தேடிச்சென்றும் கேட்போம் ; வந்த இடத்திலும் கேட்போம் !


தேடிச்சென்றும் கேட்போம் ; வந்த இடத்திலும் கேட்போம் !
x

தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சி மிக்க மாநிலமாக மாற்றும் முயற்சியில் தமிழக அரசு மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சி மிக்க மாநிலமாக மாற்றும் முயற்சியில் தமிழக அரசு மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இலக்கான ரூ.80 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சியை 2030-க்குள் பெற்றாக வேண்டும் என்றால், வேலைவாய்ப்புகள் மிகுந்த தொழில் வளம் பெருகியாக வேண்டும். அந்த நோக்கத்தில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், சிறு தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனும் எடுத்துக்கொண்ட அயராத முயற்சிகளால், வியத்தகு உயர்வுகள் தொழில்துறையில் காணப்படுகிறது.

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு துறை செயலாளரான கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவன நிர்வாக இயக்குனர் பூஜா குல்கர்னியும், அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு சிறு தொழில் துறை செயலாளர் அருண்ராயும் உறுதுணையாக இருந்து பல புதிய தொழில்களையும், தொழில் முனைவோர்களையும் தமிழ்நாட்டில் புதிது புதிதாக உருவாக்கி வருகிறார்கள். அமைச்சர் தங்கம் தென்னரசு மாநிலத்திலுள்ள தொழில்முனைவோர் மட்டுமல்லாமல், அனைத்து மாநில தொழில் அதிபர்கள் என்ற வட்டத்தையும் தாண்டி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, தொழில் முதலீடுகளை ஈர்த்துவருகிறார்.

தமிழக தொழில் வளர்ச்சியில் தென்கொரிய நிறுவனங்களின் பங்கும் அளப்பரியது. தென் மாநிலங்களில் 250 தென்கொரிய நிறுவனங்கள் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 150 நிறுவனங்கள் இருக்கின்றன. இது போதாது, இன்னும் நிறைய தொழில் முதலீடுகள் தென்கொரியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்ற முனைப்பிலும், தமிழ்நாட்டில் இருந்து தென்கொரியாவுக்கு ஏற்றுமதியை இன்னும் ஊக்குவிக்கவேண்டும் என்ற இலக்கிலும், அமைச்சர் தங்கம் தென்னரசு, தென்கொரிய நாட்டுக்கு தன் குழுவோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள வர்த்தகம், தொழில் மற்றும் எரிசக்தி துறை மந்திரியை சந்தித்து பேசியதோடு மட்டுமல்லாமல், தொழில் முனைவோரையும் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை இருப்பதால்தான் 150 தென்கொரிய நிறுவனங்கள் வெற்றிகரமாக நடந்துவருகிறது. மேலும், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு அரசு என்னென்ன சலுகைகள்?, குறிப்பாக மானியங்கள், வரிச்சலுகைகள் அளிக்கிறது என்பதை விளக்கினார்.

இதுமட்டுமல்லாமல், இப்போது தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார். இதன் விளைவாக சில நிறுவனங்கள் தமிழ்நாட்டில் காலணிகள் தயாரிக்கும் தொழில்களை தொடங்க ஆர்வம் காட்டியுள்ளன. அங்கு மட்டுமல்லாமல், ஜப்பான் நாட்டுக்கும் சென்றார். தமிழ்நாட்டில் 200 ஜப்பான் நிறுவனங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள அன்னிய நேரடி முதலீட்டில் 9.22 சதவீத முதலீடுகள் ஜப்பான் நாட்டில் இருந்து வந்த முதலீடுகள்தான். அங்கிருந்து இன்னும் அதிகமான எலெக்ட்ரானிக் தொழில் முதலீடுகளை ஈர்க்க பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசனும், செயலாளர் அருண்ராயும் அடுத்த மாதம் 3-ந்தேதி செக் குடியரசு நாட்டில் நடக்கும் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு, தமிழ்நாட்டில் இத்தகைய தொழில்களை தொடங்குவதற்கு இருக்கும் நல்ல வாய்ப்புகளை விளக்கி கூறுவதோடு மட்டுமல்லாமல், அத்தகைய முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நாடுகளுக்கு அழைப்பும் விடுக்கிறார்கள். "சென்றிடுவீர் எட்டுத்திக்கும், தொழில் வளங்கள் யாவையும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து சேர்ப்பீர்" என்ற வகையில் முயற்சிகளை மேற்கொண்டுவரும் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

இவர்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளும் நிலையில், அமைச்சர் எ.வ.வேலு தன்னை சந்திக்க வந்த கொரிய நாட்டின் முன்னணி சிவில் பொறியியல் ஆலோசனை குழுவினரிடம், தமிழ்நாட்டில் சிவில் பொறியியல் தொடர்பான திட்டங்கள் தொடங்க மூலதனம் செய்தால், என்னென்ன வகையிலான ஊக்கச்சலுகைகள் தமிழக அரசு மூலம் வழங்கப்படும் என்று விளக்கமாக கூறி அழைப்பு விடுத்தார். மொத்தத்தில், தொழில் முதலீடுகளை ஈர்க்க நேரிலும் செல்வோம், எங்களை சந்திக்கவரும் வெளிநாட்டினரிடமும் விளக்குவோம் என்ற வகையில், தமிழக அமைச்சர்களின் முயற்சிகள் சிறப்புக்குரியது.


Next Story