கொரோனா வராமல் தடுக்கும் முககவசம் !


கொரோனா வராமல் தடுக்கும் முககவசம் !
x

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டுக்குள் காலெடுத்து வைத்து, தொடர்ந்து 3 அலைகளாக வாட்டி வதைத்த கொடிய கொரோனாவால், இதுவரை ஏறத்தாழ 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டுக்குள் காலெடுத்து வைத்து, தொடர்ந்து 3 அலைகளாக வாட்டி வதைத்த கொடிய கொரோனாவால், இதுவரை ஏறத்தாழ 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 ஆயிரத்து 26 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உச்சநிலையில் இருந்தபோது ஊரடங்கு, அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் அடைப்பு, கடைகளை திறக்க நேர கட்டுப்பாடு, அதிகபட்ச வாடிக்கையாளர்கள் எத்தனை பேர் வரலாம்? திருமண மண்டபத்துக்கு, இறுதி சடங்குக்கு எத்தனை பேர்தான் வரலாம்? என்பது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

கடுமையான பொருளாதார பாதிப்பு, உற்பத்தி வீழ்ச்சி, வணிகம் பாதிப்பு, வேலையிழப்பு, விலைவாசி உயர்வு என்று பலமுனை தாக்குதலால் அரசு மட்டுமல்ல, பொதுமக்களும் சொல்லொண்ணா துயரத்தை அடைந்தனர். இப்போதுதான் கொரோனா குறைந்தது என்ற நிலையில், அரசும், பொதுமக்களும் ஏன் ஒட்டுமொத்த சமுதாயமும் மெதுவாக எழுந்து நின்று நடக்க தொடங்கியது. அரசு விதித்த கட்டுப்பாடுகளெல்லாம் தளர்த்தப்பட்டு, சகஜநிலை திரும்பியது. ஆனால் இப்போது மீண்டும் பழைய நிலை வந்துவிடுமோ? என்ற அச்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிவிட்டது.

கடந்த ஏப்ரல் 9-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு 21 பேர்தான் என்ற நிலை வந்தவுடன், அப்பாடா, இனி இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கொரோனாவே இல்லாதநிலை தமிழ்நாட்டுக்கு வந்துவிடும் என்ற பலத்த எதிர்பார்ப்பில், மக்கள் முககவசத்தைகூட மறந்துவிட்டார்கள். ஆனால் அடுத்தநாள் முதலே மெல்ல.. மெல்ல.. ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து, கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் பாதிப்பு எண்ணிக்கை எகிறத் தொடங்கி, இப்போது தினசரி பாதிப்பு நேற்று 2,069 ஆகிவிட்டது. மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதன் காரணமாக, கடந்த 15-ந்தேதி ஒரு இளம்பெண் உயிரிழப்பு தவிர, 100 நாட்களுக்கு மேலாக உயிரிழப்பு இல்லை என்பது சற்று ஆறுதலாக இருக்கிறது.

இந்தியா முழுவதும் 42 லட்சம் உயிரிழப்புகளை தடுப்பூசி தடுத்துள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. எனவே இன்னும் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்களும், பூஸ்டர் டோஸ் போடாத அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். கொரோனா உருமாறிக்கொண்டே இருக்கிறது. அப்படி உருமாறிய பிஏ.4, பிஏ.5 மற்றும் பிஏ.2.38 ஆகிய வைரசினால்தான், இப்போது கொரோனா பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த கொரோனாவுக்கு கூட்டமென்றால், அல்வா சாப்பிட்டது போல்தான். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா வந்தால், அனைவருக்கும் வேகமாக பரவிவிடுகிறது.

அந்தவகையில்தான் சென்னை, தூத்துக்குடி, விருதுநகர் மருத்துவக் கல்லூரி விடுதிகள் உள்பட பல கல்லூரி விடுதிகளிலும் கொரோனா பரவியுள்ளது. மேலும், ஆரம்பத்தில் பெரிய அறிகுறி எதுவும் இருக்காது. லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற சந்தேகப்பட முடியாத அறிகுறியே ஏற்படுகிறது. இப்போது ஏற்கனவே போட்டுக்கொண்ட தடுப்பூசிகளின் வீரியமும் சற்று குறைந்துள்ளதால், தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வரும் அபாயம் இருக்கிறது.

அப்படியானால் கொரோனா வராமல் தடுக்க என்னதான் வழி? என்று கேட்கலாம். முககவசமும், சமூகஇடைவெளியும் மட்டுமே முழுமையாக கொரோனாவில் இருந்து காப்பாற்றும். அதனால்தான் தமிழக அரசு இதை கட்டாயமாக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காதவர்களிடமும் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்களும் இதன்படி அனைவரும் பொது இடங்களில் முககவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன் குழுவோடு, நேற்று முன்தினம் சென்னை லஸ் கார்னரில் 4 மணி நேரம் தொடர்ச்சியாக நின்றுகொண்டு, 67 ஆயிரத்து 500 பேருக்கு முககவசங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இனியும் ஒரு ஊரடங்கை தமிழ்நாடு தாங்காது. அரசும் பொது இடங்களில் முககவசம் போடாமல் யாரும் வரமுடியாது என்ற நிலையை உருவாக்கவேண்டும்.


Next Story