அரசு பள்ளிக்கூடங்களில்தான் மழலையர் வகுப்புகள்


அரசு பள்ளிக்கூடங்களில்தான் மழலையர் வகுப்புகள்
x

ஒரு மாநிலத்தின் அனைத்து வளர்ச்சிகளுக்கும் அடிப்படை கல்வி வளர்ச்சியாகும்.

ஒரு மாநிலத்தின் அனைத்து வளர்ச்சிகளுக்கும் அடிப்படை கல்வி வளர்ச்சியாகும். அதனால்தான் 5 வயதான குழந்தைகள் யாரும் பள்ளிக்கூடங்களுக்கு செல்லாமல் இருக்கக்கூடாது என்ற வகையில், மத்திய, மாநில அரசுகள் மிகத் தீவிரமாக திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு இருக்கின்றன. மேலும் 3 வயதில் குழந்தைகளின் கற்றல் திறன் மிக சிறப்பாக இருக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அனைத்து குடும்பங்களிலும் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு 3 வயது ஆனவுடன் பிரி.கே.ஜி. வகுப்பிலும், எல்.கே.ஜி வகுப்பிலும் சேர்க்க மிக முனைப்புடன் இருக்கிறார்கள். அதன் பிறகு யு.கே.ஜி படித்து முடித்தவுடன்தான், முதல் வகுப்பில் சேர்க்க முடியும். இந்த வகுப்புகள் மழலையர் வகுப்புகள் என்றே அழைக்கப்படுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அரசு பள்ளிக்கூடங்களில் மழலையர் வகுப்புகள் இல்லாத நிலையில், ஏழை-எளிய பெற்றோரால் தங்கள் குழந்தைகளை மழலையர் வகுப்புகளில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. ஓரளவு வசதி படைத்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கூடங்களில் உள்ள 'கிண்டர் கார்டன்' வகுப்புகளில் சேர்த்து, தொடர்ந்து அந்த பள்ளிக்கூடங்களிலேயே 1-ம் வகுப்பில் சேர்த்து, பிளஸ்-2 வகுப்பு வரை படிக்க வைக்கிறார்கள். இந்த குழந்தைகளுக்கு 3 வயதிலேயே நல்ல கல்வி அமைந்துவிடுவதால், மேல் வகுப்புகளில் அவர்களால் ஜொலிக்க முடிகிறது. ஆனால் வசதியற்றவர்களின் குழந்தைகள், 5 வயது முடிந்தவுடன்தான் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்து, அடிப்படையில் இருந்து படிக்க தொடங்குவதால், தனியார் பள்ளிக்கூட மாணவர்களின் கல்வியை விட அவர்களின் கல்வி சற்று குறைவாகவே இருந்தது.

இந்த குறையைப் போக்க, 2019-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போது, தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வந்த 2,381 அங்கன்வாடி மையங்களை கண்டறிந்து, அங்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டன. 52 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இந்த வகுப்புகளில் படித்து வந்தனர். இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் இருந்த அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுகின்றன என்ற பரபரப்பான செய்திகள் வந்தன. இதுபற்றி விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'இந்த வகுப்புகள் மூடப்படவில்லை. அரசு பள்ளிக்கூடங்களில் பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இருந்த இந்த வகுப்புகள் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடிகளுக்கு (குழந்தைகள் மையங்கள்) மாற்றப்பட்டுள்ளன' என்று அறிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக தொடக்க கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், 'தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மழலையர் வகுப்புகளில் கல்வி கற்றுக்கொடுக்க சிக்கல் இருக்கிறது. 2,381 அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே இருந்த குழந்தைகளுக்கு முந்தைய நடைமுறையை பின்பற்றி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் அங்கன்வாடி உதவியாளர்கள் மூலம் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.

மழலையர் வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்படக் கூடாது, பள்ளிக்கூட கல்வித்துறை கட்டுப்பாட்டிலேயே அரசு பள்ளிக்கூடங்களில்தான் தொடர்ந்து இயங்கவேண்டும், அதாவது தகுதி பெற்ற ஆசிரியர்களால்தான் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். நாங்கள் அறிவித்து விட்டோம், மாற்ற மாட்டோம் என்று நினைக்காமல், அரசு பள்ளிக்கூடங்களிலேயே எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தல் பெயரில், பள்ளிக்கூட கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு மிக மிக பாராட்டுக்குரியது. இதற்கு தகுதியான சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பும் வரவேற்புக்குரியது.


Next Story