வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன!


வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன!
x

சமீபத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவ- மாணவிகள் எழுதிய 10-ம் வகுப்பு தேர்வில் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

சமீபத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவ- மாணவிகள் எழுதிய 10-ம் வகுப்பு தேர்வில் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதுபோல 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வில் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். இந்த முடிவுகள் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியும், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லையே என்ற நிலையில் உள்ள மாணவர்களுக்கும், தோல்வியடைந்த மாணவர்களுக்கும் ஏமாற்றத்தையும் அளித்திருக்கும். ஆனால் இது தங்கள் வாழ்வில் ஒரு முட்டுக்கட்டை என்றோ, தடைக்கல் என்றோ மாணவர்கள் எண்ணி சோர்ந்து விடக்கூடாது. முதலில் மனதை திடப்படுத்திக்கொள்ள வேண்டும். இதுவே முடிவல்ல. நடந்து முடிந்த தேர்வுதான், ஒரே தேர்வு அல்ல. அதுபோல நீங்கள் ஒருவர்தான் குறைந்த மதிப்பெண் பெற்றவரும் அல்ல என்பதை இந்த மாணவர்கள் மனதில்கொள்ள வேண்டும். தலைமை செயலாளர் வெ.இறையன்பு கூறியதுபோல, 'நிறைவேறாத ஆசைகளின் நிழலில், தொடருகிறது வாழ்வின் ராகம்'. வழி நெடுக வைரங்கள் என்பது போன்று, இன்னும் அவர்களின் கல்வி பாதையில் வாய்ப்புகள் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன. அதுவும் உடனடியாக இருக்கிறது. தோல்வியடைந்தவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கும் வகையில், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் உடனடி துணைத்தேர்வு நடக்க இருக்கிறது. அந்த தேர்வு முடிவுகளும் உடனடியாக அறிவிக்கப்பட்டுவிடும். நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரி படிப்பை தொடரலாம்.

அதுபோல பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற 7 லட்சத்து 55 ஆயிரத்து 999 மாணவர்களும், குறிப்பாக, அதிக அளவில் வெற்றி பெற்ற மாணவிகள், அதாவது 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 மாணவிகளும், குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிக்க முடியாத நிர்ப்பந்தம் உள்ளவர்கள் தவிர, மற்றவர்களெல்லாம் கண்டிப்பாக பள்ளிக்கூட மாணவர்கள் என்ற நிலையில் இருந்து, கல்லூரி மாணவர்கள் என்ற பெயரை அடையும் வகையில் கல்லூரிகளில் படிப்பை தொடரவேண்டும். எல்லோரும் கல்லூரிகளில் படிக்க இடங்கள் இருக்கின்றன. என்ஜினீயரிங் கல்லூரிகளில் மட்டும் 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 இடங்கள் இருக்கின்றன. இதுதவிர மற்ற தொழில் கல்லூரிகள், கலை கல்லூரிகள் இருக்கின்றன. நான் குறைவான மதிப்பெண்தானே பெற்று இருக்கிறேன். எனக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காதே என்று மனம் தளர்ந்துவிடக்கூடாது. எந்த கல்லூரி என்றாலும், பாடத்திட்டம் ஒன்றுதான். இனி படித்து நல்ல மதிப்பெண் எடுப்பது என் கையில்தான் இருக்கிறது என்ற உத்வேகத்தோடு படிக்கவேண்டும். எதிர்காலத்தில் நிறைய வேலைவாய்ப்புகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அதை அடைவது மாணவர்களிடம்தான் இருக்கிறது.

தமிழக அரசு சார்பில் "நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" நிகழ்ச்சியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், எந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்?, எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கிறது? என்று எடுத்துக்கூறி வழிகாட்டும் வாய்ப்புதான் இது என்று அவர் கூறினார். மேலும் கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி, அந்தந்த துறையில் மிகச்சிறந்த வல்லுனர்கள் ஆவதற்கு கல்வி நிறுவனங்கள் அளிக்கும் பாடப்பிரிவுகள் குறித்தான இந்த வழிகாட்டும் நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் இன்று, நாளை மற்றும் ஜூலை 1, 2-ந் தேதிகளில் நடக்கின்றன. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தியும், அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவிகள் கல்லூரியில் படிப்பை தொடர்ந்தால் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பை பயன்படுத்தியும், அனைத்து மாணவ-மாணவிகளும் தங்கள் கல்லூரி கனவை நனவாக்க வேண்டும். எதிர்காலம் மிக பிரகாசமாக மாணவர்களுக்கு காத்து இருக்கிறது.


Next Story