காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தம் இல்லையா!


காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தம் இல்லையா!
x

எல்லா துறைகளிலும் வேகமான வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கும் இந்தியா, விளையாட்டுத்துறையில் துரிதமான வளர்ச்சியை அடையாவிட்டாலும், மெல்ல.. மெல்ல.. தன்வேகத்தை கூட்டிவருகிறது.

எல்லா துறைகளிலும் வேகமான வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கும் இந்தியா, விளையாட்டுத்துறையில் துரிதமான வளர்ச்சியை அடையாவிட்டாலும், மெல்ல.. மெல்ல.. தன்வேகத்தை கூட்டிவருகிறது. விளையாட்டு போட்டிகளை பொறுத்தமட்டில், மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என பல போட்டிகள் மாநில அரசுகளால் நடத்தப்படுகின்றன. ஆனால் சர்வதேச அளவில் நமது விளையாட்டு வீரர்களின் தரத்தை, தகுதியை மதிப்பிடவேண்டுமென்றால், தெற்காசிய போட்டி, ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் போட்டி, ஒலிம்பிக் போட்டி மற்றும் ஒவ்வொரு விளையாட்டுகளுக்கான உலகளாவிய போட்டிகளில் பங்கு பெறுவதன் மூலமாகத்தான் முடியும்.

இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் இதுவரை பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை என்றாலும், மற்ற விளையாட்டுகளில் அவர்கள் அடையும் வெற்றிகள் எதிர்காலத்தில் நிச்சயமாக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளிலும் ஜொலிப்பார்கள், இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தெற்காசிய போட்டி, ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் போட்டி, ஒலிம்பிக் விளையாட்டு இவை அனைத்தும் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. ஆனால், பெரும்பாலும் ஒரே ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகள் நடப்பதில்லை. காமன்வெல்த் விளையாட்டு போட்டி என்பது, இங்கிலாந்து நாட்டின் ஆளுகையில் இருந்து விடுதலை பெற்ற 70-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு பெறுவதாகும்.

இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்தது. இதில் இந்தியா அதிகமான பதக்கங்களை வென்று குவித்தது. அடுத்த காமன்வெல்த் விளையாட்டு 2026-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கிறது. ஆனால் இந்த போட்டியில், இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை கொண்டுவரும் மல்யுத்த போட்டி இடம் பெறாது என்ற சமீபத்திய அறிவிப்பு என்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. பொதுவாக காமன்வெல்த் போட்டியை நடத்தும் நாடுகள் உள்ளூர் ஆர்வத்துக்கு ஏற்ப ஒரு சில விளையாட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும். அந்த வகையில்தான், ஆஸ்திரேலியா மல்யுத்தத்துக்கு கல்தா கொடுத்துள்ளது. அதே சமயம் துப்பாக்கி சுடுதல் போட்டி மீண்டும் சேர்க்கப்பட்டிருப்பது சற்று ஆறுதலாகும்.

மல்யுத்தம், காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலக்கி வைக்கப்படுவது இது முதல்முறையல்ல. 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்ட காமன்வெல்த் விளையாட்டில் 1990-ல் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடந்தபோட்டியிலும், 1998-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த போட்டியிலும், 2006-ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த போட்டிலும் இதுபோல மல்யுத்தம் இடம்பெறாத சூழ்நிலை இருந்தது.

மல்யுத்தத்தை பொறுத்தமட்டில், இந்தியா இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் 6 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என்று 12 பதக்கங்களை அள்ளியது. இந்தியா மொத்தம் குவித்த 61 பதக்கங்களில் மல்யுத்த விளையாட்டில் கிடைத்ததே அதிகமாகும். எனவே, இந்திய மல்யுத்த விளையாட்டுக்கு இது நல்ல செய்தி இல்லை. பல நேரம் வெற்றி வாகை சூடிய வீரர்கள் மல்யுத்த போட்டிக்கு இது துக்கமான நாள் என்று கூறுகிறார்கள்.

மத்திய அரசாங்கம் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.20 லட்சமும், வெள்ளிப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சமும், வெண்கலம் பெறுபவர்களுக்கு ரூ.7½ லட்சமும் வழங்குகிறது. இந்திய மல்யுத்தத்தின் கேந்திரமாக விளங்கும் அரியானா தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.1½ கோடி கொடுக்கிறது. தமிழக அரசு முறையே ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் வீதம் வழங்கி கவுரவிக்கிறது.

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும், பலன் அளிக்கும் மல்யுத்த போட்டியை காமன்வெல்த் விளையாட்டில் இருந்து விலக்கி வைக்கக்கூடாது என்று மத்திய அரசாங்கம், காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தையும், ஆஸ்திரேலியா போட்டி அமைப்பு குழுவையும் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும். காமன்வெல்த் விளையாட்டில் மல்யுத்தத்தை மீண்டும் சேர்த்தால் இந்தியாவுக்கு மகிழ்ச்சி. சேர்க்காவிட்டால், பதக்கப்பட்டியலில் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும் என்ற வகையில் பெரிய ஏமாற்றமே.


Next Story