இந்தியிலும், தமிழிலும் எம்.பி.பி.எஸ். படிப்பு


இந்தியிலும், தமிழிலும் எம்.பி.பி.எஸ். படிப்பு
x

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அவரவர் தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அவரவர் தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைக்கும் தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருக்கவேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆங்கிலம் மாநிலங்களை மட்டுமல்ல, உலகத்தோடும் இணைக்கும் பொது மொழியாக இருக்கிறது. இந்த நிலையில், அனைத்து மாநிலங்களும் தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்துகின்றன. கல்லூரிகளில் ஆங்கிலமும் பாடமொழியாக இருக்கிறது. தமிழ்மொழியும் பாடமொழியாக இருக்கிறது. ஆனால் மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்படிப்புகளை பொருத்தமட்டில் ஆங்கிலமே பாடமொழியாக இருந்துவருகிறது.

இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலுமே இதுதான் நிலையாக இருந்தது. ஆனால், இப்போது மத்தியபிரதேசம் முதன் முதலாக எம்.பி.பி.எஸ். படிப்பை இந்தியில் தொடங்க இருக்கிறது. இதையொட்டி, இந்த பட்டப்படிப்புக்கான 3 பாடப்புத்தகங்களை இந்தியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார். 'வரலாற்றில் இது முக்கியமான நாள்' என்று குறிப்பிட்ட அமித்ஷா, இதேபோல, விரைவில் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்விகளும் இந்தியில் தொடங்கப்படும் என்று அறிவித்தார். மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்திலும் மருத்துவம் மட்டுமல்லாமல், என்ஜினீயரிங் படிப்புகளுக்குமான புத்தகங்கள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன.

மத்திய பிரதேசத்தில் அமித்ஷா இந்தியில் மருத்துவ படிப்புகளுக்கான புத்தகங்களை வெளியிட்ட 2 வாரங்களில், தமிழக மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் தற்போது மேலும் 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டு, தற்போது அது பரிசீலனையில் உள்ளது. இந்த 6 மருத்துவ கல்லூரிகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு, சென்னையில் ஒரு புதிய தமிழ்வழி மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும்.

அத்தகைய சூழ்நிலையில், அந்த மருத்துவ கல்லூரிக்கான பாடப்புத்தகங்களும் தமிழில் இருக்கவேண்டும் என்ற வகையில், தற்போது 3 பேராசிரியர்கள் மருத்துவ புத்தகங்களை மொழிபெயர்த்து வருகிறார்கள். முதல் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணி ஒரு மாதத்துக்குள் முடிவடைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்படும் என்று அறிவித்தார். தாய்மொழியில் படித்தால் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். சிறந்த சிகிச்சை அளிக்க முடியும், நோயாளிகளிடம் பொதுவாக டாக்டர்கள் தமிழில்தானே பேசுகிறார்கள், அதற்கு தமிழ்மொழி வழி படிப்பு பெரும் உதவியாக இருக்குமே என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் உள்ள பாடப் புத்தகங்களை புரிந்துகொண்டு மருத்துவத்தையும், சிகிச்சை முறைகளையும் அறிந்து கொள்வதைவிட, தமிழில் படிக்கும்போது மிக எளிதில் புரிந்துகொள்ள முடியும் - அறிந்துகொள்ள முடியும் என்பது அவர்களின் கருத்து. உலகம் முழுவதுமே தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் இந்த நேரத்தில், மருத்துவ பாடப்புத்தகங்களை தமிழில் மொழி பெயர்ப்பதும், தமிழ் மொழி வழியில் எம்.பி.பி.எஸ். படிப்புகளை தொடங்க தமிழக அரசு சார்பில் எடுக்கப்படும் முயற்சிகளும் வரவேற்கத்தக்கதாகும். தமிழ் மொழியில் படிப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரியாமல் நிச்சயமாக இருக்காது. மேலும், ஆங்கிலத்தை பாடமொழியாக கொண்டு படிப்பவர்களும், தாய்மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களை வைத்து ஆங்கில புத்தகங்களில் விளங்காத பகுதிகளை புரிந்துகொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் மாணவர்களின் வரவேற்பைப்பொருத்துதான் தாய்மொழி வழியான மருத்துவ படிப்பின் எதிர்காலம் இருக்கிறது.


Next Story