூடப்பட வேண்டியநிலை ஏற்பட்டது.

இப்போது சில சினிமா தியேட்டர்கள் இடிந்த நிலையில் இருக்கிறது. சில சினிமா தியேட்டர்கள் வணிக வளாகங்களாகிவிட்டன. ஏராளமானவர்கள் சினிமாவுக்கே இதுவரை சென்றதில்லை என்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இப்போது அங்குள்ளவர்களுக்கு பொழுதுபோக்கு என்பதே இல்லை. இந்த நிலையில், வருகிற அக்டோபர் மாதம் 1-ந்தேதி ஸ்ரீநகரில் 3 தியேட்டர்களை கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் திறக்கப்பட இருக்கின்றன. இதற்கு முன்பு எரிக்கப்பட்ட பிராட்வே தியேட்டர் இருந்த இடத்தில்தான் இந்த மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஐனாக்ஸ் தியேட்டர் என்று அழைக்கப்படும், இந்த திரையரங்குகளில் முதலில் 'விக்ரம் வேதா' படமும், 'பொன்னியின் செல்வன்' முதல் பகுதி படமும் திரையிடப்படுகிறது. 2 படங்களுமே தமிழில் தயாரிக்கப்பட்ட படங்கள் என்பதில் தமிழகத்துக்கு பெருமை.

காஷ்மீர் இயல்புநிலைக்கு வருவதற்கு இது முதல் படி. இந்த அமைதி நிலை மேலும் வளரவேண்டும் என்றால், நிலைக்கவேண்டும் என்றால், அது நமது ராணுவத்தினர் மற்றும் போலீஸ் படைகளின் கைகளில்தான் இருக்கிறது. ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் பாதுகாப்பு கொடுக்கவேண்டும். இதுபோல, 33 ஆண்டுகளுக்கு முன்புவரை அங்கு இருந்த 'தால்' ஏரி மற்றும் மானஸ்பால் ஏரியில் மாணவர்களுக்கான என்.சி.சி.யின் கடற்படை பிரிவு மாணவர்கள் படகு பயணத்தை மேற்கொள்வது, துடுப்பு போட்டு படகை ஓட்டுவது போன்ற பயிற்சிகளைப் பெற்றுவந்தனர். இதில் மாணவிகளும் பங்கேற்பது வழக்கம். 1989-ம் ஆண்டு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலால், அங்கு செல்வது நிறுத்தப்பட்டது.

இப்போது 33 ஆண்டுகளுக்கு பிறகு, மானஸ்பால் ஏரியில் இந்த கடற்படை பிரிவு என்.சி.சி. மாணவ-மாணவிகளின் பயிற்சிகள் தொடங்கப்பட்டன. இந்த இரு முயற்சிகளுமே நல்ல தொடக்கங்கள். இந்த தொடக்கங்கள் ஒரு தொடர் நிகழ்வுகளாக இருக்கும் வகையில், பாதுகாப்புகள் பலப்படுத்தப்படவேண்டும். பயங்கரவாதம் நசுக்கப்படவேண்டும்.


Next Story