வேகமாக பரவுகிறது மெட்ராஸ்-ஐ


வேகமாக பரவுகிறது மெட்ராஸ்-ஐ
x

தமிழ்நாடு முழுவதும் இப்போது பலர் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டும், கண்கள் சிவந்த நிலையிலும் இருப்பதைக் காணமுடிகிறது.

தமிழ்நாடு முழுவதும் இப்போது பலர் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டும், கண்கள் சிவந்த நிலையிலும் இருப்பதைக் காணமுடிகிறது. கண் மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனைகள் உள்பட அனைத்து மருத்துவமனைகளிலும், மெட்ராஸ்-ஐ என்று கூறப்படும் கண் வெண்படல அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முதலில் நூற்றுக்கணக்கில் வந்த நோயாளிகளின் எண்ணிக்கை, இப்போது தமிழ்நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள். கன்னியாகுமரியில் இந்த நோயால் பாதிக்கப்படுபவரையும், அவருக்கு மெட்ராஸ்- ஐ என்றே கூறுகிறார்கள்.

இதற்கு காரணம் 1918-ம் ஆண்டுதான் முதல் முறையாக இந்த தொற்று சென்னையில் கண்டறியப்பட்டது. அப்போது சென்னையின் பெயர் மெட்ராஸ். அதனால் இந்த நோய்க்கு மெட்ராஸ்-ஐ என்ற பெயர் வந்தது. இந்த நோய் கண் இமைகளில் அடினோ வைரஸ் அல்லது 19 நுண்ணுயிரியினால் ஏற்படும் தொற்றாகும். இப்போது பரவி வரும் மெட்ராஸ்-ஐ கண் நோய் எந்த வகையான வைரஸ் கிருமியினால் ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்க, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களில் இருந்து வடிந்த கண்ணீரை எடுத்து கிண்டி 'கிங்' மருத்துவமனையில் உள்ள பரிசோதனை கூடத்தில் நுண்கிருமி பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தம் 66 மாதிரிகளை சோதனை செய்ததில் 56 மாதிரிகளில் அடினோ வைரஸ் மற்றும் எண்டிரோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தொற்றுகளால் பாதிப்பு ஏற்பட்டவுடன் கண் சிவந்து அரிப்பும், எரிச்சல் தன்மையும் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல், கண்ணில் மண் விழுந்ததைப்போல உறுத்தல், கண்களில் இருந்து கண்ணீர் வடிதல், பீளை வருதல், காலையில் தூங்கி எழும்பும்போது கண்கள் ஒட்டிக்கொள்ளுதல், சிலருக்கு கண்களில் இருந்து ரத்தம் கலந்த நீர் வடிதல், கண் மங்கலாக தெரிதல் போன்ற அறிகுறிகளும் ஏற்படும். மற்றும் சிலருக்கு கண் இமைகளில் வீக்கம், இந்த நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சளிக் காய்ச்சல் வருதல் போன்றவையும் ஏற்படுகிறது.

பெரும்பாலும் ஒன்றன்பின் ஒன்றாக இரு கண்களிலும் தொற்று ஏற்பட்டு விடுகிறது. இதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. சரியான சிகிச்சை அளித்தால், உரிய மருந்துகளை போட்டு வந்தால், 3 அல்லது 5 நாட்களில் சரியாகிவிடும். ஆனால், இந்த நோய் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு எளிதாக பரவிவிடும். பொதுவாக மழைக்காலங்களில்தான் இந்த நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கும். மழைக்காலங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, பாதிக்கப்பட்டவர் தும்மும்போதும் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர் தன் கைகளால் கண்களை தொடும்போதும் பரவுகிறது. தற்போது குழந்தைகள் மற்றும் சிறார்கள் மத்தியில் அதிகமாக பரவுகிறது. கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொத்து கொத்தாய் பரவுகிறது.

மெட்ராஸ்-ஐ நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக மருத்துவம் செய்ய வேண்டாம், கண் மருத்துவர் சோதனைக்கு பிறகு அவர் பரிந்துரைக்கும் ஆண்டிபயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளையே பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள், கண் மருத்துவ நிபுணர்கள். பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமும், அவர்கள் பயன்படுத்திய துண்டு, கைக்குட்டை, படுக்கை விரிப்புகளை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதன் மூலமுமே, அடுத்தவர்களுக்கு பரவாமல் தடுக்கமுடியும். மெட்ராஸ்-ஐ கண் நோய்க்கு விடை கொடுக்கவும் முடியும்.


Next Story