எல்லா இடங்களிலும் 'போலீஸ் அக்கா' திட்டம்


எல்லா இடங்களிலும் போலீஸ் அக்கா திட்டம்
x

நவீன தொழில்நுட்பங்களால் பல வசதிகள், நன்மைகள் மக்களுக்கு இருக்கின்றன. ஆனால், அதை கையில் வைத்துக்கொண்டு சமூகவிரோத சக்திகள் பல குற்றங்களை செய்துவருகிறது.

நவீன தொழில்நுட்பங்களால் பல வசதிகள், நன்மைகள் மக்களுக்கு இருக்கின்றன. ஆனால், அதை கையில் வைத்துக்கொண்டு சமூகவிரோத சக்திகள் பல குற்றங்களை செய்துவருகிறது. சமீபத்தில் சென்னை நெற்குன்றத்தில் உள்ள ஒரு இளம்பெண் தன் செல்போன் வாட்ஸ்-அப் செய்திகளை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது பெயர் இல்லாமல் ஒரு எண்ணில் இருந்து செய்தி வந்திருந்தது. யாராக இருக்கும் என்று குழம்பிய நிலையில் அதைப் பார்த்தவருக்கு பேரிடியாக ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. அவரது முகத்தை வைத்து நிர்வாண கோலத்தில் ஒரு படம் மார்பிங் செய்து அனுப்பப்பட்டிருந்தது. 'என்னை யாரென்று உனக்கு தெரியும், என்னோடு பேசு, இல்லையென்றால் உன் படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவேன்' என்று பயம் காட்டி செய்தி வந்திருந்தது.

உடனே, அந்த பெண் பயந்துபோய் அந்த எண்ணை பிளாக் செய்துவிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணின் தோழிகளுக்கு அந்த படம் அனுப்பப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தும் இன்றுவரை இந்த செயலை செய்த ஆசாமியை கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்த பெண் தைரியமாக பெற்றோரிடம் சொல்லி போலீசிலும் புகார் செய்தார். ஆனால், பல பெண்கள் இதுபோன்ற செய்திகள் வந்தால் யாரிடமும் சொல்லாமல், போலீசிலும் சொல்ல துணிவில்லாமல் தங்களுக்குள்ளேயே வைத்து மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் விபரீத முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். இதுபோன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் கல்லூரி பெண்களுக்கு உதவ கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன், 'போலீஸ் அக்கா' என்ற புதுமையான திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளார்.

37 பெண் போலீசாரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாளுவதற்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கவுன்சிலிங் அளிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பெண் போலீசார் போலீஸ் அக்கா என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் கோவை பகுதியில் உள்ள 60 கல்லூரிகளில் பணியாற்ற ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளுக்கு அடிக்கடி சென்று மாணவிகளுடன் சகஜமாக பழகி ஒரு நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த 37 போலீஸ் அக்காக்களின் செல்போன் எண்களும் கல்லூரி அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகளிடமும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கல்லூரிகளில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏதாவது மாணவிக்கு எந்த வகையிலாவது, எங்கிருந்தாவது பாதிப்பு ஏற்பட்டால் தன் கல்லூரியில் இருக்கும் போலீஸ் அக்காவிடம் நேரிலோ, செல்போனிலோ தெரிவிக்கலாம். இந்த போலீஸ் அக்கா உடனடியாக நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், அந்த பெண்ணுக்கு தைரியமூட்டும் வகையில் கவுன்சிலிங்கும் கொடுப்பார். கல்லூரி மாணவிகளிடம் இருந்து பெறும் தகவலை வைத்துக்கொண்டு ஈவ்டீசிங் உள்பட அனைத்து பாலியல் துன்புறுத்தல் குற்றங்களை தடுக்கவும், போதை மருந்துகள் விற்பனை நடக்காமல் இருக்கவும், நடவடிக்கை எடுப்பார்கள். இந்த போலீஸ் அக்கா திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக துணை கமிஷனர் சுஹாசினி நியமிக்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவிகளுக்கு இந்த போலீஸ் அக்கா திட்டம் கோவையில் நல்ல பலனை அளித்துள்ளது. பொதுவாக பெண்கள் தங்கள் பிரச்சினைகளை மற்றொரு பெண்ணிடம்தான் மனந்திறந்து பேசுவார்கள். அந்த வகையில், கோவை வழிகாட்டிய இந்த திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நிறைவேற்றப்பட்டால், கல்லூரி மாணவிகளுக்கு பேருதவியாக இருக்கும்.


Next Story