இலங்கை கடற்படை மட்டுமல்ல; இந்திய கடற்படையாலும் ஆபத்தா?


இலங்கை கடற்படை மட்டுமல்ல; இந்திய கடற்படையாலும் ஆபத்தா?
x

கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இயற்கை இடர்பாடுகளைக்கூட சமாளித்துவிடுகிறார்கள்.

கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இயற்கை இடர்பாடுகளைக்கூட சமாளித்துவிடுகிறார்கள். ஆனால், எந்த நேரத்தில் இலங்கை கடற்படையினர் வருவார்களோ, நம்மை பிடித்துசென்று விடுவார்களோ, சிறையில் அடைத்துவிடுவார்களோ, படகுகளை பறிமுதல் செய்து நம் பிழைப்பில் மண்ணை போட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் வலையைப்போட்டு அதைப் பார்ப்பதைவிட இலங்கை கடற்படை கப்பல் வருகிறதா? என்று கடலைப்பார்ப்பதிலேயே நேரத்தை செலவழிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சிறையில் அடைக்கப்படும்போதெல்லாம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பிரதமருக்கு, "எங்கள் மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசாங்கத்தோடு பேசி நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று அவசர கடிதம் எழுதுகிறார். பிரதமரும் உடனடியாக அந்த கோரிக்கையை ஏற்று இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்களை விடுவிக்கிறார்கள். மீனவர்களை விடுவிக்கும் இலங்கை அரசாங்கம் படகுகளை உடனடியாக விடுவிப்பதில்லை.

தமிழக மீனவர்களுக்கு இப்போது புதிதாக ஒரு ஆபத்து இந்திய கடற்படையாலும் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், காரைக்காலை சேர்ந்தவர்களும் என்று 10 மீனவர்கள் ஒரு படகில் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். பங்காரம்' என்ற கப்பல் அவர்களை நிறுத்துமாறு சொன்ன நேரத்தில், கடலில் மழைபெய்து கொண்டிருந்ததால் அவர்களின் எச்சரிக்கையை கவனிக்காமலோ அல்லது இலங்கை கடற்படை கப்பல் விரட்டுகிறது என்று நினைத்ததாலோ அல்லது வேறு காரணங்களாலோ அந்த படகு நிறுத்தப்படாததால், இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் வீரவேல் என்ற மீனவரின் வயிற்றிலும், தொடையிலும் குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்தார். அவர்கள் படகுகளை குண்டுகள் துளைத்தன.

கடற்படையினர் அவருக்கு முதல் உதவி கொடுத்து பின் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மீதம் உள்ள மீனவர்கள் கடற்படையினர் தங்களை கடுமையாக தாக்கியதாக கூறுகிறார்கள். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து ராணுவத்துறை மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' பதிவில், வங்காள விரிகுடாவில் ரோந்து பணியாற்றிக்கொண்டிருந்த கடற்படை கப்பல் சந்தேகத்துக்கிடமான படகை பார்த்து நிறுத்தும்படி திரும்ப, திரும்ப எச்சரிக்கை விடுத்தும் நிறுத்தவில்லை. இதனால் செயல்பாட்டு வழிமுறைகள்படி எச்சரிக்கை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் அந்த படகில் இருந்த ஒருவர் காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மீனவர்கள் செய்தது தவறு என்றாலுமே கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தாமலேயே அந்த படகை வளைத்து பிடித்து இருக்க முடியும். இந்த சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு, "இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்" என்று கடிதம் எழுதி கேட்டுக்கொண்டுள்ளார். மீனவர்களை இலங்கை கடற்படையும் தாக்கக்கூடாது, இந்திய கடற்படையும் தாக்கக்கூடாது, அவர்கள் தவறு செய்து இருந்தால் சட்டம் தன் கடமையை செய்யட்டும், துன்புறுத்தல் வேண்டாம்.


Next Story