70 நாட்களாக நிரம்பி வழிந்த மேட்டூர் அணை


70 நாட்களாக நிரம்பி வழிந்த மேட்டூர் அணை
x

காவிரி ஆற்றை டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்களுக்கு வாழ்வளிக்கும் தாயாகவே கருதுகிறார்கள்.

காவிரி ஆற்றை டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்களுக்கு வாழ்வளிக்கும் தாயாகவே கருதுகிறார்கள். அந்த தாயின் வீடு மேட்டூர் அணைதான். காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் நீர் சேமிப்பு உயரம் 120 அடியாகும். மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி. ஆகும். மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரைத்தான் திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், ஈரோடு, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், 16 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் சாகுபடி செய்ய நம்பி இருக்கின்றனர்.

இந்த தண்ணீரை வைத்து குறுவை சாகுபடி 4 லட்சம் ஏக்கரிலும், சம்பா சாகுபடி 12 லட்சம் ஏக்கரிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அணை கட்டுவதற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.1923-ல் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட மக்கள் தங்கள் விவசாயத்துக்காக மேட்டூரில் ஒரு அணை கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுதான் முதல் முயற்சியாகும். அன்று தொடங்கி பல கட்ட ஆய்வுகளைத் தாண்டி 1925-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகள் தொடங்கின.

1934-ம் ஆண்டு கட்டுமான பணிகள் முடிவடைந்து அணை திறக்கப்பட்டது. தொடக்கத்திலேயே இரு மாநிலங்களுக்கும் இடையில் காவிரி தண்ணீர் திறந்து விடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஒப்பந்தம் காலாவதி ஆனது. பிற்காலங்களில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தொடர்ந்துதாவா ஏற்பட்டது. மறைந்த கலைஞர் கருணாநிதியின் அயராத முயற்சியால் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் கொடுத்த இறுதி தீர்ப்பை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆண்டுதோறும் கர்நாடகா மாநிலம் தமிழ்நாட்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், கர்நாடகத்தில் பெருமழை பெய்து அங்கு தேக்கி வைக்க முடியாத நிலையில், உபரி நீரைத்தான் 177.25 டி.எம்.சி.யோ அதற்கு மேலோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் கனமழை பெய்து வேறு வழியில்லாமல் மேட்டூர் அணைக்கு வெள்ளமென பாய்ந்துவரும் நிலையில்தான் மேட்டூர் அணை நிரம்புகிறது. கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை 468 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்திருக்கிறது. இந்த காலக்கட்டங்களில் காவிரி டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக 135 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ளது.

பொதுவாக தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டை தவிர கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்துக்கு கை கொடுக்கவில்லை. ஆனால், கர்நாடகா, கேரளாவில் பெய்ததால் தமிழ்நாட்டுக்கு பலன் கிடைத்தது. மொத்தத்தில் கர்நாடகத்தில் கனமழை பெய்தால் மேட்டூருக்கு தண்ணீர் வந்துவிடும் என்று தமிழக விவசாயிகள் உள்ளம் மகிழ்ச்சியால் பெருக்கெடுத்தோடும்.

அந்தவகையில், கடந்த 88 ஆண்டுகளில் மேட்டூர் அணையில் 1959-ம் ஆண்டுதான் 78 நாட்கள் உச்ச நீர்மட்டமான 120 அடி நீர் நிரம்பியிருந்தது. 1981-ம் ஆண்டு 62 நாட்களும், 1961-ம் ஆண்டு 60 நாட்களும் தொடர்ந்து அதேநிலை நீடித்தது. இந்த ஆண்டு கடந்த ஜூலை 16-ந்தேதி முதல் செப்டம்பர் 23-ந்தேதி வரை தொடர்ந்து 70 நாட்கள் முழு அளவு தண்ணீர் நிரம்பி நின்று 2-வது முறையாக தொடர்ந்து அதிக நாட்கள் நின்று வரலாறு படைத்திருக்கிறது. இந்த ஆண்டு அதிக நிலப்பரப்பில் சாகுபடி என்ற சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. 'நடந்தாய் வாழி காவிரி' என்று தமிழக மக்கள் போற்றி மகிழ்கிறார்கள்.


Next Story